வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (11:50 IST)

புலிப்பார்வையும் புலித்தோல் போர்த்திய பசுக்களும்

கத்தி, புலிப்பார்வை படங்களுக்கு எழுந்திருக்கும் எதிர்ப்பு குறித்து மீண்டும் ஒருமுறை விளக்க வேண்டியதில்லை. இந்த இரு படங்கள் குறித்த சர்ச்சைகள்தான் தமிழனை தினம் தட்டி எழுப்புகின்றன. தினமொரு அறிக்கை விடப்படுகிறது.
புலிப்பார்வை படத்தில் பிரபாகரனின் மகன் பாலசந்திரனை சிறார் போராளியாக சித்தரித்திருப்பதுதான் பிரச்சனையின் மையம். 65 அமைப்புகள் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
 
"தற்போது பாலச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வதாக கூறும் வகையில் புலிப்பார்வை என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதன் காட்சிகளைப் பார்க்கும் மனசாட்சி உள்ள எந்த மனிதருமே இப்படி ஒரு அப்பட்டமான இனத்துரோக சிந்தனையுடன் கூடிய படம் தமிழகத்தில் இருந்து வெளியாகிறதே என்று கொந்தளிக்கத்தான் செய்வார்கள்.
 
இந்த படத்தின் காட்சிகள் அனைத்திலுமே பாலகன் பாலச்சந்திரன் சிறார் போராளியாக சித்தரிக்கப்படுகிறார். இது உண்மைக்கு மாறானது. அத்தனை காட்சிகளிலுமே துப்பாக்கியுடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சீருடையுடனுமே பாலச்சந்திரன் பாத்திரம் வலம் வருகிறது.
 
உச்சகட்ட கொடூரமாக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன், பாலச்சந்திரனுக்கும் சிறார்களுக்கும் ஆயுத பயிற்சி கொடுப்பதாக காட்சிகள் வருகின்றன. இவை அனைத்துமே சிங்களத்தின் பொய்யுரைக்கு வலுச்சேர்க்கவே பயன்படும். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் தொடர்பான உண்மை புகைப்படம் எதனிலும் அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கச் சீருடையுடன் ஆயுதப் போராளியாக இருந்ததே கிடையாது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆளுமை செலுத்திய காலத்தில் பாலகன் பாலச்சந்திரன், அங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்தார். அது தொடர்பான செய்திகளும் படங்களும் உலகத்தின் பார்வைக்கும் வந்திருக்கின்றன. ஆனால் போர்முனையில் பாலகன் பாலச்சந்திரன் பலியானதாக காட்டி அந்தப் படுகொலையை நியாயப்படுத்தத் துடிக்கிறது புலிப்பார்வை திரைப்படம். இது சிங்களப் பேரினவாதத்தின் பொய்யுரைக்கு வலு சேர்க்கிற திரைப்படம்."
 
இந்த அறிக்கையிருந்து பாலசந்திரனை சிறார் போராளியாக சித்தரித்திருப்பதை 65 இயக்கங்களும் கடுமையாக ஆட்சேபித்திருப்பதை அறியலாம்.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி தந்து ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதான குற்றச்சாட்டு புலிகள் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்திலேயே சர்வதேச அரங்கில் முன் வைக்கப்பட்டது. அதற்கான புகைப்பட ஆதாரங்கள் வெளியிடப்பட்டன. பாலசந்திரனை சிறார் போராளியாக சித்தரித்து ஒரு படம் வெளியானால் புலிகள் மீதான குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாகிவிடும். அதனால்தான் 65 அமைப்புகளும் பதட்டமடைகின்றன.

