வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : சனி, 9 மே 2015 (10:17 IST)

சல்மானுக்காக இதயம் நொறுங்கியவர்களும், உளியின் ஓசை இளவேனிலும்

இந்தியாவில் பண பலமும், அதிகார பலமும் இருந்தால் நீதி எப்படியும் வளையும் என்பதற்கு மேலுமொரு உதாரணமாகியிருக்கிறது, சல்மான் கானுக்கு வழங்கப்பட்ட பெயிலும், தண்டனை இடைநீக்கமும். 
 
சல்மான் கான் குடித்துவிட்டு கார் ஓட்டியதால் பலியான உயிர் குறித்து சிலருக்கு அக்கறையில்லை. சல்மான் கான்தான் காரை ஓட்டி சாலையில் படுத்துறங்கியவரின் உயிரை பறித்தார் என சாட்சியம் சொன்னதற்காக காவல்துறையாலே வஞ்சிக்கப்பட்டு மனரீதியாவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டு உயிரை விட்ட காவலரின் மரணமும் சிலருக்கு பொருட்படுத்தக் கூடியதல்ல. சல்மான் கானுக்கு ஐந்து வருடம் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டதும் அவர்களின் கருணையின் ஊற்று  திறந்தது. என்ன அநியாயம் என்றனர். இதயமே நொறுங்கிவிட்டது என்று கண்ணீர் விட்டனர். சாலைகள் நடப்பதற்கே தவிர படுத்துறங்குவதற்கு இல்லை என்று வெட்கமில்லாமல் தர்க்கம் செய்தனர்.
டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை கற்பழித்து கொன்றவன், எதுக்கு அவள் தேவையில்லாமல் இரவு வெளியே வந்தாள்? அதனால்தான் கற்பழித்து கொன்றோம் என்று சொன்னதற்கும், சாலை என்பது நடப்பதற்கே படுத்துறங்க அல்ல என்று சொன்னதற்கும் வித்தியாசமில்லை. இரண்டும் ஒரே இருண்ட மனதின் இரண்டு வெளிப்பாடுகள். 
 
சல்மான் கானின் வழக்கும், அதனையொட்டி பீறிட்ட கருணையின் ஊற்றுகளும் இளவேனிலின் எழுத்துக்களை நினைவுப்படுத்தியது.
 
உளியின் ஓசை படத்தை இயக்கிய இளவேனில் என்றால், ஓ அவரா என்று கோடம்பாக்கத்தில் முரட்டு புன்னகை எழும். கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான படங்களில் மிகமோசமான திரைப்படம் உளியின் ஓசை என்பது ஒட்டு மொத்த தமிழகத்தின் நம்பிக்கை. அதை இயக்கியவர் இளவேனில். அந்தப் படத்தை கழுவி ஊற்றாதவர்கள் இல்லை.
 
இளவேனிலின் இன்னொரு முகம் - அவரது உண்மையான முகம் பலருக்கும் தெரியாது. படிக்கிற வயதில் வீட்டைவிட்டு வெளியேறி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, அதன் கம்யூனில் வளர்ந்தவர். அவருடன் கம்யூனில் இருந்த இன்னொருவர் சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன். இள்வேனில் கவிஞர், விமர்சன கட்டுரை எழுதுகிறவர். அவர் எழுதிய ஆத்மா என்றொரு தெருப்பாடகன் நூல் முக்கியமானது. இன்னொன்று, புயலுக்கு இசை வழங்கும் ரியக்கம்.

மரபாக நம்மீது திணிக்கப்பட்ட குருட்டுப் பார்வைக்கு வெளிச்சம் தரும் எழுத்து இளவேனிலுடையது. சென்னையில் பெய்த கடும் மழையில் வீடில்லாத ஏழைப் பெண் மழையில் நனைந்து அந்தக் குளிரில் விறைத்து இறந்துவிட்டாள். அந்த சம்பவத்தை ஆத்மா என்றொரு தெருப்பாடகன் புத்தகத்தில் இளவேனில் குறிப்பிட்டுள்ளார்.


 

 
கடையேழு வள்ளல்களில் ஒருவன் பேகன். குளிருக்கு மயில் நடுங்குவதைக் கண்டு அதற்கு தனது போர்வையை அளித்தவன். இளவேனில் இப்படி எழுதுகிறார். மழை வரும் அறிகுறி கண்டால், மயில் மகிழ்ச்சியில் தோகை விரித்து ஆடும். அதன் ஆட்டத்தை குளிருக்கு நடுங்குவதாக தவறாக நினைத்து போர்வை போர்த்தியவன் பேகன்.


