வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : புதன், 24 ஜூன் 2015 (10:52 IST)

அரசியல் மயமாகும் தமிழ் திரைத்துறை

தமிழ் திரைத்துறை எப்போதும் ஆளும் கட்சிக்கு அனுசரணையாகவே செயல்பட்டு வந்திருக்கிறது. திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வருகையில் கருணாநிதியை அழைத்து கலைவிழா நடத்துவதும், அதிமுக ஆட்சியை கைப்பற்றினால் ஜெயலலிதா முன்னிலையில் ஆடல் பாடல் நடத்துவதுமாக ஆளும் கட்சியை குஷிப்படுத்தி, அவர்களின் கருணையில் சிறு ஆதாயங்களைப் பெறும் ரப்பர் முதுகெலும்பாகவே தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளது. 
 

 
திரைத்துறையினர் முன்னெடுத்த மக்கள் பிரச்சனைகள் - அது ஈழமாக இருந்தாலும், காவிரிப் பிரச்சனையாக இருந்தாலும் - ஆளும் கட்சியின் வழிகாட்டுதலின்படி அவர்களின் எண்ணத்துக்கும் விருப்பத்துக்கும் ஏற்றபடியே கட்டமைக்கப்பட்டன, செயல்படுத்தப்பட்டன. இயக்குனர்கள் ராமேஸ்வரத்தில் ஈழத்துக்காக நடத்திய போராட்டம் மட்டும் விதிவிலக்கு. அது தன்னெழுச்சியாக நடந்தது.
 
நடிகர் சங்கத் தலைவராக சரத்குமாரும், செயலாளராக ராதாரவியும் பெறுப்பேற்றுக் கொண்டபின் இந்த செயல்பாடுகள் தீவிரமடையத் தொடங்கி, தாணு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரானதும் ஒரு முழுமையை பெற்றது. இன்று தமிழ் திரைத்துறையை கட்டுப்படுத்தும் 23 சங்கங்களும், அவற்றின் ஒட்டு மொத்த கூட்டமைப்பான பெப்சியும் அதிமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி போன்று அதிமுக என்ற கட்சியின் ஓர் அங்கமாக மாறிவிட்டன.
 
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டு ஜெயலலிதாவை சிறையில் அடைத்தபோது தமிழ் திரைத்துறையின் அனைத்துச் சங்கங்களும் கூட்டாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டன. நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த திரைத்துறையும் போராட்டத்தில் இறக்கிவிடப்பட்டது. தயாரிப்பாளர்கள் சங்கம் ஒருபடி மேலேபோய் அம்மா அன்னதான திட்டத்தை அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தியது.
 
கலைத்துறை என்பது அரசியல், சாதி, மத, இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. அப்படியான கலைத்துறையை சில சுயநலமிகள் அதிமுகவின் அங்கமாக மாற்றி வருகின்றனர். பலருக்கும் இதில் உடன்பாடில்லை என்றாலும் அதனை வெளிப்படையாக பேசும் ஜனநாயக சுதந்திரம் இன்று திரைத்துறையில் இல்லை என்பதே அதிகமும் கவலைப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.
 
நேற்று தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், நடிகர் சங்கம் மற்றும் பெப்சி இணைந்து கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டது. ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஜெயலலிதாவை வெற்றி பெற வைக்க 24 -ஆம் தேதி முதல் அனைத்து திரைத்துறையினரும் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று அதில் கட்டளையிட்டிருக்கிறார்கள். 
 
உலகின் எந்தவொரு திரைத்துறையும் இப்படி ஒரு அரசியல் கட்சியின் அடிமையாக வாலாட்டியதில்லை. தாணுவும், சரத்குமாரும், ராதாரவியும், விக்ரமனும், சிவாவும் இணைந்து தமிழ் திரைத்துறையின் கண்ணியத்தையும், மதிப்பையும், சுயமரியாதையையும் கப்பலேற்றியிருக்கிறார்கள். இவர்களை கண்டிக்க திரைத்துறையில் ஆளில்லை.

இந்த சீரழிவுக்கு முக்கிய காரணம், திரைத்துறை சங்கங்களின் கையில் மொத்த அதிகாரமும் குவிந்திருப்பதுதான். நாம் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தால் எந்த சங்கத்தில் வேண்டுமானாலும் அங்கத்தினராகிக் கொள்ளலாம். எந்த அரசியல் கட்சியின் சங்கமாகவும் அது இருக்கலாம். அரசியலுக்கு அப்பாற்பட்ட சங்கமாகவும் இருக்கலாம்.

சங்கத்தில் உறுப்பினராகாமலும் நீங்கள் அந்நிறுவனத்தில் பணிபுரியலாம். ஆனால், திரைத்துறையில் மட்டும் சினிமாவில் நீங்கள் பங்களிப்பு செலுத்த வேண்டும் என்றால் சங்கத்தில் கண்டிப்பாக உறுப்பினராகியே ஆகவேண்டும். நடிகர் என்றால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் என்றால் தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர் என்றால் இயக்குனர்கள் சங்கம். இந்த சங்கங்கள் தவிர்த்து வேறு சங்கங்களும் கிடையாது.
 
சங்கத்தில் நீங்கள் உறுப்பினர்களான பிறகு அந்த சங்கத்தின் அத்தனை கட்டளைகளுக்கும் நீங்கள் பணிந்தாக வேண்டும். இல்லையேல் ரெட், சங்கத்திலிருந்து வெளியேற்றப்படுவீர்கள். இங்கு சங்கத்தின் கட்டளை என்பது சங்க நிர்வாகிகளின் விருப்பு வெறுப்புக்கேற்ப பிறப்பிக்கப்படுவது. அதிமுக அனுதாபிகளான சரத்குமார், தாணு, விக்ரமனின் அறிவிப்பு எப்படிப்பட்டது என்று பார்த்தோம். அதுபோன்ற ஜனநாயக விரோத கட்டளைகளுக்கு நீங்கள் பணிய வேண்டும்.
 
இவ்வளவு மோசமான ஜனநாயக விரோதமான ஒரு திரைத்துறை உலகிலேயே தமிழகத்தில்தான் செயல்பாட்டில் இருக்கிறது. மன்சூரலிகான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போன்று, போட்டி சங்கங்கள் ஏற்படாதவரை இதுபோன்ற அவலங்களை தமிழ் திரைத்துறை சந்தித்துக் கொண்டுதான் இருக்கும்.