1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : புதன், 18 பிப்ரவரி 2015 (10:54 IST)

சினி பாப்கார்ன் - ஏன்? எதற்கு? எப்படி?

ஏன் சுசீந்திரன் அந்தப் படத்தை எடுக்கலை?
 
சுசீந்திரன் விஷ்ணுவை வைத்து வீர தீர சூரன் என்ற படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார். படப்பிடிப்புக்கான ஆரம்ப வேலையும் நடந்த நிலையில் படம் எப்போதைக்குமாக கைவிடப்பட்டது.
ஏன்?
 
சண்டை என்றால் பயப்படுகிற போலீஸ்காரரை மையப்படுத்தி வீர தீர சூரன் படத்தை எடுப்பதாக இருந்தார் சுசீந்திரன். அந்த நேரத்தில்தான் பாண்டிய நாடு படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. கதையை மெருகேற்றும்விதமாக விஷாலின் கதாபாத்திரத்துக்கு வீர தீர சூரன் நாயகனின் குணத்தை தந்தார். அதாவது அடிதடியைப் பார்த்து பயப்படும் நாயகன். வீர தீர சூரன் படத்தின் மையமே பயந்தாங்கொள்ளியான நாயகன்தான். அதனை பாண்டிய நாடு ஹீரோவுக்கு வைத்ததால் வீர தீர சூரனை நிரந்தரமாக அவர் கைவிட வேண்டி வந்தது.

எதற்காக இப்படியொரு போஸ்டரை வெளியிட்டார்கள்?
 
லிங்கா படத்துக்கு நஷ்டஈடு கேட்கும் சிங்காரவேலன் கோஷ்டி, ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதையும், ரஜினி, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று முத்து படத்தின் போது சொன்னதையும் மிங்கிள் செய்து ஒரு அம்மா தாயே போஸ்டரை வெளியிட்டுள்ளது. 
எதற்காக இந்த நேரத்தில் இப்படியொரு போஸ்டர்?
 
லிங்கா படத்தின் நஷ்டத்துக்காக இவர்கள் போராடுவது போல் தெரியவில்லை. அதிலும் குறிப்பாக சிங்காரவேலனின் செயல்பாடுகள் லோக்கல் அரசியல்வாதியின் கட்டப்பஞ்சாயத்தை போல் உள்ளது. ரஜினியை ஜெயலலிதாவுக்கு எதிரான ஆளாக காட்டி, அவரை கட்டம் கட்டவே இப்படியொரு குயுக்தி போஸ்டரை சமயம் பார்த்து வெளியிட்டுள்ளனர். இந்த நரித்தனங்களை செய்யும் சிங்காரவேலன் ஒருகாலத்தில் திமுக சார்பில் எம்எல்ஏ வாக போட்டியிட மனு தாக்கல் செய்து, சீட் கிடைக்காமல் திமுகவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டவர். 
 
அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு லிங்காவை கேட்ட தொகைக்கு வாங்கி, லாபம் கிடைக்கவில்லை என்றதும் மக்களிடம் பிச்சை எடுக்க வருகிறார்களாம். லிங்கா நஷ்டத்தால் சிங்காரவேலன் உள்பட யாரும் பிச்சைக்காரர்கள் ஆகிவிடவில்லை. இவர்கள் ஒவ்வொருவருக்கும்  கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன. இந்த கோடீஸ்வர பேராசைக்காரர்கள் தங்களின் பேராசை நிறைவேறவில்லை என்றதும் மக்களிடம் பிச்சை எடுக்க வருகிறேnம் என்று சொல்ல எவ்வளவு ஆணவம் இருக்க வேண்டும்? நீங்க பேராசைப்பட்டு ஏதாவது செய்வீங்க. நஷ்டமடைந்தால் அன்றாடங்காய்ச்சிகளிடம் பிச்சையெடுப்போம்னு பயமுறுத்துவீங்க. போஸ்ட்ல கட்டி அடிக்கணும்யா உங்களை.
எப்படி கௌதம் படத்தில் தியாகராஜன் குமாரராஜா வந்தார்?
 
கௌதமின் என்னை அறிந்தால் படத்தின் கிளைமாக்ஸில் ஸ்ரீதர் ராகவனும், தியாகராஜன் குமாரராஜாவும் பங்களிப்பு செலுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக தியாகராஜன் குமாரராஜா. அவர் சொன்ன ஐடியாப்படி கிளைமாக்ஸை அமைத்ததாக கௌதம் பேட்டி தந்திருந்தார்.
 
எப்படி இந்த கூட்டணி அமைந்தது?
 
இந்தியில் எக்ஸ் என்ற பெயரில் ஒரு படம் தயாரானது (எக்ஸ் என்பது பத்து என்ற ரோமன் எழுத்து) இந்தப் படத்தை பத்து இயக்குனர்கள் இயக்கியிருந்தனர். ஒரு நபருக்கு ஒரு எபிசோட். இதில் தியாகராஜன் குமாரராஜாவும் ஒருவர்.
அவர் தனது பட வேலைகளில் பிஸியானதால் தன்னால் முடியாது என்று விலகினார். அவருக்குப் பதில் யார் என்ற கேள்வி வந்த போது அவர் கௌதமை சிபாரிசு செய்தார். கௌதமும் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார். அப்படி அந்தக்காலத்திலிருந்தே இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருந்து வந்துள்ளது.
 
சரி, கௌதம் அந்தப் படத்தில் ஒரு எபிசோடை இயக்கினாரா? இல்லை. அவரும் தனது சொந்தப் படத்தில் பிஸியாக கடைசியில் நலன் குமாரசாமிதான் அந்த எபிசோடை இயக்கி படத்தை நிறைவு செய்தார்.