திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 23 பிப்ரவரி 2019 (10:34 IST)

உலகக்கோப்பையில் இந்தியா,பாகிஸ்தான் போட்டி நடைபெறாது – மத்திய அரசு சூசகப் பதில் !

உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று ஜெய்ஸ் இ முகமது ஏன்ற பயங்கரவாத அமைப்பால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 41 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தற்கொலைப் படைத் தீவிரவாதி அதில் அகமது 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார். தாக்குதல் நடத்திய பயங்கரவாதக் குழுவிற்கு பாகிஸ்தான் ஆதரவளித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த தாக்குதல் இப்போது கிரிக்கெட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குப் பின்னர் இனி இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பைலேட்ரல் சீரிஸ் போட்டிகள் நடக்க வாய்ப்பில்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதனால் மே மாதம் தொடங்கும் உலகக்கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலானப் போட்டியில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து பிசிசிஐ இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. பிசிசிஐ, தீவிரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானை உலகக்கோப்பைப் போட்டிகளில் இருந்து தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாட ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ உலகக்கோப்பைத் தொடர்பான விஷயத்தில் இந்திய அரசு எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக முதல் முறையாகக் கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய பாகிஸ்தானுக்கு இடையில் வர்த்தகம் மற்றும் கிரிக்கெட் என எந்தவிதமான நடவடிக்கைகளும் இனி வரும் காலங்களில் கிடையாது என தெரிவித்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை இந்தியா புறக்கணிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை இந்தியாவும் பாகிஸ்தானும் உலகக்கோப்பௌ போட்டியில் பைனலில் மோதும் சூழ்நிலை உருவாகும் போது இந்தியா, போட்டியைப் புறக்கணித்தால் கோப்பை பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.