வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (12:59 IST)

இருமுகன் வெற்றியும், கலெக்ஷனும் சிறப்புப் பார்வை

இருமுகன் வெற்றியும், கலெக்ஷனும் சிறப்புப் பார்வை

இருமுகன் வெற்றி தந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் விக்ரம், ஆனந்த் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் ஷிபு. சில தினங்கள் முன்பு படத்தின் சக்சஸ் மீட் நடத்தப்பட்டது. அதில் படத்தின் கலெக்ஷன் குறித்து மனநிறைவாக பேசினார்கள் படம் சம்பந்தப்பட்டவர்கள்.

 
இருமுகன் வெள்ளிக்கிழமைக்கு பதில் வியாழக்கிழமை வெளியானது. அதனால் படத்துக்கு நான்கு நாள் ஓபனிங் கிடைத்தது ஒரு பிளஸ். விக்ரம் ரசிகர்கள் படம் திங்கள்கிழமை வெளியானாலும் பார்க்க தயார். அதன் காரணமாக துணிந்து வியாழக்கிழமை படத்தை வெளியிட்டதில் நல்ல பலன். வியாழக்கிழமை மட்டும் இருமுகன் சென்னை மாநகரில் 58 லட்சங்களை வசூலித்தது. வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று தினங்களில் வசூல் 1.66 கோடி. வியாழக்கிழமை வசூலையும் சேர்த்தால் முதல் நான்கு தினங்களில் 2.24 கோடிகள்.
 
இந்த வருடம் வெளியான படங்களில் கபாலி, தெறிக்கு அடுத்து அதிக ஓபனிங் பெற்ற திரைப்படம் இருமுகன். சூர்யாவின் 24 படம் இதற்குப் பிறகுதான் வருகிறது. இருமுகனின் இன்னொரு பலம், ஓபனிங்குடன் படத்தின் வசூல் படுத்துவிடவில்லை. ரசிகர்கள் இன்னும் ஆர்வமாக திரையரங்கு வருகிறார்கள். சில பத்திரிகைகள் அளித்த எதிர்மறை விமர்சனங்கள், போட்டிக்கு படமில்லாததால் இருமுகனை எதுவும் செய்யவில்லை.
 
சக்சஸ் மீட்டில் பேசிய தயாரிப்பாளர் படம் கடந்த 14 -ஆம் தேதிவரை தமிழகத்தில் 26.5 கோடிகளையும். உலக அளவில் 66 கோடிகளையும் வசூலித்திருப்பதாக கூறினார். அவர் சொன்னது போல் வெளிநாடுகளிலும் படத்துக்கு சிறப்பான வரவேற்பு.
 
யுஎஸ்ஸில் முதல் நான்கு தினங்களில் இருமுகன் 89.54 லட்சங்களை வசூலித்துள்ளது. யுகே மற்றும் அயர்லாந்தில் முதல் நான்கு தினங்களில் வசூல் 36.95 லட்சங்கள். 
 
ஆஸ்ட்ரேலியாவில் வழக்கமாக தமிழ்ப் படங்கள் வசூப்பதைவிட அதிகம், 51.73 லட்சங்கள். மலேசியாவில் முதல் நான்கு தினங்களில் ஒரு கோடியை (1.1 கோடி) படம் கடந்துள்ளது.
 
போட்டிக்கு படம் இல்லாததும், நயன்தாரா, விக்ரமின் நடிப்பும், படம் மீதான எதிர்பார்ப்பும் இருமுகனை வெற்றியடைச் செய்திருக்கிறது. ஆனால், ஆனந்த் ஷங்கரிடம் ரசிகர்கள் இதைவிட எதிர்பார்க்கிறார்கள்.