வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : புதன், 31 டிசம்பர் 2014 (13:15 IST)

இந்தியாவில் அதிகம் வசூலான படம் - முதலிடத்தை நோக்கி பிகே

இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படங்களில் முதலிடத்தை நோக்கி முன்னேறுகிறது பிகே. தற்போது முதலிடத்தில் இருக்கும் தூம் 3 படத்தின் வசூலை இன்னும் சில தினங்களில் பிகே முந்தும் என்று நம்பப்படுகிறது.
 
ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் அமீர் கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் டிசம்பர் 19 பிகே திரைக்கு வந்தது. படத்துக்கு தூம் 3 அளவுக்கு விளம்பரமோ, திரையரங்கோ கிடையாது. முதல்நாள் வெள்ளிக்கிழமை 26.63 கோடிகளை படம் வசூலித்தது. இந்த வருடம் வெளியான ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் முதல்நாளில் 48 கோடிகள் வசூலித்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இது சுமாரான வசூல்.
படம் நன்றாக இருக்கவே அடுத்தநாள் வசூல் 30.34 கோடிகளாக அதிகரித்தது. மூன்றhவது நாளான ஞாயிறு 38.44 கோடிகள். 
 
கடவுள் குறித்த மூடநம்பிக்கையை பிகே கேள்வி கேட்கிறது. புத்திசாலியான ஒருவர் கேள்வி கேட்டால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு கோபம்தான் வரும். பிகேயில் கேள்வி கேட்பது, வேற்றுகிரகவாசியான ஓர் அப்பாவி. அந்த அப்பாவியின் கேள்விகளை - கடவுளை நம்பும் மக்களும் தங்களின் நம்பிக்கையை மீறி ரசிக்கிறார்கள். ஆம், அந்த கேள்விகள் சரிதான் என்று படத்தை ரசிப்பதன் மூலம் ஆமோதிக்கிறார்கள். 
 
விவாதங்களின் மூலம் ஏற்படுத்த முடியாத மாற்றத்தை இந்தப் படம் உருவாக்கியிருக்கிறது என்றால் அது அதிகபட்சம். படத்தை பார்த்தவர்கள் கடவுள் குறித்த தங்களின் கருத்தை, மூட சடங்குகளை உடனே நிறுத்திக் கொள்ளப் போவதில்லை. அதேநேரம் அவர்களை கோபப்படுத்தாமல் அவர்களின் நம்பிக்கைக்கு எதிரான கருத்தை முன்வைத்து அதை அவர்களை ரசிக்கும்படியும் இந்தப் படம் செய்துள்ளது. பிகேயின் சாதனை இதுதான். 
 
படம் மக்களுக்குப் பிடித்துள்ளதால் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு வருகிறார்கள். அதனால் ஓபனிங்கை தாண்டியும் படம் வசூலிக்கிறது. 202 கோடிகள் இந்தியாவில் வசூல் செய்த ஹேப்பி நியூ இயர் முதல் மூன்று தினங்களிலேயே அதில் பாதியை வசூல் செய்தது. மீதி நாள்களில் முதல் மூன்று தின வசூலையே அதனால் பெற முடிந்தது. ஆனால் பிகே அப்படியல்ல. முதல் மூன்று தினங்களில் 85 கோடிகள் அளவுக்கே வசூலித்த படம் 11 -வது நாள்வரை 246.66 கோடிகளை தனதாக்கியுள்ளது.

முதல்நாள் - 26.63 கோடிகள்
இரண்டாவது நாள் - 30.34 கோடிகள்
மூன்றாவது நாள் - 38.44 கோடிகள்
நான்காவது நாள் - 21.22 கோடிகள்
ஐந்தாவது நாள் - 19.36 கோடிகள்
ஆறhவது நாள் - 19.55 கோடிகள்
ஏழாவது நாள் - 27.55 கோடிகள்
எட்டாவது நாள் - 14.48 கோடிகள்
ஒன்பதாவது நாள் - 17.16 கோடிகள்
பத்தாவது நாள் - 21.85 கோடிகள்
பதினொன்றாவது நாள் - 10.08 கோடிகள்
 
மொத்தமாக 246.66 கோடிகள்.
முதல்நாள் 26.63 கோடிகள் வசூலித்த படம் ஏழாவது நாளில் அதைவிட அதிகமாக 27.55 கோடிகள் வசூலித்துள்ளது. பத்தாவது நாளில் ஏறக்குறைய முதல்நாளின் வசூல், 21.85 கோடிகள்.
 
இதற்கு பெயர்தான் வெற்றி என்பது. திகட்ட திகட்ட விளம்பரம் செய்து தங்களின் ஸ்டார் பவரில் முதல் மூன்று நாள் மட்டும் வசூலிக்கும் படங்களை மக்கள் ஒதுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. இந்த மூன்று நாள் வசூலில்தான் இன்று பல ஹீரோக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முதல் மூன்று தினங்களில் ஐம்பது ரூபாய் டிக்கெட்டை ஐநூறு ரூபாய்க்கு வாங்கும் அதிமேதாவி ரசிகர்களால்தான் இன்று பல மாஸ் ஹீரோக்களின் படங்கள் தப்பிப் பிழைக்கின்றன.

முதல் மூன்று தினங்கள் திரையரங்குகள் அதிகபடியாக வசூலிப்பதை அரசு தடுக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளை ரசிகர்களும் புறக்கணிக்க வேண்டும். அப்படி செய்தால் நமது மாஸ் ஹீரோக்களின் லட்சணம் என்ன என்பதும், அவர்களின் உண்மையான பவர் என்ன என்பதும் தெரிந்துவிடும்.
 
இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படங்களில் 284.27 கோடிகளுடன் தூம் 3 முதலிடத்தில் உள்ளது. இந்தப் படம் 200 கோடியை வசூலிக்க ஐம்பது தினங்கள் எடுத்துக் கொண்டது. ஹேப்பி நியூ இயர் 19 தினங்களில் 200 கோடியை எட்டியது. சல்மானின் கிக் 11 தினங்களில் 200 கோடியை கடந்தது. முதல்நாள் மிகக் குறைவாக வசூலித்த பிகே படம் வெறும் 9 தினங்களில் 200 கோடியை தாண்டியிருக்கிறது.
 
அதனால் இன்னும் சில தினங்களில் தூம் 3 -யை முறியடித்து பிகே முதலிடத்தை பிடிக்கும் என நிபுணர்கள் உறுதியாக கூறுகின்றனர்.