வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: வெள்ளி, 13 மே 2016 (12:04 IST)

கார்த்தி, மணிரத்னம் - ஒரு கண்ணாமூச்சி ரே...ரே...

கார்த்தி, மணிரத்னம் - ஒரு கண்ணாமூச்சி ரே...ரே...

இதனை படிக்கும் முன் மனதை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள். இடியாப்ப சிக்கலைவிட அதிக சிக்கல்களை உள்ளடக்கியது நாம் பேசப்போகிற விஷயங்கள்.


 
 
மணிரத்னம் படத்தில் கார்த்தி விமானியாக நடிக்கப் போகிறார் அல்லவா? அந்தப் படத்தில் கார்த்தி உடனடியாக நடிக்கப் போவதில்லை. சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய வினோத் இயக்கும் படத்தை முடித்த பிறகே மணிரத்னம் படத்துக்கு வரவுள்ளார் கார்த்தி.
 
மணிரத்னம் தனது படத்தை மகேஷ்பாபு, நாகார்ஜுனை வைத்து எடுக்க நினைத்ததும், பிறகு கார்த்தி, துல்கர் சல்மான் என்று அது மாறியதும், சிறிது நாள் கழித்து கார்த்தி, நானி என்று அது மாற்றமடைந்ததும் அதன் பிறகு கார்த்தி, சாய் பல்லவி என உறுதியானதும், கடைசியில் கார்த்தி, அதிதி ராவ் என நிலைபெற்றிருப்பதும் யாவரும் அறிந்ததே. அதற்குள் விளக்கமாக நுழைந்தால் தலைவலி நிச்சயம். ஆகவே, வினோத்துக்கு வருவோம்.
 
சதுரங்க வேட்டை ஹிட்டானதும் வினோத்தின் அடுத்தப் படத்தை தயாரிப்பதாக ஸ்டுடியோ கிரீன் அவரை வளைத்துப் போட்டது. சூர்யா நாயகன். வினோத்தும் சூர்யாவை மனதில் வைத்து கதை தயார் செய்தார். 
 
இந்நிலையில் உத்தம வில்லன் படத்தை எடுத்து திருப்பதி பிரதர்ஸ் மொட்டையானதும், ஸ்டுடியோ கிரீன் திருப்பதி பிரதர்ஸுக்கு உதவி செய்ய முன் வந்தது. வினோத் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் என அறிவித்தனர். 
 
ஆனால், விநியோகஸ்தர்களின் விருப்ப நாயகன் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகனை வெளியிடவே திருப்பதி பிரதர்ஸுக்கு நாக்கு தள்ளியது. இதில் தொடர்ச்சியாக தோல்விப் படங்களை தரும் சூர்யாவை வைத்து படமெடுத்தால்...? நடக்கவே சாத்தியமில்லாத இந்த டீல் ஆரம்பத்திலேயே உடைந்தது.
 
சூர்யாவுக்கு தயார் செய்த அந்தக் கதையில்தான் தற்போது கார்த்தி நடிக்க உள்ளார். அப்படியானால் ஸ்டுடியோ கிரீன்தானே இந்தப் படத்தை தயாரிக்க வேண்டும்?
 
கார்த்தி வாசன் விஷுவல் வென்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க கால்ஷீட் தந்திருந்தார். பிரபுதேவா அந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. என்னப் பிரச்சனையோ, பிரபுதேவா இப்போது கார்த்தியை இயக்கப் போவது இல்லையாம். அதனால் பிரபுதேவா இடத்தில் வினோத்தை இருந்தி ஸ்டுடியோ கிரீன் வெளியேறியிருக்கிறது.
 
வினோத் இயக்கும் படத்தை முடித்த பிறகே மணிரத்னம் படத்தில் கார்த்தி நடிக்கப் போகிறாராம்.
 
அதற்குள் எத்தனை மாற்றங்கள் வரப்போகிறது என்கிறீர்களா...? மாற்றம்தான் மாறாதது என்று மார்க்ஸ் சும்மாவா சொன்னார்.