வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : திங்கள், 13 ஜூலை 2015 (10:17 IST)

சினி பாப்கார்ன் - வாசுவும் சரவணனும் ஒண்ணா குடிச்சவங்க

வாசுவும் சரவணனும் ஒண்ணா குடிச்சவங்க
 
ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம் நடித்திருக்கும், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தின் டீஸர் வெளியாகியிருக்கிறது. இந்நேரம் தமிழகத்தில் உள்ள அனைவரும் அதனை பார்த்திருப்பார்கள். டீஸர் முடிவில் பாடல் வருகிறது. 
 
வாசுவும் சரவணனும் 
ஒண்ணா படிச்சவங்க, 
ஊரில் உள்ள பார்களில் எல்லாம் 
சேர்ந்தே குடிச்சவங்க.
குடித்தால் போதை வருகிறதோ இல்லையோ. டாஸ்மாக்கை காண்பித்தால் திரையரங்கில் கைத்தட்டல் காதை பிளக்கிறது. பொண்ணாலதான் குடிக்க வந்தேன் என்று தத்துபித்து வசனம் வைத்தால் விசிலடித்தே ஓய்ந்து போகிறார்கள். கைத்தட்டல் கிடைக்கவும், படத்தை ஓட வைக்கவும் இயக்குனர்கள் கண்டு பிடித்த குறுக்கு வழிதான் குடி சம்பந்தமான காட்சிகள். 
 
ஆண், பெண் பேதமின்றி மாணவர்களே குடிக்கு அடிமையாகும் காலத்தில் நாம் இருக்கிறோம். ராஜேஷை போன்றவர்கள் அதனை அறுவடை செய்ய ஆவேசத்துடன் காத்திருக்கிறார்கள். தெருவுக்கு தெரு திறந்து வைத்திருக்கும் மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு முன்வர வேண்டும். குறைந்தபட்சம் அதன் எண்ணிக்கையாவது குறைக்க வேண்டும்.
 
குடிக்கு எதிரான மனோநிலையை வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க டீஸர் தீவிரப்படுத்தியிருக்கிறது. எந்த ஒரு விஷயமும் அதன் எல்லையை தாண்டும் போதுதான் கண்டிக்கப்படும், தடுக்கப்படும். இந்த டீஸரின் மூலம் எல்லையை கடந்திருக்கிறார் ராஜேஷ். அதற்கான எதிர்விளைவை தணிக்கையின் போது அவர் கண்டிப்பாக எதிர்கொண்டே ஆக வேண்டும்.

பாகுபலி - இருவேறு விமர்சனங்கள்
 
ஒரு படம் வெற்றி பெறும்போது விமர்சனத்துக்குள்ளாவது இயற்கை. பாகுபலி உலகமெங்கும் வசூலை வாரிக்குவிக்கிறது. இந்தியாவின் பெருமை என்று கொண்டாடுகின்றனர். ஹாலிவுட்டின் கிளாடியேட்டர், ட்ராய் படங்களுக்கு இந்தியாவின் பதிலடி என்று பரவசப்படுகின்றனர். 
பாகுபலி பிரமாண்டம்தான், கடுமையான உழைப்புதான், திறமையான நடிப்புதான். ஆனால், சிறந்த படமா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். 
 
ராஜமௌலியின் படங்களின் ஆதார அம்சமாக இருப்பது பழி வாங்குதல். கொடூரமான வில்லன்களால் மக்களும், நாயகனும், அவனது குடும்பமும் பாதிக்கப்படும். இப்படியொரு அரக்கனா, அவனை அழிக்க ஆளே இல்லையா என்று பார்வையாளர்கள் ஆவேசப்படும்போது, நாயகன் தோன்றி எதிரிகளை பந்தாடுவான். அவரது எல்லா கதைகளும் இந்த ஆதாரமான சரடில்தான் கோர்க்கப்பட்டிருக்கும். இதில் நுட்பமான உணர்வுகளுக்கு பெரும்பாலும் இடமிருப்பதில்லை. 
 
பாகுபலியை கிளாடியேட்டர், ட்ராய் படங்களுடன் ஒப்பிடுவது குறித்து எழுத்தாளர் சாரு நிவேதிதா பிரபல நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். மிக முக்கியமான கட்டுரை. பாகுபலி எந்த இடத்தில் தனது முழுமையை இழக்கிறது என்பதை கோடிட்டு காட்டியுள்ளார். 
 
படம் பார்த்த பிரமிப்பில், எவண்டா அது பாகுபலியை விமர்சிப்பது என்று கோடாலியை தூக்காமல் நிதானமாக வாசித்தால் நிறை குறைகளை கண்டறிய அந்தக் கட்டுரை மிகவும் உதவும்.

மாரி... ரொம்ப ஸாரி
 
நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. சினிமாவின் பாடல் காட்சி, காமெடிக் காட்சி, ட்ரெய்லர், நட்சத்திரங்களின் பேட்டிகள் என்று சினிமாவை வைத்து பிழைக்கும் தொலைக்காட்சிகள் கொஞ்ச நாளாக சினிமாவுக்கு தண்ணி காட்டி வருகின்றன. முன்னணி நடிகர்களின் படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையையும் இவர்கள் வாங்குவதில்லை. அப்படியே வாங்கினாலும், அதில் பாதி தொகையை விளம்பரத்துக்கு என பிடித்துக் கொள்கிறார்கள்.
தனுஷின் மாரி படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும் எப்படி ரசிகர்களை கவர்ந்தன. அந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கவே சேனல்கள் முன்வரவில்லை எனில் இரண்டாம்கட்ட, அறிமுக நடிகர்களின் படங்களின் கதி என்ன என்பதை யூகித்துக் கொள்ளுங்கள். 
 
உங்க படத்தின் ட்ரெய்லர் வேண்டும், பாடல்கள், காமெடிக் காட்சிகள் எல்லாம் வேண்டும். அதை வைத்து நாங்க சம்பாதிப்போம். ஆனா, தொலைக்காட்சி உரிமை மட்டும் வாங்க மாட்டோம் என்றால் எப்படி? படத்தை வாங்குகிறவர்களுக்கே ட்ரெய்லர், பாடல் காட்சி என்று ஒரு கிடுக்கிப்பிடியை தயாரிப்பாளர்கள் சங்கம் போட்டிருக்கிறது.
 
மாரியின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை யாரும் வாங்க முன் வராததால் ஒன்பது கோடி கொடுத்து தனுஷே அதனை வாங்கி வைத்துள்ளார். சரி, தனுஷ் அதை வைத்து என்ன செய்யப் போகிறார். அவருக்கு சேனல் கிடையாதே.
 
படம் வெளியாகி ஹிட்டானால், வேண்டாம் என்ற இதே சேனல்காரர்கள் ஒளிபரப்பு உரிமை கேட்டு காலிங் பெல்லை அடிக்கத்தான் போகிறார்கள். அப்போ வச்சிக்கிறேன் கச்சேரியை என்று கருவிக் கொண்டேதான் ஒன்பது கோடி தந்திருக்கிறார். 
 
மாரி பேக் ஃபயரானால் ஒன்பது கோடி போச்சு.