1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 29 ஜூலை 2014 (11:02 IST)

தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு ஆளுநர் வாழ்த்து, ரூ.50 லட்சம் பரிசு ஜெயலலிதா அறிவிப்பு

காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் பளு தூக்குதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்குத் தமிழக ஆளுநர் ரோசய்யா வாழ்த்து தெரிவித்துள்ளார் ரூ.50 லட்சம் பரிசுத் தொகையை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் பளு தூக்குதலில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

இது குறித்து ஆளுநர் ரோசய்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் சதீஷ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தீர்க்கமான செயல்பாடும், கடினமான உழைப்பும் அவருக்கு இந்த பதக்கத்தை பெற்று கொடுத்துள்ளது. வருங்காலத்திலும் இதுபோன்று பல வெற்றிகளை குவித்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்“ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சதீஷ்குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகையை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது, “ஸ்காட்லாந்தில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனை படைத்து தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமையைத் தேடித் தந்துள்ளீர்கள்.

அளப்பரிய இந்தச் சாதனையைச் செய்த தங்களுக்கு தமிழக மக்களின் சார்பில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் பங்கேற்ற முதல் சர்வதேசப் போட்டியிலேயே தங்கம் வென்று சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

காமென்வெல்த் போட்டிகளில் தங்கம் வெல்லும் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தேன். அந்த பரிசுத் தொகைக்கு தாங்கள் இப்போது தகுதி பெற்றுள்ளீர்கள்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்களுக்கும் உங்களது வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வருங்காலத்தில் தமிழகம் மேலும் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்“ என்று முதலமைச்சர் ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.