வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : செவ்வாய், 10 பிப்ரவரி 2015 (09:35 IST)

சினி பாப்கார்ன் - ஏழை பணக்காரர்களும் கோடீஸ்வர ஏழைகளும்

ஏழை பணக்காரர்களும் கோடீஸ்வர ஏழைகளும்
 
தினம் 26 ரூபாய் சம்பாதித்தால் அவர்கள் தன்னிறைவு அடைந்தவர்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் அவர்களை வைக்க முடியாது என்கிறது மத்திய அரசு. அப்படியே சினிமாவுக்கு வந்தால், இந்திய திரையரங்குகளில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூலித்த சல்மான் கானின் ஜெய்ஹோ தோல்விப்படம் என அறிவிக்கப்படுகிறது. லிங்காவின் வசூல் 200 கோடிக்கு மேல் என்கிறார்கள். ஆனால் படம் நஷ்டம் என்று போர்க்கொடி உயர்ந்துள்ளது. 
 

 
ஒருபுறம் மத்திய அரசு ஏழை பணக்காரர்களை உருவாக்க, இன்னொருபுறம் கோடீஸ்வர ஏழைகள் பெருத்து வருகின்றனர். இந்த கோடீஸ்வர ஏழைகளை வாழ வைப்பதற்காகவே ஏழை பணக்காரர்கள் ஐம்பது ரூபாய் டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு வாங்குகிறார்கள். பதிலுக்கு எங்களை வாழ வைக்கும் தெய்வங்கள் என்ற வாழ்த்து கோடீஸ்வர ஏழைகளால் அருளப்படுகிறது.
 
ஏழை பணக்காரர்கள் ஏழைகளாகவும், கோடீஸ்வர ஏழைகள் பெரும் கோடீஸ்வரர்களாகவும் மாற்றும் இந்த சிஸ்டம் இப்போதைக்கு மாறப் போவதில்லை என்பதுடன், தனிமனித வழிபாடு, கட் அவுட்டுக்கு பால்அபிஷேகம் என அந்த சிஸ்டத்தை மேலும் வலுவானதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் ஏழை பணக்காரர்கள். 
 
கடவுளே இந்த இரு பிரிவிலும் இல்லாதவர்களை மட்டுமாவது காப்பாற்று.
அமீர் கானின் அடுத்தப் படம்
 
கான் நடிகர்களில் யார் முதலிடத்தில் என்ற கேள்விக்கு இடமில்லாமல் செய்துவிட்டது பிகே. பிகேயின் உலகமகா வசூலை இப்போதைக்கு எந்த கான் படமும் முறியடிப்பது போல் இல்லை. அமீர் கானின் அடுத்தப் படம் முறியடித்தால்தான் உண்டு.
 
அமீர் கானின் அடுத்த படம், டங்கால். இதில் 19 வயது சிறுவனாக, 29 வயது இளைஞராக, 55 வயது முதிர்ந்த நபராக என மூன்று வேடங்களில் நடிக்கிறார். மல்யுத்த பயிற்சியாளரை மையமாக வைத்த இந்தப் படம் ஒரு உண்மைக் கதையாம்.
 
ஒரு வேடத்துக்கு 100 கோடி என்றாலும் 300 கோடி வருமே என்று தயாரிப்பாளர் தரப்பு இப்போதே கரன்சி மழையில் நனைய ஆரம்பித்துள்ளது. 
 
இதிலும் தலதான் டாப்பாம்
 
என்னை அறிந்தால் முதல் 4 தினங்களில் சென்னையில் 2.93 கோடிகளை வசூலித்துள்ளது. லிங்கா, அஞ்சான், ஐ படங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவாக தோன்றினாலும், அவையெல்லாம் என்னை அறிந்தாலைவிட அதிக திரையரங்குகளில் வெளியாயின. காட்சிகளும் அதிகம்.
 

 
காட்சிகளை வைத்து கணக்கிட்டால் லிங்கா, ஐ, அஞ்சான் படங்களை பின்தள்ளி முதலிடத்துக்கு வருகிறது என்னை அறிந்தால். இணையத்தில் இந்த கால்குலேஷனை வெளியிட்டு, ஓபனிங் என்றால் தலதான் என கொண்டாடுகிறது ரசிகர்கள் வட்டாரம்.

இரண்டாயிரம் கோடியை நோக்கி...
 
கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் திரை சரித்திரத்தில் அமெரிக்கன் ஸ்னைபர் போல் ஒரு கமர்ஷியல் ஹிட் கிடையாது. இனியும் இருக்கப் போவதில்லை (மனிதருக்கு இப்போதே 85 வயது). 
 

 
உருப்படியான படங்கள் இயக்கிக் கொண்டிருந்தவர், அமெரிக்கர்களையும் அவர்களின் ஆக்கிரமிப்பு போரையும் தூக்கிப் பிடிக்கும் படத்தை செய்து கடைசி காலத்தில், தானும் ஒரு சராசரி அமெரிக்கன்தான் என்பதை காட்டிவிட்டாரே என உலகம் எங்கும் உள்ள ஈஸ்ட்வுட் ரசிகர்கள் புலம்புகின்றனர்.
 
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படம் இதுவரை வடஅமெரிக்காவில் மட்டும் 282 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. ஏறக்குறைய 1700 கோடிகள். விரைவில் இரண்டாயிரம் கோடிகளை படம் எட்டிப் பிடிக்கும் என்கிறார்கள்.