1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வியாழன், 4 டிசம்பர் 2014 (10:16 IST)

ஜெயமோகனின் திரைக்கதை

உயிர்மையில் சேரனின் தவமாய் தவமிருந்து படம் குறித்து ஜெயமோகன் விமர்சனம் எழுதியிருந்தார். அதில்  அச்சகம் நடத்தும் ராஜ்கிரணை பற்றி குறிப்பிடுகையில், அவரிடம் அச்சடிக்க வரும் திருமண மற்றும் பூப்புனித நீராட்டுவிழா பத்திரிகைகள் அவரது இயந்திர வாழ்க்கைக்கு நடுவில் பூக்கும் பூக்கள் மாதிரி என்றரீதியில் எழுதியிருந்தார். அர்த்தம் இதுதான், வாக்கியம் வேறு மாதிரி. 
 
ஜெயமோகன் தான் உருவாக்கிய சட்டகத்துக்குள் இருந்து அனைத்தையும் மதிப்பிடுகிறார் என்ற எண்ணமே அப்போது ஏற்பட்டது. ஐம்பது திருமண பத்திரிகையும், ஐயாயிரம் கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் ஒரே நேரத்தில் வரும் என்றால் அச்சகம் நடத்துகிறவருக்கு ஐயாயிரம் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்தான் மகிழ்ச்சியை தரும். இது நேரடியான உணர்வு. ஜெயமோகன் அவரது மதிப்பீட்டிலிருந்தே சினிமாவை அணுகிறார். 
 
கடல் திரைப்படத்தில் கொலை செய்ய அஞ்சாத நாயகன் ஒரு பிரசவத்தில் குழந்தை பிறக்க உதவி செய்தவுடன் மனமாற்றமடைகிறான். இறப்பின் ரத்தக்கறை படிந்தவனை பிறப்பின் ரத்தக்கறை மாற்றுகிறது. ஜெயமோகனைப் பொறுத்தவரை அது காவியம். நெருக்கி சொன்னால் தரிசனம். கதையாகவோ கட்டுரையாகவோ எழுதச் சொன்னால் தர்க்கத்தில் ஏறி இதற்கு ஒரு காவியச்சுவையை ஏற்றிவிடுவார். ஆனால் திரைப்படம் சாமானியர்களின் கலை.

அதனாலேயே அசாதாரணமானது. ஒரு மீனவ கிராமத்தில் பதினாறு வயது நிரம்பாத பெண் பிரசவம் பார்க்கிறாள் என்பதே அபத்தம். அவ்வளவு பெண்கள் இருக்கையில் அவள் உதவிக்கு இளைஞன் ஒருவனை துணைக்கு அழைத்துக் கொள்கிறாள் என்பது அதிலும் அபத்தம். தரிசனத்தில் மூழ்கியிருக்கையில் இதுபோன்ற சாதாரண நடைமுறை யதார்த்தத்தை ஜெயமோகன் தவறவிட்டுவிடுகிறார். 
கிறிஸ்தவத்தை குறிப்பிடும் போதெல்லாம் ஜெயமோகன் அதனை நிறுவன மதம் என்றே குறிப்பிடுகிறார். அதே போல் இஸ்லாமையும். அந்த மதங்களை யார் நிறுவியது என்பது திட்டவட்டமானது. இந்து மதம் அப்படியல்ல. யாரால் நிறுவப்பட்டது என்பதே அறியாத தொன்மையுடையது. அதனால் மற்றவற்றைவிட ஏதோ ஒருவிதத்தில் நிகரற்றது. இதனை தனது கட்டுரைகளில் அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறார். கடல் படத்தில் கோவிலிலிருந்து வெளியேற்றப்பட்ட பாதிரியார் - அரவிந்தசாமி - ஒரு ஏசு சிலையை செய்கிறார்.

இந்தக் காட்சிக்கு படத்தில் எந்த முக்கியத்துவமும் இராது. தொடர்சியும் இருக்காது. அந்தக் காட்சியைப் பற்றி எழுதும் ஜெயமோகன், தனது நீணட நாள் கருத்தை அந்த காட்சியின் மீது ஏற்றுகிறார். கோவிலில் இருப்பது நிறுவனமாக்கப்பட்ட ஏசு. அரவிந்த்சாமி செய்வது நிறுவனத்துக்கு வெளியே மக்களால் செய்யப்படும் ஏசு.

