1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2015 (22:26 IST)

புலிக்காக ஒன்றிணைந்த திரையுலகம்

நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடந்தால் சங்கம் பிளவுபட்டுவிடும் என்று, பத்து வருடங்களாக தேர்தலை நடத்தாமல் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் ஒப்பாரி வைக்கிறார்கள்.
 

 
அடுத்தவர்கள் பதவிக்கு வந்தால் எங்கே நம்முடைய குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற பயம். ஆனால், திரையுலகில் அப்படியொன்றும் ஒற்றுமை கெட்டுவிடவில்லை. புலி படமே அதற்கு சான்று. 
 
புலி மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டது. விஜய் படங்களில் எதற்கும் புலி அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்ததில்லை. அதற்கேற்ப படத்தின் ஓபனிங்கும் அமர்க்களப்படுத்தியது. அதேநேரம் விமர்சகர்களையும், பெருவாரியான ரசிகர்களையும் படம் திருப்தி செய்யவில்லை.
 
ஹாலிவுட்டில் ஆயிரம் இரண்டாயிரம் கோடிகளில் எடுக்கப்படும் படங்கள் இன்று தமிழகத்தின் குக்கிராமம்வரை ஊடுருவியிருக்கிறது. அவதாரும், அவெஞ்சர்ஸும் பார்க்காத தமிழர்கள் குறைவு. புலி போன்ற ஒரு படத்தை அவர்கள் இயல்பாகவே அவதார் போன்ற படங்களுடனேயே ஒப்பீடு செய்கிறார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. அவதாருக்கு தரும் அதே 100 ரூபாயைத்தான் அவர்கள் புலிக்கும் தருகிறார்கள். இன்னும் சொன்னால் புலிக்கு அதிகமாகவே தருகிறார்கள். 
 
தொழில்நுட்பத்தை காட்டி தமிழக ரசிகர்களை வெற்றிக் கொள்வது கடினம் என்ற நிலையில், கதையும், திரைக்கதையும்தான் அவர்களை கட்டிப்போட்டிருக்க வேண்டும். பாகுபலியில் காட்சிகளின் சுவாரஸியம் அதனை செய்தது. சிம்புதேவனின் திரைக்கதை அதில் கோட்டைவிட்டது. படத்தை ரசிகர்கள் பெருமளவு கிண்டலடித்தனர்.
 
எதர்மறை விமர்சனங்கள் படத்துக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வசூலையும் காவு வாங்கிவிடும் என்ற நிலையில், படம் பிரமாதமாக இருக்கிறது என்று அறிவித்தார் ரஜினி. அதேபோல், இயக்குனர் லிங்குசாமியும் படத்தை ரசித்துப் பார்த்ததாக கூறினார்.
 
தமன்னா புலி படத்தைப் பார்த்துவிட்டு, "புலி படத்தை பார்த்தேன், அவ்வளவு அற்புதமாக இருக்கிறது. படத்தில் வரும் பிரம்மாண்ட காட்சிகளை பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்தது. இப்படி ஒரு படைப்பை கொடுத்த விஜய்க்கும் மற்றும் புலி படக்குழுவினருக்கும் என் வாழ்த்துகள்" என கூறியுள்ளார். 
 
புலியைப் பார்த்த சமந்தா, "புலி படத்தை நான் பார்க்கும்போது எனக்கு வேறொரு உலகத்தில் பயணிக்கும் அனுபவம் தந்தது. அந்தளவுக்கு கிராஃபிக்ஸ் மற்றும் பிரம்மாண்ட அரண்மனைகள் அமைந்தன. அதுமட்டுமின்றி இப்படம் குழந்தைகள் மற்றும் பெரியோர்களால் நிச்சயம் வரவேற்க்கப்படும்" என்று கூறினார்.
 
இவர்கள் தவிர டி.ஆர். போன்ற வேறு சிலரும் புலியை பாராட்டி பேசியுள்ளனர். இவர்களெல்லாம் பொதுவாக எந்தப் படத்தையும் இப்படி உடனே புகழ்கிறவர்கள் அல்ல. புலிக்கு தங்களின் ஆதரவை சொல்லும்விதமாகவே இந்தப் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். 
 
ராகவா லாரன்ஸ், தனது ட்ரஸ்டில் படிக்கும் குழந்தைகளை புலி படத்துக்கு அழைத்துச் செல்லவிருப்பதாக கூறியுள்ளார். இது நிச்சயம் புலிக்கு நேர்மறை விளைவை ஏற்படுத்தும்.
 
திரையுலகினர் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். பதவி சுகம் அனுபவிக்கும் சில தனி மனிதர்கள்தான் அந்த ஒற்றுமையை தங்களின் சுயநலத்துக்காக பலவீனமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.