1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வெள்ளி, 14 ஆகஸ்ட் 2015 (17:41 IST)

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க - சந்தானம் பேச்சை குறைக்கணும், ராஜேஷ் சரக்கை குறைக்கணும்

நாலு பேரை சிரிக்க வைக்கிறதுன்னா எதுவுமே தப்பில்லை மச்சான் என்று நினைக்கிறவர், இயக்குனர் ராஜேஷ். அழகுராஜாவில் மனிதர் தடாலடியாக விழுந்தாலும், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்துக்கு திரையரங்கில் கூட்டம் அம்முகிறது என்றால், நாம் முதலில் சொன்ன அந்த ஒருவரிக்காகத்தான். நாலு பேரை சிரிக்க வைக்கிறதுன்னா எதுவுமே தப்பில்லை.
 

 

ராஜேஷுக்கு எடுக்க தெரிந்த ஓகே ஓகே ஒருவரிகதைதான் இந்தப் படமும். இரண்டு இணைபிரியா நண்பர்கள். அவர்களின் வாழ்க்கைக்குள் வரும் பெண்கள் இருவரின் நட்பையும் பிரிக்கப் பார்ப்பார்கள். ஆனால், முடியாது. இந்த கசாமுசா கலாட்டா கடைசியில் சுபத்தில் முடியும். இதேதான் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க.

கதைப்படி வாசுதான் சந்தானம். ஆர்யா சரவணன். டவுசர் காலத்துக்கு முன்பிருந்தே இணைபிரியாத நண்பர்கள். சரவணனின் அப்பா இறந்த பிறகு அவரது அம்மா (ரேணுகா) சரவணனை வாசுவின் வீட்டில் விட்டுவிட்டுதான் அலுவலகத்துக்கே செல்வார்.

சரக்கும் சைடிஷ்ஷுமாக இந்த நட்பு இளம் பருவத்திலும் தொடர்கிறது. வாசு தனது மொபைல் கடைக்கு வாசா (வாசு, சரவணன் பெயர்களின் முதலிரண்டு ஆங்கில எழுத்து) என பெயர் வைக்கும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் வாசு ஒரு பெண்ணை (பானு) திருமணம் செய்கிறார். வாசு, சரவணன் நட்பு பானுவுக்கு பிடிக்கவில்லை. எரியிற கொள்ளியில் எரிசாராயத்தை ஊற்றுகிற மாதிரி வாசு - பானு முதலிரவில் ஒரு விவகாரம் செய்துவிடுகிறார் சரவணன். சரவணனுடனான நட்பை கட் செய்தால் மட்டுமே கட்டில் என்று கண்டிஷன் போடுகிறார் பானு. நட்பை எப்போது துண்டிப்பது, பர்ஸ்ட் நைட்டை எப்போ கொண்டாடுவது என்று தவிக்கிறார் வாசு.

மேற்படி அனைத்துக் காட்சிகளிலும், தனது அப்பாவி முகத்தில் எந்த ரியாக்ஷனும் காட்டாமலே ஸ்கோர் செய்கிறார் சரவணன் என்கிற ஆர்யா. சந்தானம் என்ன முயன்றும் மென்று போட்ட சூயிங்கம் போலவே ஒட்டிக் கொண்டிருக்கிறது ஆர்யாவின் நட்பு. அவனுக்கென்று ஒரு பெண் அமைந்தால் நட்பு கட்டாகும், நமக்கும் பர்ஸ்ட் நைட் செட்டாகும் என்று பெண் தேட ஆரம்பிக்கிறார். அங்கு மாட்டுகிறார் தமன்னா.

ஆர்யா, தமன்னாவை சேர்த்து வைக்க மொக்கை பிளான்களாக சந்தானம் போட, ஒவ்வொன்றும் பல்பு வாங்குகிறது. கடைசியில் உண்ணாவிரதம், அசிஸ்டெண்ட் கமிஷனர் என்று படம் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் அடித்து முடியும் போது நாமும் அக்காடா என்று சாய்ந்துவிடுகிறோம்.
 
மேலே உள்ள கதையில், ஒவ்வொரு வரி முடிந்ததும் மறக்காமல், வாசுவும், சரவணனும் ஒண்ணா சரக்கடிச்சாங்க என்று சேர்த்துப் படிக்கவும். எழுதுற அளவுக்கா குடிக்கிறாங்க? கௌரவ வேடத்தில் வர்ற அசிஸ்டெண்ட் கமிஷனர் விஷாலையும் விடலையே. அவருக்கும் ஊத்திக் கொடுத்தப் பிறகுதான் அடங்குது நம்ம இயக்குனரோட குடி வெறி.
 

 

டாஸ்மாக்கிலேயே குடியிருக்கிற மாதிரி ஃபீல் வருதா, படம் நெடுக கொண்டாடி தீர்த்திட்டாங்க இளம் ரசிகர்கள். சந்தானத்தின் ஒன்லைனுக்கு கிடைக்கிற அப்ளாஸ் அளவுக்கு, அட இந்தாளால ஒரே ரோதனையாப் போச்சு என்று சலிக்கவும் செய்கிறார்கள். ஆர்யா நடிக்கலைன்னாலும் நம்ம ஆளு என்கிற அட்டாச்மெண்ட் எப்படியே ரசிகர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.
 
ஒட்டு மொத்தமாக ரசிகர்களை கவர்ந்தவர் தமன்னா. சுவாமிநாதனின் வீட்டில் அவர் போடும் அலப்பறைக்கு தியேட்டர் அதிர்கிறது. அவரது தோழி வித்யுராமனும் அதிரடிக்கிறார். பாடல்களை வித்தியாசமாக படமாக்க ராஜேஷ் ரொம்ப மெனக்கெட்டிருக்கிறார். அதேமாதிரி ட்விஸ்டே இல்லையே என்று சொல்லக் கூடாது என்பதற்காக இரண்டாம் பகுதி திரைக்கதையில் தேவைக்கு மேல் ட்விஸ்ட்கள். (வர)லட்சுமி என்ற பெயரை வைத்து கிடைத்த கேப்பில் விஷாலுக்கும் கிடா வெட்டியிருக்கிறார்கள்.
 
இவ்ளோ இருந்தும், மச்சான் பாஸ் என்கிற பாஸ்கரன் மாதிரி இல்லையில்ல என்று தியேட்டரைவிட்டு வெளியேறுகிறவர்களிடம் ஒரு வெற்றிடம். ரசிகர்களின் ரியாக்ஷனை குலுக்கி எடுத்தால் இரண்டு விஷயங்கள் தெரிகிறது.
 
சந்தானம் பேச்சை குறைக்கணும், ராஜேஷ் சரக்கை குறைக்கணும்.