1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வியாழன், 12 மே 2016 (10:48 IST)

விஷால் பேச்சுக்கு திருப்பூர் சுப்பிரமணியம் பதிலடி

விஷால் பேச்சுக்கு திருப்பூர் சுப்பிரமணியம் பதிலடி

மருது படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷால், திருட்டு விசிடி தமிழகத்திலுள்ள திரையரங்குகளிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.

மருது படத்தின் திருட்டு விசிடி வெளியானால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.


 
 
விஷாலின் பேச்சுக்கு நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் மணியன் பதிலடி கொடுத்துள்ளார். வாட்ஸ் அப்பில் இது குறித்து விஷாலிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
 
"திருட்டு விசிடி பற்றி விஷால் பேசியதைக் கேட்டேன். திருட்டு விசிடி என்னமோ தமிழ்நாடு திரையரங்குகளில் எடுப்பது போல மட்டும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி கிடையாது. தொடர்ச்சியாக 200 படங்கள் வெளியாகிறது என்றால், 5 முதல் 10 படங்கள் தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மூலையில் திரையரங்கில் இருந்து எடுக்கப்படலாம். அது கூட அந்த திரையரங்க முதலாளியால் கிடையாது.
 
சின்ன திரையரங்கில் ஒரு நாளுக்கு வருமானம் ரூ.2000 கூட கிடையாது. ஆகையால் அந்த திரையரங்கில் 3 அல்லது 4 ஆட்கள் தான் வேலை செய்கிறார்கள். அவர்கள் 2 மணிக்கு வேலை முடிந்து சென்றவுடன் வாட்ச்மேன் அல்லது ஆப்ரேட்டர் படுத்து தூங்குவார். அவர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு தான் இந்த வேலை நடக்கிறது. அது கூட ஏதோ ஒரு சின்ன திரையரங்கில் தான் நடக்கிறது. அதைக் கூட தடுப்பதற்கு அதிகாலை 2 மணி முதல் 9 மணி வரை க்யூப் லாக் பண்ணி வைப்பதற்கு க்யூப்பில் கேட்டிருக்கிறோம். அதற்கான வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு திரையரங்குகள் அனைத்துமே இதற்கு தயாராக இருக்கிறோம். சின்ன திரையரங்கில் நடப்பதை நீங்கள் தமிழ்நாடு திரையரங்குகள் அனைத்திலும் நடப்பது போல பேசுகிறீர்கள். 2 முதல் 3 சதவீத ஆட்கள் தப்பானவர்களாக இருக்கலாம். அவர்களை தண்டிப்பதற்கு நாங்களே தயாராக இருக்கிறோம்.
 
வரிசையாக 200 படங்கள் வெளியாகிறது என்றால் ஒரு படத்திற்கு 54 ஆயிரம் என்றால் மொத்தம் 1கோடி ஆகிறது. அனைத்து சங்கங்களும் ஆளுக்கு 20 லட்சம் போடலாம். எந்த படத்தின் விசிடி வந்தாலும் நாம் போய் சோதனை செய்யலாம். அந்த 200 படங்களில் 190 படங்கள் வரை வெளிநாட்டில் இருந்து தான் வந்திருக்கும். 
 
தமிழ்நாடு திரையரங்குகள் என்று மட்டும் தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் வெளிநாட்டில் இருந்து தான் முக்கியமான விசிடி வருகிறது. நீங்கள் வெளிநாட்டு உரிமை விற்கும் போது மொத்த சொத்தையும் எழுதிக் கொடுத்துவிடுகிறீர்கள்.
 
