வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : சனி, 31 ஜனவரி 2015 (11:21 IST)

ஹாலிவுட்டின் இரு கொலையாளிகள் - கொலையாளி 2

முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் டோனி ஸ்காட்டின், மேன் ஆன் ஃபயர் படம் தமிழில் வெளிவந்த ஆணை படத்தின் சாயலில் உள்ளதே, எந்தப் படம் முதலில் வெளிவந்தது என்று வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். சந்தேகமேயில்லாமல் மேன் ஆன் ஃபயர் திரைப்படம்தான்.
அந்தப் படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் அர்ஜுன் நடித்த, ஆணை. டென்சலின் ட்ரைன்டு கில்லர் கதாபாத்திரத்தை தமிழில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக மாற்றியிருப்பார்கள். மேன் ஆன் ஃபயர் இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில், ஏக் ஆஜ்னபி என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது.
 
இனி நமது இரண்டாவது கொலையாளிக்கு வருவோம்.
 
த ஈகுவலைசரில் வரும் ராபர்ட் மெக்கல் (டென்சல் வாஷிங்டன்) கொலை செய்யும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் ஒரு சராசரியாக நடந்து கொள்கிறவர். சக தொழிலாளிகளுடன் நட்பு பாராட்டுகிறவர். அவர்களின் துன்பதைப் போக்க முயற்சிப்பவர். முக்கியமான தாராளமாக சிரிக்கக் கூடியவர். அவர் ஒரு இளம் பெண்ணையும் அவளைப் போன்ற பிறரையும் காப்பாற்ற எதிரிகளை கொலை செய்ய ஆரம்பிப்பதில் ஒரு தார்மீக நியாயம் உண்டு.
 
ஆனால், நம்முடைய இரண்டாவது கொலையாளிக்கு இதுபோன்ற எந்த சென்டிமெண்டும் இல்லை. அவரது பெயர் ஜான் விக் (John Wick).
 
சென்ற வருடம் அக்டோபர் 24 -ஆம் தேதி ஜான் விக் - நாயகனின் கதாபாத்திர பெயர்தான் படத்துக்கும் - வெளியானது. ஜான் விக் கதாபாத்திரத்தில் கியானு ரீவ்ஸ் நடித்திருந்தார். 
 
ஜான் ஒரு கில்லர். காதல் அவரை கொலை தொழிலை கைவிட வைக்கிறது. நான்கு ஆண்டுகள் தனது மனைவியுடன் கழிக்கிறார். மனைவி கேன்சரில் இறந்த சில தினங்களில் ஜானுக்கு ஒரு பார்சல் வருகிறது. அவரது மனைவி அனுப்பிய அந்த பார்சலில் இருப்பது ஒரு நாய்க்குட்டி. நீ மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும், அதற்கு கார் உதவாது, இந்த நாய்க்குட்டியிலிருந்து தொடங்கு என மனைவி பார்சலுடன் ஒரு கடிதத்தையும் எழுதியிருக்கிறார்.
 
அந்த கடிதத்திலிருந்து ஜானுக்கு அவரது 69 -ஆம் ஆண்டு மாடல் காருடன் ஒரு பிணைப்பு இருப்பது தெரிய வருகிறது. நாயும் அவருடன் ஒட்டிக் கொள்கிறது.
 
இந்நிலையில், ஒருநாள் கியாஸ் ஸ்டேஷனில் வைத்து, ரஷ்ய கேங்ஸ்டரின் மகன் ஜானின் காரை விலைக்கு கேட்கிறான். ஜான் மறுக்கிறார். ஜானின் காரை பின் தொடர்ந்து வரும் அவனும் அவனது கூட்டாளிகளும் ஜானை அடித்துப் போட்டு நாயையும் கொன்று அவரது காரை திருடிச் செல்கிறார்கள்.
 
காரை நேராக வொர்க் ஷாப்புக்கு ஓட்டி வருகிறார்கள். வொர்க்ஷnப் நடத்துகிறவர் கேங்ஸ்டரிடம் வேலை பார்ப்பவர். கார் யாருடையது என்று கேட்கும் அவர், ஜானிடமிருந்து திருடியது என்றதும் கேங்ஸ்டரின் மகனை அடித்துவிடுகிறார். 

கேங்ஸ்டருக்கு விஷயம் தெரிய வருகிறது. அவர் வொர்சாப் ஓனரிடம் பேசுகிறார்.
 
"நீ என் மகனை அடித்தது உண்மையா?"
 
"ஆம்."
 
"எதுக்காக அடித்தாய் என்று நான் கேட்கலாமா?"
 
"உங்கள் மகன் ஜான் விக்கை அடித்துப் போட்டு அவனது நாயை கொன்று காரை திருடி வந்திருந்தான்."
கேங்ஸ்டர் போனை ஆஃப் செய்கிறார். மகன் வருகிறான். அதன் பிறகு ஜான் விக் யார் என்று கேங்ஸ்டர் மகனிடம் விளக்கும் இடம்தான் இந்தப் படத்தின் மிகச்சிறந்த காட்சி.
 
ஜான் விக் கேங்ஸ்டரிடம் வேலை பார்த்தவர். திருமணம் செய்யப் போவதால் அவரிடமிருந்து விலகுவதாக கூறுகிறார். அப்போது யாராலும் செய்து முடிக்க முடியாத டீல் ஒன்றை ஜான் விக்குடன் கேங்ஸ்டர் போட்டுக்கொள்கிறார். கேங்ஸ்டர் மகனிடம் சொல்கிறார்,
 
"அன்றைய இரவு ஜான் விக் கொன்று புதைத்த உடம்புகளின் மீதுதான் இன்று நாம் நின்று கொண்டிருக்கிறோம். அவனது மனைவி இறந்த நாலே நாளில் நீ அவனது நாயை கொன்று காரை திருடி வந்திருக்கிறாய்."
 
இந்தக் காட்சிக்குப் பிறகு நடப்பது எல்லாம் ஒரே டமால் டுமீல்தான். ஒரு காருக்கும், நாய்க்குட்டிக்கும் நடக்கும் இந்த கொலைகள் முடியும் போது நம்மீதும் லேசாக ரத்தவாடை அடிக்கிறதோ என்று சந்தேகம் எழும்.
 
ஜான் விக் 20 மில்லியன் டாலர்களில் தயாராகி அதைவிட ஒரு மடங்கு யுஎஸ்ஸில் மட்டும் வசூலித்தது. யுகேயில் இந்த வருடம் ஏப்ரலில்தான் வெளியாகிறது.
 
இந்த வருடமும் ஹாலிவுட் புதிய கொலையாளிகளை களத்தில் இறக்கும். ராபர்ட் மெக்கல், ஜான் விக்கிடமிருந்து அவர்கள் எந்த விதத்தில் மாறுபடுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.