செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. க‌ட்டுரை
Written By John
Last Updated : சனி, 19 ஏப்ரல் 2014 (17:48 IST)

மோடி - ரஜினி, விஜய் சந்திப்பின் பின்னணி

மோடி - ரஜினி, மோடி - விஜய் சந்திப்புதான் தமிழகத்தின் ஹாட் டாபிக். இணையத்தில் இந்த சந்திப்புகளை முன்னிட்டு கட்டி உருள்கிறார்கள். வாரமிருமுறை அரசியல் இதழ்கள், மோடிக்கு ரஜினி அளித்த ஆத்மார்த்த ஆதரவு இது என்று புலானாய்வு செய்து புல்லரிக்கின்றன.
சம்பந்தப்படாத இவர்களே வேப்பிலை எடுத்து ஆடினால், ரஜினி, விஜய் ரசிகர்களும் பாஜ கட்சியினரும் என்ன நிலைமையில் இருப்பார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு குறித்து இதற்கு மேலும் மவுனம் காத்தால் தேசிய நீரோட்டத்திலிருந்தே நாம் வெளியேற்றப்படலாம். அந்த சாபம் நமக்கு எதுக்கு. இதோ எழுதிட்டோம்.
 
சூப்பர்ஸ்டார் ரஜினிசார் ரசிகர்களை சந்திக்கப் போறேன், அவங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போறேன் என்று சொன்னால் தலைவரின் படம் எதுவோ ரிலீஸnகப் போகிறது என்று அர்த்தம். இந்த பழைய ரிக்கார்டை கோச்சடையானை முன்னிட்டு அவர் தூசு தட்டிக் கொண்டிருந்தவேளையில்தான் இலவச விளம்பரமாக வந்து சேர்கிறார் மோடி. 
 
வளர்ச்சி, கிளர்ச்சி என்றெல்லாம் பேசி நாலு நாள் பிரச்சாரத்தில் வடை சுட முடியாது என்பது மோடிக்கு தெரியும். ஆனால் ஜனங்களின் ஆதரவு பெற்ற ஒருசிலரையாவது தனது அனுதாபியாக மாற்றினால் அந்த ஒருசிலரின் கீழ் இயங்கும் லட்சக்கணக்கானவர்களை தனக்கு ஆதரவாக மாற்றிவிடலாம் என்ற தயிர்வடை எண்ணம் மோடிக்கு. அதாவது புதிதாக மாவரைத்து வடை சுட வேண்டியதில்லை. இருக்கிற வடையில் கொஞ்சம் தயிர் சேர்த்தால் போதும், தயிர்வடை தயார்.
 
இந்த தயிர்வடையைதான் வாரமிருமுறை அரசியல் இதழ்கள் ஆத்மார்த்தம் என்றும் ஆதரவு என்றும் புளித்த ஏப்பமாக விட்டுக் கொண்டிருக்கின்றன.

சூப்பர்ஸ்டார் ரஜினிசாரின் ரசிகர்களுக்கே தலைவர் இருக்கிற நிலையில் கட்சி எல்லாம் ஆவுற காரியமில்லை என்பது தெரிந்துவிட்டது. நான் எப்போ வருவேன் எப்படி வருவேன் என்றெல்லாம் இனியும் பஞ்ச் பேசினால் தலைவரே சும்மாயிருங்க என்று அவர்களே சொல்லக்கூடும். தலைவரின் மூத்த மகள் சொன்னது போல் தலைவர் கிங்காக இருப்பதைவிட கிங் மேக்கராக இருப்பதுதான் இனி ஒரேவழி. இந்த தரிசனத்தை அவர்கள் கண்டடைந்தது கிங்கைவிட கிங் மேக்கர் உசத்தி என்பதனால் அல்ல. தலைவரால் ஒருபோதும் கிங் ஆக முடியாது என்ற ஞானத்தால் விளைந்த புரிதல் இது.
அழகிரி போன்ற பட்டியிலிருந்து துரத்தப்பட்ட ஆடுகளால் கிங் மேக்கர் சாத்தியமில்லை. பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் மோடியாவது வேண்டும். தவிர, சூப்பர்ஸ்டார் ரஜினிசாரின் நெருங்கிய நட்பு வட்டாரத்தின் - சோ, அத்வானி - நீட்சிதான் மோடி. இந்த சந்திப்புக்கு பதிலுதவியாக, மோடி நிர்வாகத் திறன்மிக்கவர், அவர் நினைப்பது நடக்க வேண்டும் என்று சுற்றி வளைத்து சிலம்பம் வீசினார் தலைவர்.
 
