1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜான் பாபுராஜ்
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2016 (11:29 IST)

மோடியால் கோடம்பாக்கத்தில் முராரி ராகம்

ஐயோ அம்மா சத்தம்தான் கோடம்பாக்கம் முழுக்க. ஆனால், ஊமைக்காயம் மாதிரி மௌனமாக அலறுகின்றன பிளாக் மணி மனங்கள்.


 

இந்திய சினிமாவில் உலவும் பணத்தில் பாதிக்கு மேல் கறுப்புப்பணம்தான். ஊழலை ஒழிப்பேன் என்று அரசியல் களத்தில் வேட்டியை மடித்துக்கட்டிய மாவீரர் விஜயகாந்த் இதுநாள்வரை சினிமாவில் புழங்கும் கறுப்புப்பணம் பற்றி வாய் திறந்ததில்லை. சொந்த வீட்டு பாசம்.

மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை பரவலாக திரையிலகம் ஆதரித்தாலும், அடிமடியில கைவச்சிட்டாங்க என்று அலறுகிறவர்கள் நிறைய.

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களில் முறையாக கணக்கு வைத்து வரி கட்டுகிறவர்களில் கமலும், அஜித்தும் முக்கியமானவர்கள். பைசா பாக்கியில்லாமல் வரிகட்டும் ஜென்டிமேன்கள் இவர்கள். ரஜினிக்கும் கவலையில்லை என்கிறார்கள். அவரது பணம் முதலீடாகத்தான் இருக்கிறது, பணமாக இல்லை என்கிறது கோடம்பாக்கம்.

ஆனால், முன்னணி நடிகர்களில் ஒருவர் கணிசமான சம்பளத்தை பணமாகத்தான் வைத்திருக்கிறார். மோடி ஆதரவாளராக தன்னை முதலில் காட்டிக் கொண்ட அவர் இப்போது கனத்த மௌனத்தில் உள்ளார். பதுக்கியது அனைத்தும் எதுக்கும் உதவாத பேப்பராகிப் போனதால் ஆளே நமத்துப் போய் கிடக்கிறார் என்கிறார்கள்.

திரைநட்சத்திரங்கள் தவிர பைனான்சியர்கள் சிலரும் இந்த நடவடிக்கையால் கள்ளப் பணத்தை கணிசமாக இழப்பர் என்கின்றன செய்திகள். நிலத்தில், கட்டிடத்தில், தொழிலில் முதலீடு செய்வர்கள் பிழைத்துக் கொண்டார்கள். இவை எதுவும் தெரியாமல் பணமாகவே வைத்திருந்தவர்கள் மாட்டிக் கொண்டுள்ளனர்.

இதில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது காமெடி நடிகர்தான் என்கிறார்கள். நிலத்தில், கட்டிடத்தில் முதலீடு செய்த அவர், கணிசமான சம்பாத்தியத்தை கட்டு கட்டாக நோட்டுக்களாகத்தான் வைத்திருக்கிறார். களத்தில இல்லன்னாலும் நிஜத்துல நான்தாண்டா புயல் என்று பெருமையடித்துக் கொண்டிருக்கும் அவர் குவித்து வைத்திருக்கும் கரன்சிகளை எப்படி வெள்ளையாக்குவது என்று அறிவிப்பு வந்த நாளிலிருந்தே அல்லு சில்லாகிப் போயிருக்கிறார்.

மோடியால் கோடம்பாக்கம் முழுக்கவே முராரி ராகம்தான் கேட்கிறது... இந்த முராரி நல்லதுக்குதான்.