1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வெள்ளி, 3 ஏப்ரல் 2015 (15:24 IST)

சினி பாப்கார்ன் - தபு மறுத்தார், மதூர் பயந்தார், தீபிகா துணிந்தார்

மததூர் பண்டார்கருக்கு ஏற்பட்ட பயம்
 
மோடி பிரமதரான பிறகு சென்சாரின் பார்வையில் நிறைய மாற்றம். பயன்படுத்தக் கூடாத கெட்டவார்த்தைகள் என்று கொஞ்சம் வார்த்தைகளை பட்டியலிட்டு அனுப்பினார்கள். எதிர்ப்பால் பட்டியல் திரும்பப் பெறப்பட்டது. குடி, புகை மட்டுமின்றி நடிகர்களின் நடை, உடை, பாவனைகளிலும் கத்திரி போட துடிக்கிறது சென்சார். மதூர் பண்டார்கருக்கு இந்த மாற்றங்களைப் பார்த்து ஜுரமே வந்துவிட்டது. ஆகஸ்ட் 7 அவரது, காலண்டர் கேர்ள்ஸ் வெளியாகிறது. கிங் ஃபிஷர் காலண்டரில் டூ பீஸில் தர்பூஸ் கலரில் காட்சியளிக்கும் அழகிகளைப் பற்றிய படமிது.  பயம் வரும்தானே.
 
உடையை காரணம் காட்டி காட்சிகளை கத்தரித்தால், டைட்டில் மட்டும்தான் மிஞ்சும். ஆகஸ்டில் வெளியாகும் படத்துக்கு இப்போதே மீடியாவில் புலம்ப ஆரம்பித்திருக்கிறார். 
 
சென்சார் புத்தியை தீட்டாமல் கத்தியை தீட்டினால் சினிமாக்காரர்களுக்கு கஷ்டம்தான்.

தபு சொன்ன மறுப்பு
 
நிறைமாத கர்ப்பத்துடன் காலை சற்று அகட்டி வைத்து நடக்கும் போலீஸ்கார பழனியம்மாளை மௌனகுரு பார்த்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். மௌனகுருவை இந்தியில் அகிரா என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் முருகதாஸ். 
பழனியம்மாள் வேடத்தில் நடிக்க தபுவை அணுகினார் முருகதாஸ். முக்கியமான கதாபாத்திரம். கர்ப்பமும், கால் அகட்டலும்தான் நெருடியிருக்க வேண்டும். காக்கி உடுப்பு வேண்டாங்க என்று மறுத்திருக்கிறார் தபு. இன்னொரு காரணமும் உண்டு.
 
மலையாள த்ரிஷ்யம் இந்தியில் ரீமேக்காகிறது. மலையாளத்தில் ஆஷா சரத் நடித்த போலீஸ் அதிகாரி வேடத்தை இந்தியில் தபு செய்கிறார். இதிலும் காக்கி, அதிலும் காக்கி. தபுவின் தராசில் த்ரிஷ்யம் தட்டு தாழ, அகிராவுக்கும், முருகதாஸுக்கும் குட்பை.

துணிந்து பேசிய தீபிகா
 
மரபு, கலாச்சாரம் என்று அதிகம் பேசப்படும் இந்த காலத்தில்தான் ஃப்ரீ செக்ஸ் குறித்தும் அதிகம் விவாதிக்கப்படுகிறது.
மை சாய்ஸ் குறும்படத்தில் சில கருத்துகளை துணிந்து அடித்துள்ளார் தீபிகா படுகோன். "பெண்கள் தங்கள் மனதில் எது தோன்றுகிறதோ அதை செய்ய வேண்டும். திருமணத்துக்கு முந்தைய செக்ஸோ பிந்தைய செக்ஸோ எதுவானாலும் மனதில் தோன்றுவதை செய்யுங்கள். எது உங்களை மகிழ்ச்சியாக வைத்து இருக்கிறதோ அதை தாராளமாக செய்யுங்கள்" - இது தீபிகாவின் புதுத்தத்துவம். 
 
பாலிவுட்டில் சென்று, பெண் சுதந்திரம் எது என்றால், ஃ;ப்ரீ செக்ஸ் என்று பதிலளிப்பார்கள். அந்தளவு பெண் சுதந்திரத்தின் அர்த்தம் அங்கு திரிந்து போயிருக்கிறது. திரியும் போது திருத்துகிறவர்களும் இருப்பார்கள்தானே.
 
"பெண்கள் எப்போதும் தாங்கள் நினைத்த உடையை அணிய முடியாது. நினைத்தபடி செக்ஸ் வைத்துக் கொள்ளவும் முடியாது. நினைத்தபடி செக்ஸ் வைத்துக் கொள்வதும், திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்வதும் பெண்களின் முன்னேற்றத்துக்கானது என்று சொல்வதையும் எற்க முடியாது. 
 
"சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் நிறைய பெண்கள் இருக்கிறார்கள். அந்த பெண்களை மேலே கொண்டு வருவதுதான் சுதந்திரம். அந்த சுதந்திரம் அதிகமான பெண்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை" என்று தீபிகாவின் கருத்துக்கு பதிலடி தந்திருக்கிறார் சோனாக்ஷி சின்கா. 
 
அடுத்த தலைமுறை கொடுத்து வைத்தவர்கள்.