வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 24 மே 2015 (18:32 IST)

குடிக்கிற காட்சியில் நடிக்க மாட்டேன் - உதயநிதிக்கு ஒரு நினைவூட்டல்

"நடிகர்கள் செய்வதை அப்படியே ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள். மேலும் நான் பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்தவன். ஆகையால் சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருக்கக் கூடாது.
 
எனவே இனி என்னை வைத்து படம் இயக்கும் இயக்குநர்களிடம் இனிமேல் மது அருந்துவது போன்ற காட்சியில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்பதை தெரிவித்துள்ளேன். அதன்படி இனி நான் நடிக்கும் படங்களில் மது அருந்தும் காட்சிகள் இருக்காது."
 

 
2014 பிப்ரவரி 14, இது கதிர்வேலன் காதல் வெளியான நேரத்தில் உதயநிதி உதிர்த்த வார்த்தைகள் இவை. அவரது இந்த சபதத்தை முன்வைத்து, 2014 மார்ச்சில், குடிக்கிற காட்சியில் நடிக்க மாட்டேன் - நடிகர்களின் நாய்ஸ் பொல்யூஷன் என்ற கட்டுரையை வெளியிட்டோம். இது அதுபற்றிய சின்ன நினைவூட்டல்.
 
நடிகர்கள் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப உதிர்க்கும் சவடால்களையும், விளம்பரத்துக்காக செய்யும் உதிரி நற்பணிகளையும் வைத்து அவர்களைச் சுற்றி பிரமாண்ட நாயக பிம்பத்தை உருவாக்குவதை தமிழகம் ஒரு கடமையாகவே செய்து வருகிறது. இந்த நாயக பிம்பத்தின் சுயரூபத்தை எழுத முற்படும் போதெல்லாம் எழுதுகிறவனின் மேல் எறியப்படும் முதல் கல் ரசிகர்களுடையதாகவே இருக்கும். ஆனாலும், நடிகர்கள், ரசிகர்களின் செலக்டிவ் அம்னீஷியாவை அடிக்கடி கலைக்க வேண்டியது தொழில் தர்மம்.
 
இது கதிர்வேலன் காதல் படத்தில் உதயநிதி மது அருந்தும் காட்சிகள் இல்லாததால், மேலே சொன்ன வீர வசனத்தை அவர் உதிர்த்தார். இது எத்தனை அபத்தமானது என்பதை நமது கட்டுரையில் தெளிவுப்படுத்தியிருந்தோம். இப்போதைய விஷயம் அதுவல்ல. உதயநிதி தனது குடும்பப் பாரம்பரிய பெருமையை அடுத்தப் படத்திலேயே மீறியிருக்கிறார்.
 
இது கதிர்வேலன் காதலுக்குப் பிறகு வெளியானது, நண்பேன்டா. இந்தப் படத்தில் மது அருந்தும் காட்சிகள் தாராளமாக வருகிறது. அப்படியானால் சபதம்? குடும்பப் பாரம்பரியம்? அதெல்லாம் சும்மா பேச்சுக்கு. நடிகர்களின் நியாயங்களும், போதைனைகளும் எத்தனை சந்தர்ப்பவாதமானவை என்பதற்கு இது சின்ன எடுத்துக்காட்டு. குடிக்கிற காட்சியில் நடிக்க மாட்டேன் என்று உதயநிதி சொன்ன போது, அவரை பாராட்டி பதிவெழுதியவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்? 
 
நடிகர்கள் சொல்லும் நியாயங்கள் அவர்கள் விடும் ஏப்பங்களைவிட மலிவானவை. அவற்றிற்கு மரியாதை தந்து பொருட்படுத்துகிறவர்கள் ஏமாளிகள். இதனை கன்னத்தில் அறைந்து சொல்லியிருக்கிறார் உதயநிதி. தாங்க்ஸ் பாஸ்.