ஜெயலலிதாவின் ஆட்சியை எப்படியும் ஒழித்துகட்ட வேண்டும் என்று தமிழக மக்கள் உறுதிபூண்டிருந்த நேரத்தில், தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரிச்சிடுச்சி, இந்த ஆட்சி மாறலைன்னா ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று வாய்ஸ் தந்தார் சூப்பர்ஸ்டார் ரனினிசார். அந்த தேர்தலில் படுதோல்வியடைந்தார் ஜெயலலிதா. தலைவரின் வாய்ஸ்தான் அதுக்கு காரணம் என்று இன்றும் தமுக்கடித்து திரிகிறது ஒரு கூட்டம். ஆனால் அவர் வாய்ஸ் தரவில்லையென்றாலும் அதே தோல்விதான் ஜெயலலிதாவுக்கு கிடைத்திருக்கும். அடுத்தத் தேர்தலிலேயே அது நிரூபணமானது. பாஜ கட்சியை தலைவர் வெளிப்படையாக ஆதரித்தும் எந்த பருப்பும் வேகவில்லை. மக்களின் விருப்பத்துக்கு மாறாக ஆண்டவனே வாய்ஸ் தந்தாலும் ஆகப்போவது எதுவுமில்லை என்ற பேருண்மையை சூப்பர்ஸ்டார் பரவசப்பட்ட புனித கணம் அது. அந்த படிப்பினை காரணமாகதான் சிறந்த நிர்வாகி, நினைத்தது நடக்கட்டும் என்று வார்த்தைகளால் ஹைட் அண்ட் சீக் விளையாடினார் தலைவர்.

விஜய் விவகாரம் இதிலிருந்து மாறுபட்டது. அரசியல் என்று பேசினாலே அடி வெளுக்கிறார்கள். அணில் மாதிரி உதவியும் பிறந்தநாள் கொண்டாட நினைத்தால் அடி பொடனியில் விழுகிறது. காவலன் படத்தை கதறவிட்டதால் அணிலானார். அந்த அணிலுக்கே அடி என்றால் எங்கேதான் போவது?

கிரி படத்தில் வடிவேலை மிரட்டி பணம் வசூல் செய்யும் தடியர்கள் வடிவேலு பக்கத்தில் அர்ஜுன் இருப்பதைப் பார்த்து பயந்து பின்வாங்குவார்கள் இல்லையா. அதுமாதிரி படத்தை வெளியிடாமல் தடுப்பவர்களை மிரட்டி வைக்க தளபதிக்கு ஒரு அர்ஜுன் வேண்டும். பிரதம வேட்பாளரே கைப்புள்ளைக்கு நான்தான் பாடிகாட் என்று இறங்கி வரும்போது கைபுள்ளை கோயம்புத்தூரில் பெருமையுடன் குருஜியை எதிர்நோக்கியதில் என்ன ஆச்சரியம்.
இந்த சந்தர்ப்பவாத சந்திப்புகளில் வழியும் சுயநலத்தை ஆதரவு என்றும், விழப்போகிற ஓட்டுகள் எனவும் சப்புகொட்டுகிற அறிவிலித்தனத்திலிருந்து ஒதுங்கியிருப்போம்.
 
(விஜய்யுடனான சந்திப்பின் போது இந்தி 3 இடியட்ஸின் தமிழ் தழுவலான நண்பன் குறித்து ஆர்வமாக கேட்டுத் தெரிந்து கொண்டாராம் மோடி. மோடிக்கு பிடித்த படமாம் 3 இடியட்ஸ்)