வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : செவ்வாய், 1 நவம்பர் 2016 (15:54 IST)

கொடி, காஷ்மோராவின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

தீபாவளிக்கு கொடி, காஷ்மோரா, கடலை உள்பட 4 படங்கள் வெளியாயின. இதில் போட்டி கொடிக்கும், காஷ்மோராவுக்கும்தான். பெண்கள் மட்டுமே நடித்த படம் பாக்ஸ் ஆபிஸ் பக்கத்திலேயே இல்லை.

 
கொடி படத்தின் ஓபனிங் ரெமோவை தாண்ட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார் தனுஷ். அவரது வழிகாட்டுதலில் கொடி வெளியான திரையரங்குகளில் தனுஷின் கட்அவுட் பேனர் தோரணம் என்று ரசிகர்கள் அசத்தியிருந்தனர். கடைசிநேரத்தில் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது கொடிக்கு ஏற்பட்ட பின்னடைவு என்றுதான் சொல்ல வேண்டும்.
 
கொடியைவிட காஷ்மோராவுக்கு திரையரங்குகள் குறைவு. ஆனாலும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் காமெடிக் காட்சிகள் காரணமாக குழந்தைகளையும், பெண்களையும் படம் வெகுவாக ஈர்த்திருக்கிறது. வார நாள்களில் காஷ்மோராவின் வசூல் அதிகரிக்க குறைந்தபட்சம் குறையாமல் இருக்க வாய்ப்புள்ளது.
 
சென்ற வாரம் வெளியான படங்களில் கடலை, முதல் 3 தினங்களில் 2.16 லட்சங்களை மட்டுமே சென்னையில் வசூலித்துள்ளது. 20 காட்சிகள்கூட இதற்கு கிடைக்கவில்லை என்பது சோகமானது.
 
இந்தியா முழுவதும் வெளியான அஜய்தேவ் கானின் ஷிவாய் திரைப்படம் சென்னையிலும் ஓரளவு வசூலித்துள்ளது. சென்ற வாரம் வெளியான இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் 20.25 லட்சங்களை வசூலித்துள்ளது. 
 
இன்னொரு இந்திப் படமான ஏ தில் ஹே முஸ்கில் திரைப்படம் சர்ச்சை காரணமாகவே அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இந்தியின் சமீபத்திய ப்ளாக்பஸ்டர் இந்தப் படம்தான். சென்ற வாரம் வெளியான இந்தப் படம் சென்னையில் முதல் மூன்று தினங்களில் 43.25 லட்சங்களை வசூலித்துள்ளது. 
 
காஷ்மோரா சென்னை சிட்டியில் முதல் மூன்று தினங்களில் 288 திரையிடல்களில் 1.12 கோடியை வசூலித்துள்ளது. இது ரெமோ, இருமுகன் படங்களைவிட மிகவும் குறைவு. 
 
அதேநேரம் கொடி 342 திரையிடல்களில் 1.34 கோடியை வசூலித்துள்ளது. இதுவும் ரெமோவின் அதிரடி வசூலுக்கு முன்னால் குறைவுதான். ரெமோவின் வசூலை கொடி எட்டிப் பிடிப்பது சிரமம் என்பதையே அதன் ஓபனிங் வசூல் காட்டுகிறது. 
 
தீபாவளி படங்கள் இரண்டும் ப்ளாக் பஸ்டர் கிடையாது என்பது நிச்சயம். அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து தந்து ஹிட் லிஸ்டில் இரண்டும் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.