பாலசந்திரன் போர் பயிற்சி பெற்றதற்கோ, புலிகளின் ராணுவ சீருடையில் தோன்றியதற்கோ ஆதாரம் இல்லை. ஆனால் ஒருகாலத்தில் புலிகளின் படையில் சிறார் போராளிகள் இருந்தனர். ராணுவ நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். எம் இளம் பிஞ்சுகளும் பகைவனை எதிர்த்து களமாடுகின்றன என ஒருகாலத்தில் இறுமாந்திருந்த அரசியல் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் அதனை மறைக்க வேண்டிய அவசியம் இருக்கலாம். ஆனால் மாணவர்கள் இப்போதுதான் அரசியல் அரங்கில் காலடி வைக்கின்றனர். அன்று சிறார் போராளிகளை வரவேற்றோம். அது தவறு என்பதை உணர்ந்து கொண்டோம் என்று வெளிப்படையாக தங்களை சுத்திகரிக்கும் துணிவு மாணவர்களுக்கு இருக்க வேண்டும். மூடி மறைப்பதன் வழியாக எந்த வரலாற்று பிழையையும் சரி செய்துவிட முடியாது. சிறு பிழைகளுடன் தொடங்கும் பயணம்தான் நாளடைவில்; பெரும் சிலுவையாக மாறுகிறது.
எப்போதுமே ஆரம்ப நோக்கம் தூயதுதான். அந்த நோக்கத்துக்கும் முயற்சிக்கும் அங்கீகாரம் கிடைத்து அதனை தக்க வைக்க விழையும் போதுதான் நோக்கத்தில் மாசுபடிய ஆரம்பிக்கிறது. சீமானின் ஆரம்பகால ஈழ செயல்பாடுகளில் - புலிகளின் அனைத்து செயல்களுக்கும் நியாயம் கற்பித்தது தவிர்த்து - பிழை காண முடியாது. காங்கிரஸை கருவறுக்கும் அவரது முயற்சிக்கு ஆதரவு பெருகியது. கட்சி ஆரம்பித்தார். காங்கிரஸின் இடத்தில் பி.ஜே.பி. அமர்ந்தது. காங்கிரஸ் ஈழ விஷயத்தில் கடைபிடித்த கொள்கைகளைதான் பிஜேபியும் நடைமுறைப்படுத்துகிறது. பாராளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்பதில் சுஷ்மா ஸ்வராஜும் பிஜேபியும் பிடிவாதமாக இருந்தனர். புலிகளையும், தனி ஈழத்தையும் கடுமையாக எதிர்க்கும், எந்த அரச பதவியிலும் இல்லாத சுப்பிரமணியசாமியை இந்தியா சார்பில் இலங்கைக்கு பிஜேபி அனுப்பி வைத்தது. சீமான் பொங்கியிருக்க வேண்டும். கட்சித் தலைவராக கட்சியை தக்க வைத்துக் கொள்ள ஏதாவது பெருங்கட்சியை சார்ந்திருக்க வேண்டிய நிலை. காங்கிரஸுடன் சாத்தியமில்லை என்கிற போது பிஜேபிதான் அவர்முன் இருக்கும் ஒரே வாய்ப்பு. பிஜேபியின் கூட்டணி கட்சினரான பச்சமுத்துவின் புலிப்பார்வையை சீமானால் எப்படி எதிர்க்க முடியும்?
 
ஆனால் இதற்கெல்லாம் முன்பே சீமான் நிறமிழக்க ஆரம்பித்திருந்தார். இலங்கையில் திரைப்பட விழா நடத்த உதவிய சல்மான்கானின் படத்தை தமிழகத்தில் திரையிட நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவருடன் கைகோர்த்து நின்ற விவேக் ஓபராயின் படத்தை எதிர்ப்பதா வேண்டாமா என்ற கேள்வி வந்த போது, விவேக் ஓபராய் நடித்த ரத்த சரித்திரம் என் தம்பி சூர்யாவுடைய படம் என்று விலகிக் கொண்டார். இலங்கை சென்று சிங்கள அரசின் பிரதிநிதியாக செயல்பட்ட அசினை நாம் தமிழர் கட்சி விமர்சித்தது. இலங்கையில் கச்சேரி நடத்த சென்றவர்கள், பாட சென்றவர்கள் என அனைவரையும் கூடாது என்றது. அதேநேரம் சிங்களவரான நடிகை பூஜா, ஷுட்டிங் நடத்த இலங்கை வா, உதவி செய்றேன் என்று சென்னையில் நடந்த சினிமா விழாவில் அழைப்பு விடுத்ததை கண்டு கொள்ளவில்லை. சீமான் மீதான நம்பிக்கையை தனிநபர் சார்ந்த அவரது அணுகுமுறை பெருமளவில் காலி செய்தது.
 
