1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வியாழன், 12 மே 2016 (11:04 IST)

நாங்க கொள்ளை அடிப்போம், நீங்க மட்டும் நேர்மையா இருக்கணும்

நாங்க கொள்ளை அடிப்போம், நீங்க மட்டும் நேர்மையா இருக்கணும்

மருது படத்தின் பிரஸ்மீட்டில், திருட்டு விசிடிக்கு எதிராக விஷால் தொடை தட்டியது விவாதப் பொருளாகியிருக்கிறது.


 


விஷாலின் பேச்சுக்கு நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் பதிலிடி கொடுத்துள்ளார். அவர் சொன்னதில் ஒரு விஷயம் முக்கியமானது. இதே விஷயத்தை தெறி படப்பிரச்சனையின் போது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வமும் முன் வைத்தார்.
 
அதாவது, மாஸ் ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் போது தயாரிப்பாளர்கள்தான் டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தி விற்கச் சொல்லி நிர்ப்பந்திக்கிறார்கள் என்று பன்னீர் செல்வமும், திருப்பூர் சுப்பிரமணியமும் கூறியுள்ளனர். 
 
விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது 50 ரூபாய் டிக்கெட் 500 ரூபாய்க்கு விற்கப்படும். இந்த கட்டண கொள்ளையில் பெரும் பகுதி தயாரிப்பாளர்களுக்கு சென்றுவிடும். சிறு தொகை திரையரங்கு உரிமையாளர்களுக்கு கிடைக்கும். இப்படி அதிக தொகை வைத்து விற்றால் மட்டுமே தயாரிப்பாளர்களால் போட்ட பணத்தை எடுக்க முடியும். முக்கியமாக, மாஸ் ஹீரோக்களுக்கு அளிக்கும் மாபெரும் சம்பளத்தை ஈடுசெய்ய முடியும்.

ரஜினி, அஜித், விஜய், சூர்யா போன்ற மாஸ் நடிகர்களின் படங்களின் பட்ஜெட்டில் முக்கால்வாசியை அவர்களின் சம்பளம் பிடித்துக் கொள்ளும். உதாரணமாக 50 கோடி ரூபாய் பட்ஜெட் என்றால் அதில் 25 முதல் 30 கோடிகள்வரை நடிகருக்கு போய்விடும். மீதியுள்ளதில்தான் மற்றவர்களுக்கு சம்பளம் தந்து படத்தையும் எடுக்க வேண்டும். ஆக, திரையரங்குகள் தொடர்ச்சியாக நடத்திவரும் கட்டண கொள்ளையில் பெரும்பகுதி மறைமுகமாக மாஸ் நடிகர்களுக்கே சென்றுவிடுகிறது. உங்கள் குடும்பத்தைப் பாருங்கள், கல்வி கற்றுக் கொள்ளுங்கள் என்றெல்லாம் கரிசனமாக பேசும் இந்த நடிகர்கள் கள்ளத்தனமாக ரசிகர்களின் பாக்கெட்டிலிருந்துதான் கொள்ளையடிக்கிறார்கள்.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்க......

இதன் காரணமாகத்தான் திருட்டு விசிடிக்கு எதிராக குரல் கொடுக்கும், பேரணி செல்லும் திரையுலகினர் திரையரங்குகள் நடத்தும் கட்டண கொள்ளையை எதிர்த்து குரல் கொடுப்பதில்லை. ஏன் என்றால், கட்டண கொள்ளையால் பயன்பெறுகிறவர்களில் அவர்களே முதலிடத்தில் இருக்கிறார்கள். இப்போது விஷால் குரல் கொடுத்துள்ளார், திருப்பூராரிடமிருந்து வாங்கி கட்டிக் கொண்டுள்ளார்.


 
 
திருட்டு விசிடியால்தான் தமிழ் சினிமா நசிந்தது, திருட்டு விசிடி மாபெரும் தவறு, அது மற்றவர்களின் உழைப்பை சுரண்டுவது என்றெல்லாம் வீர வசனம் பேசும் நடிகர்களால், திரையரங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகம் வசூலிப்பது தவறு, அப்படி அதிக கட்டணம் கொடுத்து என்னுடைய படத்தை பார்க்க வேண்டாம், அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு என்னுடைய படத்தை தர மாட்டேன் என்று சொல்ல முடியுமா?
 
நீதி, நியாயம் என்று திரையிலும் திரைக்கு வெளியேயும் பசப்பித் திரியும் எல்லா மாஸ் நடிகர்களையும் பார்த்து கேட்கிறோம். திரையரங்குகளின் கட்டண கொள்ளையைப் பற்றி பேச உங்களுக்கு திராணி இருக்கிறதா? தெம்பு உள்ளதா? தைரியம் இருக்கிறதா? ஓட்டுக்கு காசு தர முன்வருகிறவன் திருடன் என்று தைரியமாகச் சொன்ன முருகதாஸால், திரையரங்குகளின் கட்டண கொள்ளையை பற்றி பேச முடியுமா?
 
அட, வெண்திரை வீரர்களே... முதல்ல உங்க ஏரியாவுல தில்லா குரல் கொடுங்க. உங்க ஏரியாவில் உள்ள பிரச்சனையை தீர்க்கப் பாருங்க. அப்புறம் வந்து பொதுமக்களிடம் உங்கள் வீர வசனத்தையும், நியாயத்தையும் பேசுங்க. இல்லைன்னா அட்டகத்திகளுக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.