1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வெள்ளி, 15 ஜூலை 2016 (13:23 IST)

கபாலி... தாணுவுக்கு வந்தால் ரத்தம், பார்வையாளர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

கபாலி... தாணுவுக்கு வந்தால் ரத்தம், பார்வையாளர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

திருட்டு டிவிடியால் தங்களது படங்கள் நஷ்டத்தை சந்திப்பதாக புலம்பும் தயாரிப்பாளர்கள் ரசிகர்களின் பாக்கெட்களை கொள்ளையடிப்பதை மட்டும் மறைத்துவிடுகிறார்கள்.


 


விஷால் தொடங்கி தாணுவரை ரசிகர்களிடம் திரையரங்குகள் அடிக்கும் கொள்ளையை பற்றி மட்டும் வாய் திறப்பதில்லை. ஒரு படம் வெளியானால் அன்று மாலையே அப்படத்தின் திருட்டு டிவிடி வெளியாகி விடுகிறது. அதேபோல் பல இணையதளங்களில் புதுப்படங்கள் வெளியான அன்றே பார்க்கவும், தரவிறக்கம் செய்யவும் கிடைக்கின்றன. 
 
இதனால் தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. கபாலி விஷயத்தில் இதனை தடுக்க, அதன் தயாரிப்பாளர் தாணு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
ஒருவர் இணையதளம் தொடங்க வேண்டுமென்றால், இணையதள சேவையை வழங்கும் நிறுவனங்கள் மூலமாகத்தான் தொடங்க முடியும். அப்படி இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் 169 இந்தியாவில் உள்ளன. இந்த 169 நிறுவனங்கள் நினைத்தால், திருட்டுத்தனமாக படங்களை பதிவேற்றம் செய்யும் இணையதளங்களை முடக்க முடியும். எந்த இணையதளம் படத்தை பதிவேற்றம் செய்துள்ளது என்று நாம் தேடி கண்டுபிடிப்பதைவிட, இந்த 169 நிறுவனங்களிடம், நீதான் கண்காணித்து இதுபோன்ற இணையதளங்களை தடுக்க வேண்டும், இல்லையெனில் உன்னுடைய உரிமம் ரத்து என மிரட்டினால், அவர்களே திருட்டு பதிவேற்றம் இணையதளத்தில் நடக்காமல் பார்த்துக் கொள்வார்கள். இணையதளம் இருந்தால்தானே எதுவும் செய்ய முடியும்? 
 
அதனால் திருட்டு பதிவேற்றம் செய்கிறவர்கள் கம்மென்று இருந்துவிடுவார்கள். 
 
கபாலியை யாரும் இணையத்தில் பதிவேற்றிவிடாமல் இருக்க, இணையதள சேவை வழங்கும் 169 நிறுவனங்களே பொறுப்பு என்று அவர்களின் தலையில் நீதிமன்றமே பொறுப்பை சுமத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாணு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 
 
தனது லாபம் சிந்தாமல் சிதறாமல் தனக்கே கிடைக்க வேண்டும் என்ற தாணுவின் இந்த முயற்சியில் நமக்கு எந்தப் பிரச்சனையுமில்லை. அதேநேரம், சட்டத்துக்கு புறம்பாக அரசு நிர்யணித்ததைவிட அதிக கட்டணத்துக்கு கபாலி டிக்கெட்கள் விற்கப்படுவதை தடுக்க தாணு என்ன செய்தார்? கபாலிக்கு யு சான்றிதழ் கிடைத்ததால் 30 சதவீத வரிச்சலுகையுடனே படம் வெளியாகும். நீதிமன்ற உத்தரவுப்படி மல்டிபிளக்ஸில் 120 ரூபாய் கட்டணம் என்றால், அதில் முப்பது சதவீதத்தை கழித்தே பார்வையாளர்களிடம் வாங்க வேண்டும். சென்னை தேவி திரையரங்கு தவிர்த்து எந்த மல்டிபிளக்ஸும் 30 சதவீத வரிச்சலுகையை பார்வையாளர்களுக்கு அளிப்பதில்லை. 
 
கேளிக்கை வரியுடன் 120 ரூபாய்க்கே விற்கிறார்கள். அது சட்டவிரோதம். கபாலி படத்துக்கும் இந்த சட்டவிரோதம் கண்டிப்பாக அரங்கேறும். தனது காசுக்கு பாதுகாப்பு தேடும் தாணு, பார்வையாளர்களின் காசு கொள்ளையடிப்பதை பற்றி ஏன் கவலைப்படவில்லை?
 
சில மல்டிபிளக்ஸ்கள் தவிர தமிழகத்தில் உள்ள மற்ற அனைத்து திரையரங்குகளிலும் ரஜினி படத்தின் டிக்கெட் கவுண்டரிலேயே 5,00, 1000 என்றே விற்கப்படுகிறது. இது அப்பட்டமான சட்டமீறல். கபாலிக்கும் அப்படியே விற்கப்படும். இந்த கொள்ளையை குறித்து தாணு ஏன் இன்றுவரை வாய் திறக்கவில்லை? தனக்கு வந்தால் ரத்தம், அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
 
ரஜினி படத்தை முதல் வாரம் இஷ்டப்பட்ட தொகைக்கு விற்க முடியும் என்று சொல்லிதான், ரஜினிபட தயாரிப்பாளர்கள் பெரும் தொகையை விநியோகஸ்தர்களிடமிருந்தும், திரையரங்கு உரிமையாளர்களிடமிருந்தும் வாங்குகிறார்ள். டிக்கெட் கட்டணத்துக்கே படத்தை திரையிடுங்கள் என்றால் தாணு போன்ற தயாரிப்பாளர்களுக்கு லம்பாக லாபம் கிடைக்காது.

மறைமுகமாக இவர்களே அதிக கட்டணத்துக்கு டிக்கெட் விற்க திரையரங்கு உரிமையாளர்களை நிர்ப்பந்திக்கிறார்கள். அதனால்தான், தாணு உள்ளிட்ட எந்த தயாரிப்பாளரும், ரஜினி, விஷால் உள்பட எந்த நடிகரும் திரையரங்குகளின் கட்டண கொள்ளையை கண்டு கொள்வதில்லை. நீதி, நியாயம், எங்கள் உழைப்பை திருடுகிறார்கள் என்றெல்லாம் பேச இவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை.