வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: புதன், 5 அக்டோபர் 2016 (10:05 IST)

தமிழ் சினிமாவின் கடந்தவார வசூல் ஒரு பார்வை

தமிழ் சினிமாவின் கடந்தவார வசூல் ஒரு பார்வை

செப்டம்பர் மாதம் தமிழ் சினிமாவுக்கு நல்லபடியாக அமைந்தது. கிடாரி, தொடரி படங்கள் சுமாராக வசூலித்துள்ளன. இந்தப் படங்களால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிக நஷ்டமில்லை. பல இடங்களில் லாபம் கிடைத்துள்ளது.

 
 
இருமுகன், ஆண்டவன் கட்டளை படங்கள் அனைத்துத் தரப்பினருக்கும் லாபத்தை சம்பாதித்து தந்துள்ளன. அதிலும், ஆண்டவன் கட்டளையின் வசூல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பட்ஜெட்டை ஒப்பிட்டால் தொடரி, இருமுகனைவிட ஆண்டவன் கட்டளையின் பட்ஜெட் பல மடங்கு குறைவு. சின்ன பட்ஜெட் பெத்த லாபம்.
 
சென்ற வார இறுதியில் ஹாலிவுட் படங்கள் எதுவும் சென்னை பாக்ஸ் ஆபிஸில் சோபிக்கவில்லை. நானியின் தெலுங்குப் படம் மஜ்னு கடந்தவார இறுதியில் 1.42 லட்சங்களை வசூலித்துள்ளது. கடந்த ஞாயிறுவரை இந்தப் படத்தின் வசூல், 19.45 லட்சங்கள். மற்ற தெலுங்கு நாயகர்களின் படங்களுடன் ஒப்பிட்டால் இது குறைவு.
 
அமிதாப்பச்சன், தாப்ஸி நடித்துள்ள பிங்க் இந்தியாவெங்கும் சக்கைப்போடு போடுகிறது. சென்ற வார இறுதியில் இந்த இந்திப் படம் 9.32 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் இதன் வசூல், 77 லட்சங்கள்.
 
ராம் நாயகனாக நடித்துள்ள ஹைப்பர் படம் சென்ற வாரம் வெளியானது. தெலுங்கு நடிகர்களுக்கு - அவர்கள் மாஸ் ஹீரோக்களாக இல்லாதபட்சத்திலும் -  சென்னையில் சின்னதாக மார்க்கெட் உள்ளதை இந்தப் படம் நிரூபித்துள்ளது. சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 9.34 லட்சங்களை வசப்படுத்தியுள்ளது.
 
விக்ரமுக்கு இருமுகன் ஒருவகையில் அதிர்ஷ்ட தேவதை. விமர்சகர்களும், ரசிகர்களும் ஒருசேர கழுவி ஊற்றிய படம், போட்டிக்கு வேறு படங்கள் இல்லாததால் வெற்றி பெற்றது. சென்னையில் கடந்தவார இறுதியில், 10.09 லட்சங்களை தனதாக்கிய இப்படம் இதுவரை 5.91 கோடிகளை சென்னையில் வசூலித்துள்ளது.
 
தனுஷின் தொடரி இரண்டாவது வாரத்திலேயே மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. முதல்வார இறுதியில் ஒரு கோடிக்கு மேல் வசூலித்த இந்தப் படம், கடந்தவார இறுதியில் 43.75 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. கடந்த ஞாயிறுவரை சென்னையில் தொடரியின் வசூல் 2.95 கோடிகள்.
 
அதேநேரம் ஆண்டவன் கட்டளை தனது முதல்வார வசூலை (68 லட்சங்கள்) பெருமளவு இழக்கவில்லை. கடந்த வாரம் அப்படத்தின் வசூல் 63.15 லட்சங்கள். சென்னையில் கடந்த ஞாயிறுவரை இதன் வசூல் 1.89 கோடி.
 
தமிழ்ப் படங்களையெல்லாம் பின்னுக்கு தள்ளி இந்த வாரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது, எம்எஸ் தோனி - தி அன் டோல்ட் ஸ்டோரி. சென்ற வாரம் வெளியான இந்தப் படம், முதல் மூன்று தினங்களில் 94.32 லட்சங்களை வசூலித்து சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.