ஒவ்வொரு நாயகனும் வெளிநாட்டு உரிமையை வாங்கி 2 வாரம் கழித்து வெளியிடலாமே. தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கும் போது வெளிநாட்டு உரிமைக்கு ஒரு ஒப்பந்தம் போட்டு வாங்கிக் கொள்ளுங்கள். தற்போது முழுக்க டிஜிட்டல் மயம் என்பதால் எங்கு எடுத்தாலும் கண்டுபிடிக்க முடியும். அப்படி கண்டுபிடிக்க திரையரங்கிற்கு தயாரிப்பாளர், விநியோகஸ்தர் இணைந்து 6 மாதத்திற்கு படம் கொடுக்க வேண்டாம் என சொல்வோம். 2வது அந்த திரையரங்கம் பிடிபட்டால் அந்த திரையரங்கிற்கு படம் கொடுப்பதையே நிறுத்துவோம். 
 
நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம். நாங்கள் அப்படியெல்லாம் தொழில் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை.
 
உங்கள் படம் வரும் போது மட்டுமே பேசுகிறீர்கள். முக்கியமான வீடியோ வெளிநாட்டில் இருந்து வருகிறது. 
 
வெளிநாட்டில் இருந்து வருகிறது என்பதற்கு என்னால் ஆதாரம் காட்ட முடியும். சின்ன திரையரங்குகளுக்கு என்ன வருமானம் பண்ணிக் கொடுக்கிறீர்கள். பெரிய நாயகர்கள் படம் வந்தால் அதிகமான விலை கேட்கிறீர்கள். நீலகிரி மாவட்டத்தில் 38 திரையரங்குகள் இருந்தது, தற்போது ஊட்டியில் வெறும் 2 திரையரங்குகள் தான் இருக்கிறது தெரியுமா ஒரு மாவட்டத்தில் இருக்கிற 38 திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கிறது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் பெரிய நடிகர்களின் படம் போடும் போது ரூ.300க்கு டிக்கெட் விற்பனை செய்யுங்கள் என நீங்களே சொல்கிறீர்கள்.
 
சென்னை திரையரங்குகளில் எத்தனை திரையரங்குகளில் நீங்கள் முன்பணம் வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதே போல கோயம்புத்தூர், கடலூர் உள்ளிட்டவற்றில் யாராவது சொன்னால் எங்களது வருமானமே போச்சு என்று சொல்கிறீர்கள். மல்டிபிளக்ஸ் திரையரங்குகிற்கு மட்டும் 50%, 40%, 30% என்பார்கள். எங்கே போனீர்கள் நடிகர்கள் எல்லாம்டூ சிறுதிரையங்கம் என்றால் 80% கொடு, 5 லட்சம் அட்வான்ஸ் கொடு என்று கேட்டு அவனைப் போட்டு சாகடிப்பீர்கள். மரியாதை வேண்டும் என்பதற்காக பலர் திரையரங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 
 
அதற்கெல்லாம் நடிகர் சங்கத்தில் ஒரு நடவடிக்கை கூட எடுத்து விடாதீர்கள். டிக்கெட் ரூ.100க்கு மேல் விற்கக் கூடாது, விற்றால் ரசிகர்கள் எங்களிடம் சொல்லுங்கள் என நடிகர் சங்கம் சொல்ல வேண்டியது தானே.
 
கடந்த வாரம் டெல்லி கணேஷ் ஒரு ஆடியோ பேசியிருந்தார். முதலில் ஏன் உங்கள் பையனை நேரடி நாயகனாக்கினீர்கள். ரஜினி சார், கமல் சார் போல சிறு சிறு வேடங்களில் நடித்து நாயகனாக்கி இருக்கலாம். 
 
கொஞ்சம் கொஞ்சமாக முன்னிறுத்தி பண்ணலாம். எடுத்தவுடனே விஜய் மாதிரி நேரடி நாயகன் என்று வந்துவிடுகிறீர்கள். விஜய்யை நாயகனாக்க அவங்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா? கிட்டதட்ட 8 முதல் 10 படங்கள் சொந்த காசு போட்டு பண்ணினார். இயக்குநர்கள், நடிகர்கள் அவர்களின் மகன்கள் அனைவருமே நேராக நாயகன் தான் என்கிறீர்கள். படம் நன்றாக இருந்தால் ஓட்டுவதற்கு அனைவருமே தயாராக இருக்கிறார்கள்.
 
