வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 12 ஜனவரி 2019 (11:44 IST)

ஆஸ்திரேலியா அதிரடி; 289 ரன்கள் இலக்கு– துரத்திப் பிடிக்குமா கோஹ்லி அண்ட் கோ ?

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி இன்னிங்ஸ் முடிவில்  5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தியா அணி மூன்று மாத கிரிக்கெட் சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா சென்று மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறது. நடந்து முடிந்துள்ள இருபது ஓவர் போட்டித் தொடர் சமனிலும் டெஸ்ட் தொடரை இந்தியாவும் வென்றுள்ளது. இதையடுத்து 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது.

சிட்னியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸில் வென்ற ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. புவனேஷ்குமார் வீசிய மூன்றாவது ஓவரில் பிஞ்ச் க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார். அதையடுத்து மற்றொருத் தொடக்க ஆட்டக்காரரான அலெக்ஸ் கேரி குல்தீப் யாதவ் பந்தில் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜாவும் ஷான் மார்ஷும் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் 4 ஆவது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா இந்த ஜோடியைப் பிரித்தார். அரைசதம் அடித்த கவாஜா 59 ரன்களில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். அதையடுத்த சிறிது நேரத்தில் ஷான் மார்ஷ் 54 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் அவுட் ஆனார்.

அதன் பின்னார் ஹான்ஸ்கோம்ப் மற்றும் ஸ்டாய்னஸ் ஜோடி சேர்ந்து அதிரடியாக ரன்குவிப்பில் ஈடுபட்டனர். சிறப்பாக விளையாடிய ஹான்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்தார். கடைசி நேர அதிரடியாக ஸ்டாய்னஸ் 47 ரன்களும் மேக்ஸ்வெல் 5 பந்துகளில் 11 ரன்களும் சேர்த்தனர்.

இதனால் ஆட்டமுடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ஆஸி. 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய தரப்பில் புவனேஷ்குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களும் ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். வலுவான பேட்டிங்கைக் கொண்டுள்ள இந்திய அணி இந்த ஸ்கோரை எட்டிப்பிடிக்குமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.