அந்த முட்டாளை வள்ளல் என்று கொண்டாடும் தேசத்தில் ஒரு பெண்ணை குளிரில் நடுங்கவிட்டே கொன்றிருக்கிறோம். என்ன ஒரு ஐரனி. மயிலுக்கு போர்வை போர்த்தியவனை வள்ளல் என்று கொண்டாடும் நாட்டில் ஒரு பெண் குளிரில் நடுங்கி உயிரைவிட்டிருக்கிறாள். இந்த போலி மரபு பெருமையை சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பே தனது எழுத்தில் சுட்டிக்காட்டியவர் இளவேனில்.

தேசபக்தி குறித்தும் எழுதியிருக்கிறார். தேசம் என்றால் என்ன? நிலப்பரப்பு. அதிகம் நிலம் வைத்திருக்கும் டாட்டாவுக்கும் பிர்லாவுக்கும் அதிக தேசபக்தி இருக்கும். நிலமே இல்லாதவனுக்கு? வீடிருப்பவன் வீட்டிலிருக்கிறான். அது இல்லாதவன் பொது இடம்தானே என்று ரோட்டில் படுத்தால், வீடிருப்பவனுக்கு அவனால் தொல்லை வந்துவிடுமோ என்று அவனை போலீஸ் பிடித்துக் கொண்டு போகிறது. வைப்பதற்கும், வழிப்பதற்கும் மயிரைத் தவிர சொந்தமாக எதுவும் இல்லாதவனுக்கு ஏது தேசபக்தி எதற்கு தேசபக்தி?
 
வீடில்லாமல் சாலையில் படுத்துறங்கினால் போதையில் காரை ஓட்டி கொலை செய்கிறான். கேட்டால், சாலை நடப்பதற்கே தவிர படுப்பதற்கில்லை என்று திமிராக தத்துவம் உதிர்க்கிறார்கள். அந்தத் திமிருக்கு ஆதரவாக வாலை ஆட்டுகிறது இந்த தேசத்தின் நீதியும் நியாயமும். 

கம்யூனிஸத்தில் பயணித்த இளவேனில் கரையேறியது திமுகவில். கருணாநிதியின் அன்புக்கு பாத்திரமானவர்களில் அவரும் ஒருவர். உனக்கு என்ன வேண்டும் என்று அவர் கேட்கும் போதெல்லாம், எதுவும் வேண்டாம் என்று தட்டிக்கழித்தவர், ஒரு படம் செய்ய வேண்டும், அதுதான் என்னுடைய ஒரேயொரு விருப்பம் என்று ஒருமுறை கூற, கருணாநிதி உருவாக்கித் தந்த வாய்ப்புதான், உளியின் ஓசை.
இளவேனில் மலையூர் மம்பட்டியான் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். அந்தப் படத்தின் டைட்டில் யாருக்கேனும் நினைவிருக்கிறதா? ஹாலிவுட் பென்ஹர் ஸ்டைலில் பிரமாண்டமாக எழுதப்பட்ட மலையூர் மம்பட்டியான் டைட்டில் இளவேனில் வரைந்தது. அவர் ஓவியரும்கூட. இளவேனிலின் மார்க்ஸ், பெரியார் கோட்டோவியங்கள் அபாரமானவை. நந்தன் பத்திரிகையின் ஆசிரியராக இளவேனில் இருந்தபோது ஓவியங்களுக்கும், கவிஞர்களுக்கும் அதில் சிறப்பான இடம் தரப்பட்டது.
 
இளவேனிலின் முதல் கவிதைத் தொகுப்பு அவரது இளம் பருவத்துக்கு முன்பே வெளியானது. பத்தொன்பதாவது வயதில், கவிதா என்ற கவிதை குறித்த விமர்சனப் புத்தகைத்தை வெளியிட்டார். இந்தப் புத்தகமும் உள்பட அவரது எந்தப் புத்தகமும் இப்போது விற்பனைக்கு கிடைப்பதில்லை. அதில் அவருக்கு ஆர்வமும் இல்லை. நந்தனில் தான் எழுதிய கட்டுரைகளுக்கு அவர் பெயர் போட்டதில்லை. பெயர் இல்லாமலே அவரது கட்டுரைகள் வெளிவரும். தனது பெயரை எந்த சந்தர்ப்பத்திலும் முன்னிறுத்தாதவர் உளியின் ஓசை என்ற அமெச்சூர் படத்தினால் இங்கு அறியப்படுவது துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.