எந்த திரையரங்க உரிமையாளர் ஓடுகிற படத்துக்கு திரையரங்கம் தரமாட்டேன் என்று சொல்லுவார். மக்கள் சிறிய படங்களைப் பார்க்க வருவதில்லை. அனைத்து நடிகர்களும் தான் வரவிடாமல் பண்ணிவிட்டீர்கள். ஏனென்றால் ஒரு பெரிய படத்திலேயே அவன் பையில் இருக்கும் மொத்த காசையும் பிடுங்கிவிடுகிறீர்கள். பின்பு எப்படி சிறிய படத்திற்கு வருவான்.
மேலும் அடுத்த பக்கம் பார்க்க.....

அரசாங்கத்திடம் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்யுங்கள். அனைத்து ஏரியாக்களுக்கும் சதவீத அடிப்படையில் படங்கள் தருகிறோம் என்று சொல்லுங்களேன். கார்ப்பரெட் கம்பெனிகளுக்கு 50% கொடுப்பவர்கள் சிறு திரையரங்குகளுக்கும் கொடுங்கள். அந்த சிறு திரையரங்கில் கண்விழித்துப் படம் ஓடியதால் இன்று சொகுசாக வாழ்கிறீர்கள். யாரோ 2 திரையரங்க உரிமையாளர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த திரையரங்க உரிமையாளர்களும் ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லாதீர்கள்.


 
 
நடிகர்களுக்கு ரூ. 5 கோடி, 10 கோடி, 30 கோடி, 40 கோடி என்று சம்பளம் வேண்டாம். லாபம் பொறுத்து சம்பளம் வாங்கலாம் என்று நடிகர் சங்கத்தில் இருந்து அறிவிக்க வேண்டியதானே. அதை விடுத்து ரூ.20 கோடி, 30 கோடி கொடு என்று தயாரிப்பாளரை நச்சரிக்க வேண்டியது ஏன்? மொத்தமாகக் கொடு, படப்பிடிப்பில் கேரவன் கொடு என்று கேட்கிறீர்கள். ஏன் வெயிலில் நின்றால் கறுத்து போய்விடுவீர்களா?
 
நாங்களும் வெயிலில் நின்று தான் தொழில் பண்ணுகிறோம். ஒரு படத்துக்கு சக்சஸ் மீட் என்று தயாரிப்பாளர் பணத்தில் ரூ.10 லட்சம், 20 லட்சம் என செலவு பண்ணுகிறீர்கள். பிச்சைக்காரன் படத்துக்குத் தான் சக்சஸ் மீட் வைக்க வேண்டும். ஏனென்றால் வாங்கியதை விட 3 மடங்கு லாபம் கொடுத்தது.
 
எதற்கு எடுத்தாலும் விநியோகஸ்தர் மீதும் திரையரங்க உரிமையாளர் மீதும் குறை சொல்லாதீர்கள். வெளிநாட்டில் பட வெளியீட்டை நிறுத்துங்கள். தமிழ்நாட்டில் எந்த திரையரங்கில் இருந்து திருட்டி விசிடி வருகிறது என்று நாங்களும் பார்க்கிறோம். எங்களுக்கு திருட்டி விசிடிக்கு துணை போகும் திரையரங்கம் தொழில் பண்ண வேண்டும் என்ற அவசியமில்லை. எதற்கெடுத்தாலும் திருட்டு விசிடிக்கு தமிழ்நாடு திரையரங்குகள் துணை போகிறது என்று சொல்வது வருத்தமாக இருக்கிறது.
 
இப்போது டிவி உரிமை விற்பதில்லை. அதே போல வெளிநாட்டு உரிமையை விற்காமல் ஒரு 2 வாரங்கள் கழித்து விற்கலாமே. விற்றுப் பாருங்கள் எப்படி திருட்டு விசிடி வருகிறது என்று பார்க்கலாம்" என்று  திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ளார்.