வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 20 அக்டோபர் 2014 (13:16 IST)

தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை

கத்தி
 
முருகதாஸ் - விஜய்யின் துப்பாக்கி பம்பர் ஹிட்டானதால் கத்தி படத்துக்கு இயல்பாகவே எதிர்பார்ப்பு அதிகம். அதற்கேற்ப படம் பிரமாண்டமாக தயாராகியுள்ளது. கொல்கத்தாவில் படப்பிடிப்பை தொடங்கி சென்னை, ஹைதராபாத் உள்பட பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தினார் முருகதாஸ்.
 
விஜய்க்கு இதில் இரு வேடங்கள். சமந்தா ஹீரோயின். வில்லனாக நீல் நிதின் நிதீஷ். அனிருத்தின் இசையில் ஏற்கனவே பாடல்கள் அனைத்தும் ஹிட். அதிலும் விஜய் பாடியிருக்கும் செல்பிபுள்ள சூப்பர்ஹிட்டாகியிருப்பது படத்தின் வெற்றியின் சதவீதத்தை அதிகரிக்க உதவும்.
துப்பாக்கியைவிட கத்தியை பெரிய ஹிட்டாக்க வேண்டும் என்பதே விஜய், முருகதாஸின் விருப்பம். இந்தியாவில் மட்டும் 1000 திரையரங்குகளில் படத்தை வெளியிடுகின்றனர். மதுரை போன்ற சில இடங்களில் முன்பதிவை தொடங்கிய சில மணி நேரங்களில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன. 
 
லைகா எதிர்ப்பாளர்களால் படத்துக்கு அச்சுறறுத்தல் இருந்தாலும் அதையெல்லாம் கடந்து படம் நல்ல ஓபனிங்கைபெறும். பம்பர் ஹிட்டாகுமா என்பது ரசிகர்களை முருகதாஸ் எவ்வளவு தூரம் திருப்தி செய்கிறார் என்பதைப் பொறுத்தது.

பூஜை
 
ஹரியின் வழக்கமான அதே அடிதடி மசாலா. கூட்டுக் குடும்பம், வில்லன், காதல், மோதல் என்று அனைத்தும் இதிலும் உண்டு. எஸ், ஹரியின் பேவரைட் அரிவாள் டாடா சுமோ பறத்தல் எல்லாம் இருக்கிறது. ப்ரியனின் ஒளிப்பதிவு எப்போதும் போல் காட்சிகளின் டொம்போவை கூட்டும். 
விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரிதான் படத்தை தயாரித்துள்ளது. ஸ்ருதி ஹீரோயின். விஷாலின் வெற்றித் தயாரிப்பில் பூஜையும் எளிதாக இணைந்து கொள்ளும். ராதிகா சரத்குமார், சத்யராஜ் போன்றவர்களும் படத்தில் இருக்கிறார்கள். கோம்புத்தூர்தான் படத்தின் களம். கிளைமாக்ஸை பீகாரில் எடுத்துள்ளனர். அங்குள்ள ஒரு மந்திரியையும் நடிக்க வைத்துள்ளனர்.
 
கத்தியைவிட ஒரு ரூபாய் அதிகம் கலெக்ஷன் பார்க்க முடியுமா என்பதே ஹரி, விஷாலின் எதிர்பார்ப்பு. இந்தியாவில் கத்தியைவிட சுமார் 100 திரையரங்குகளில் பூஜை அதிகமாக வெளியிடப்படுகிறது. இது விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் ட்விட்டர் தகவல்.

புலிப்பார்வை
 
வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் பிரவீன் காந்த்தாக இருந்த தற்போது பிரவீன் காந்தி என்று பெயரை மாற்றிக் கொண்டவர் எடுத்திருக்கும் படம். பிரபாகரனின் மகன் பாலசந்திரனை சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்றதால் உலகத்தமிழர் மத்தியில் எழுந்த இரக்கத்தையும், கருணையையும், சோகத்தையும் காசாக்கும் முயற்சிதான் இந்த புலிப்பார்வை.
கத்தி, புலிப்பார்வை இரண்டையும் எதிர்ப்பதாகச் சொன்னவர்கள் இப்போது புலிப்பார்வையை ஓரக்கண்ணால்கூட பார்ப்பது இல்லை. சர்ச்சைக்குரிய காட்சியை வெட்டிட்டோம் என்று வேந்தர் மூவிஸும், பிரவீன் காந்தியும் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
 
ஆனால் பிரச்சனை அதுவல்ல. பிரவீன் காந்தியின் திறமை. சொதப்பல் படங்களை மட்டுமே மகா சொதப்பலாக எடுத்து வந்த இவர் ஈழம் போன்ற சென்சிடிவான விஷயங்களை எந்தளவு சிதைத்திருப்பார் என்பதை போஸ்டரில் பார்க்கும் போதே கிலியாகிறது.
 
இரும்பால் இதயம் உள்ள, காசே கடவுளாகக் கொண்டவர்களால்  ஒருவேளை இந்தப் புலிப்பார்வையை எதிர்கொள்ள முடியும்.
 
இந்தத் தீபாவளிக்கு குறைவான படங்களே வெளியாவதால் கத்தி, பூஜை இரண்டும் போட்ட பணத்துடன் லாபத்தையும் அறுவடை செய்யும் என்று திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு தற்போது வில்லனாக இருப்பது வருண பகவான் மட்டுமே.