இந்த கருத்தை பிரதிபலிக்கும் சின்ன சலனம்கூட அந்தக் காட்சியில் இருக்காது. ஜெயமோகனின் கருத்து - சரியோ தவறோ -  காட்சி மொழியாக மாறுவதில்லை. அதனால்  யானைக்கால் வியாதியாக அது வீக்கத்துடன் ஒட்டாமல் தெரிகிறது. அவரும், இது வியாதியில்லை வெறும் மசில்தான் என்று மீண்டும் மீண்டும் விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார். 
ஜெயமோகனின் திரைக்கதை போதாமை குறித்து அறிய மலையாளத்தில் வெளியான ஒன் பை டூ திரைப்படம் சிறந்த உதாரணமாக இருக்கும். கொடியேற்றம் கோபியின் மகன் பரத் கோபியும், ஃபஹத் ஃபாசிலும் நடித்தது. கதையை முழுக்க விவரித்தால், ஜெயமோகனின் நாவலே தேவலை என்பீர்கள்  (அவ்வளவு பெரிசு). அதனால் ஒன்றே ஒன்று மட்டும். ஒரு வழக்கு. அதனை போலீஸ் அதிகாரி ஃபஹத் ஃபாசில் விசாரணை செய்கிறார். அதற்கு எந்த முகாந்திரமும் தேவையில்லை. 

சின்ன சந்தேகம் அதனால் விசாரிக்கிறார் என்று முடித்துக் கொள்ள கூடியது. ஆனால் ஜெயமோகன் ஃபஹத் ஃபாசிலுக்கு இரண்டு திரைப்படங்கள் தாங்கும் பின்புலம் ஒன்றை படத்தில் அளித்திருப்பார். ஏர்வாடியில் நடந்த தீ விபத்தில் மனநோயாளிகள் கொல்லப்பட்டது தொடங்கி ஃபஹத் ஃபாசிலின் மகன் இறப்பதுவரை. ஹா... நொந்துவிடுவீர்கள். கொசு அடிக்க பீரங்கி. இல்லை, எதற்கும் உதவாத ஆறாவது விரல்.
 
நான் கடவுள், நீர்ப்பறவை படங்கள் கடல் அளவுக்கு சோதிக்காமல் இருப்பதற்கு அந்தப் படங்களின் இயக்குனர்கள்தான் காரணம். ஜெயமோகனின் கிளைக்கதைகளை அவர் அரிந்து நமக்கு தந்திருக்கிறார்கள். நான் கடவுள் படத்தில் கண் தெரியாத நாயகி கன்னியாஸ்திரிகளிடம் அடைக்கலம் புகுகிறாள். அங்கு வரும் வில்லன், கன்னியாஸ்திரிகளிடம் பேரம் பேசுவதாக ஒரு காட்சியை ஜெயமோகன் எழுதியிருந்தார். 

யூதாசுக்கு 30 வெள்ளிக்காசுகள் தந்து ஏசுவை காட்டிக் கொடுக்க வைத்தது போல், முப்பதாயிரத்துக்கு அவளை விடமாட்டீர்கள், மூன்று லட்சம் தந்தால்? என்று கன்னியாஸ்திகளிடம் விலை பேசுவதாக அந்தக் காட்சி எழுதப்பட்டிருந்தது. பாலா அந்தக் காட்சியை நீக்கிவிட்டார் என்று ஜெயமோகனே குறிப்பிட்டிருந்தார். பாலா மட்டும் அதுபோன்றவற்றை நீக்காமலிருந்தால் கடலுக்கு ஏற்பட்டதுதான் நான் கடவுளுக்கும் ஏற்பட்டிருக்கும்.
இதுவரையான ஜெயமோகனின் திரைஆக்கங்களிலிருந்து, தான் உருவாக்கி வைத்த கற்பிதங்களுக்கும், மதிப்பீடுகளுக்கும் திரையில் அர்த்தத்தை கற்பிக்க அவர் முயல்வது தெளிவு . ஆனால், எண்ணத்தை காட்சியாக்கும் திரைக்கதையின் ரசவாதம் இன்னும் அவருக்கு கைகூடவில்லை. திரைக்கதையை பொறுத்தவரை வசந்தபாலன் இன்னும் பலவீனமாகவே இருக்கிறார்.

அவரது படத்தில் உணர்ச்சிகள் தொடர்பில்லாமல் திடீரென தேவைப்படும் கணத்தில் மட்டுமே கொட்டப்படும். அரவான் அதில் சிகரம். இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் காவியத்தலைவனின் திரைக்கதை நன்றாக இருக்கிறது என்றால் மட்டுமே ஆச்சரியம்.