1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Modified: வியாழன், 11 டிசம்பர் 2014 (09:44 IST)

கூலித் தொழிலாளியின் மகளை மருமகளாக்கிய வடிவேலு

வடிவேலு தனது மகன் சுப்ரமணியின் திருமணத்தை நண்பர்கள், திரையுலகினர் யாருக்கும் தெரிவிக்காமல் நடத்தி முடித்துள்ளார். திரையுலகை புறக்கணித்துவிட்டார், நண்பர்களைகூடவா அழைக்கக் கூடாது என்று இதையொட்டி நிறைய விமர்சனங்கள்.
 
வடிவேலுவின் நடவடிக்கைகள் திரையுலகில் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு வெற்றியை தந்த இயக்குனர்களையும் மதிப்பதில்லை என்பது அதில் முக்கியமானது. வடிவேலுவின் திரைவாழ்க்கையில் அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றவை சுந்தர் சி. யின் படங்கள். வின்னர், தலைநகரம், கிரி போன்ற படங்கள் வடிவேலுவின் நகைச்சுவையை அடுத்த தளத்துக்கு கொண்டு சென்றவை. 
 
தலைநகரம் படத்துக்குப் பிறகு சுந்தர் சி. நடித்த படத்தில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய சென்ற போது சுந்தர் சி. யின் பகுதியை குறைத்து தனக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று வற்புறுத்தினார். அதற்கு சுந்தர் சி. மறுத்ததால் அதன் பிறகு அவரது படங்களில் வடிவேலு நடிக்கவில்லை. சுந்தர் சி. சமாதானத்துக்கு பலமுறை முயன்றார். குஷ்புவும். ஆனால் வடிவேலு இறங்கி வரவில்லை. இதேபோல் பலர், பல நிகழ்வுகள்.
 
இம்சை அரசனின் வெற்றி மட்டுமே இப்போது வடிவேலின் மனதில் நிறைந்திருக்கிறது. இந்திரலோகத்தில் நா.அழகப்பன், தெனாலிராமன் படங்களின் தோல்விக்குப் பிறகும் அவர் எதையும் உணர்ந்ததாக தெரியவில்லை. நடித்தால் ஹீரோ என்ற புளியமரத்திலிருந்து அவர் இறங்கி வருவதாக இல்லை.
 
திரைத்துறையில் அவரது ஈகோ நாம் அறிந்ததுதான். ஆனால் சொந்த வாழ்க்கையில் குறிப்பாக மகன் திருமண விஷயத்தில் நாம் பார்ப்பது வேறொரு வடிவேலுவை.
 
மதுரைக்கு அருகிலுள்ள சிற்றூரிலிருந்து நடிக்க வந்தவர் வடிவேலு. சாப்பாட்டுக்கே கஷ்டம் என்ற நிலை. அதிலிருந்துதான் படிப்படியாக உயர்ந்து இன்று இந்த நிலையை எட்டியிருக்கிறார். சென்னையில் அவருக்கு சொந்தமான வீடுகள், கட்டங்கள், வணிக நிறுவனங்களிலிருந்து வாடகை வசூலிப்பதற்காகவே ஒரு குட்டி அலுவலகம் இயங்கி வருகிறது. அந்த வாடகையே மாதம் கோடியை தொடும். அப்படிப்பட்டவர் தனது ஒரே மகனுக்கு மணமகளாக தேர்வு செய்தது ஒரு கூலித் தொழிலாளியின் மகளை.
 
வடிவேலுவின் மகன் சுப்ரமணி திருமணம் செய்திருக்கும் புவனேஸ்வரி சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர். அவரது தந்தை பந்தல் அமைக்கும் வேலை செய்யும் கூலித் தொழிலாளி. கூரை வேய்ந்த வீட்டில்தான் வாசம். தன்னுடைய மருமகள் ஒரு கூலித் தொழிலாளியின் மகளாக இருக்க வேண்டும், கூரை வீட்டில் வசிப்பவரையே மருமகளாக்குவேன் என்று கூறி அப்படியே பெண் பார்த்திருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். வரதட்சணை என்று பைசா வாங்கவில்லை. திருமண செலவு முழுவதும் வடிவேலுடையது. பெண்ணை மட்டுமே அனுப்பி வைத்திருக்கிறார்கள் மணமகள் வீட்டார்.
 
வடிவேலு திரைத்துறையில் ஜம்பம் காண்பிப்பவராக இருந்தாலும் மகனின் திருமண விஷயத்தில் தானொரு ஜாம்பவான் என்பதை நிரூபித்திருக்கிறார்.
 
மனதார வாழ்த்துவோம்.