1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : சனி, 27 பிப்ரவரி 2016 (09:51 IST)

முதல்வரை துணிச்சலாக விமர்சிக்கும் திரையுலகம்

முதல்வரை துணிச்சலாக விமர்சிக்கும் திரையுலகம்

துணிச்சல் என்பதெல்லாம் நாமாக சேர்த்து கொண்டது. இதுவரை முதல்வரை துதித்துக் கொண்டிருந்த திரையுலகம், தேர்தல் நெருங்கும் நேரத்தில் லேசாக இந்த ஆட்சியை பற்றி முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறது.


 
 
சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் மைக் பிடித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பொரிந்து தள்ளினார். என்ன விஷயம்?
 
மினிமம் பட்ஜெட் படங்களுக்கு அரசு மானியம் வழங்குகிறது. இந்த மானியத்தை எதிர்நோக்கி கிட்டத்தட்ட 400 தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். மானியம்கோரி ஒரு படத்தை விண்ணப்பிக்கும் போது தயாரிப்பாளர்கள் அரசுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
 
கடந்த எட்டு வருடங்களாக இந்த மானியம் வழங்கப்படவில்லை. அதேநேரம் மானியம் கேட்டு தயாரிப்பாளர்கள் விண்ணப்பித்தபடிதான் உள்ளனர். 
 
சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மானியத்துக்கு பதிவு செய்யும் படங்களை பார்த்துவிட்டோம் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், எட்டு வருடங்களாக எந்த ஆணியும் பிடுங்கப்படவில்லை.
 
நடிகர்கள் சங்கத்தின், தேர்தல் நேரத்தில் நாடகம் போட அனுமதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வலியுறுத்துகின்றனர். ஆனால், தயாரிப்பாளர்கள் சங்கம் இதுவரை மானியம் பெற்றுத் தருவதற்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, அரசை வலியுறுத்தவில்லை என்று காட்டமாக சாடினார்.
 
அதேபோல் அரசு சார்பில் திரைத்துறைக்கு வழங்கப்படும் விருதுகளும் பல வருடங்களாக வழங்கப்படாததையும் அவர் சுட்டிக் காட்டினார்.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்க...............

 


ஆளும் அதிமுக அரசைக் குறித்தும், அதன் செயல்படாதன்மை குறித்து திரைத்துறையினர் வாயே திறப்பதில்லை. இந்நிலையில் சுரேஷ் காமாட்சியின் இந்த பேச்சை துணிச்சலாகவே பார்க்க முடிகிறது.
 
இன்னொரு சம்பவம். நையப்புடை படவிழாவின் போது, அப்படத்தின் நாயகன் பா.விஜய் ராதிகாவை, சின்னத்திரையின் சீஃப் மினிஸ்டர் என்றார். 
 
இன்றைய முதல்வருக்கு இப்படியெல்லாம் தனது பதவியை பங்குப் போடுவது பிடிக்காது என்பது பா.விஜய்க்கு கொஞ்சம் தாமதமாகத்தான் உறுத்தியிருக்கிறது. பேசிவிட்டு சென்றவர், மீண்டும் மைக்கிற்கு வந்து, சி.எம் என்றால் வேறு எதையாவது நினைச்சிக்கப் போறீங்க. சினிமா மேக்னெட்டுங்கிறதைதான் சி.எம்.னு சொன்னேன் என்றார்.
 
எஸ்.ஏ.சந்திரசேகரன் இதற்கு பதிலளிக்கும்விதமாக பேசினார். பா.விஜய் பெரிய தைரியசாலின்னு நினைச்சேன். சி.எம்.னு சொல்றதுக்கு எதுக்கு பயப்படணும்? என்று அந்த மேடையிலேயே கேட்டார்.
 
தலைவா பிரச்சனையின் போதும், விஜய் பிறந்தநாள் கொண்டாட முடியாத போதும் ஆளும் கட்சிக்கு எதிராக வாய் திறக்காமல் இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரன்தான் இப்படி துணிச்சலாக மேடையிலேயே பா.விஜய்யை கேள்வி கேட்டார். 
 
தேர்தல் நெருங்குகிற நேரம் என்பதால் திரையுலகினரின் துணிச்சல் வெளிவந்திருக்கிறதோ?