பிஜேபியின் தோழமைக்காக புலிப்பார்வையை சீமான் போஷிப்பது போல, புலிப்பார்வையை தடை செய்ய வலியுறுத்தும் விடுதலை சிறுத்தைகளும் திமுக, காங்கிரஸுக்காக ஈழத்தை பலமுறை பலிகடாவாக்கியவர்கள்தான். திருமாவளவனின் ஈழப்பாசம் அப்பழுக்கற்றதாக இருக்கலாம். ஆனால், ஈழத்துக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் அப்போதைய ஆளும் கட்சியான திமுக வுக்கும் அதன் தோழமை காங்கிரஸுக்கும் நெருக்கடி ஏற்படாதவகையில் தொல்.திருமாவளவனும் அவரது கட்சியினரும்தான் பார்த்துக் கொண்டனர். தேர்தலையும், கூட்டணியையும் நம்பி அரசியல் செய்கிறவர்களுக்கு ஈழம் மட்டுமின்றி அனைத்துப் பிரச்சனைகளும் அவர்களின் நிலைநிற்பிற்கு உதவும் ஊன்றுகோல்கள் மட்டுமே. எந்தப் போராட்டத்துக்கும் அணி திரட்டும் முன் மாணவர்கள் இதனை உணர வேண்டும்.
 
ஆயிரக்கணக்கான உயிர்களின் மீது நின்று வியாபாரம் செய்கிறோம் என்ற நினைப்பு அரசியல்வாதிகளுக்கும் இல்லை, வியாபாரிகளுக்கும் இல்லை. இருந்திருந்தால் புலிப்பார்வை போன்ற அபத்தங்கள் நேர்ந்திருக்காது. பிரபாகரனின் மகனுக்கு சீருடை அணிவித்து வீர கோஷம் போட்டால் பாலசந்திரனின் மரணம் ஏற்படுத்திய அனுதாபத்தை காசாக்கலாம் என்ற பேராசையின் விளைவுதான் புலிப்பார்வை. பிரவீன் காந்தி பிரவீன் காந்தாக இருந்த போது எடுத்தப் படங்களை வைத்துப் பார்த்தால் இரண்டு ஷோவுக்கு மேல் புலிப்பார்வை தாங்காது. அரை நாளில் அழுகப் போகிற பண்டத்துக்கு இத்தனை ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் தேவையா? அரசியல்வாதிகளுக்கு தேவைப்பட்டாலும் மாணவர்களுக்கு இது தேவைதானா?
 
புலிப்பார்வை என்றில்லை எத்தனை மோசமான படைப்பாக இருந்தாலும் அதனை தடை செய்வது சனநாயக விரோதம். எந்த ஒரு படைப்பும் ஒரு கருத்தை முன் வைக்கிறது. அது எத்தனை மோசமான கருத்தாக இருந்தாலும் அதனை கருத்தால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். தடை செய்வது தீர்வாகாது. உன்னுடைய கருத்தை ஒருபோதும் என்னால் ஏற்க முடியாது. ஆனால் அதை சொல்வதற்கான உன்னுடைய உரிமைக்காக என்னுடைய உயிரையும் கொடுப்பேன் என்பதுதான் சனநாயகத்தின் அடிப்படை. பிரச்சனைகளையும், அதன் பின்னாலுள்ள அரசியலையும் புரிந்து கொள்வதன் வழியாக ஏற்படும் விழிப்புணர்வுதான் எந்தப் பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு. தடை என்பது விழிப்புணர்வுக்கான சாத்தியத்தை அழிக்கும் வன்முறை மட்டுமே.