வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜேபிஆர்
Last Updated : வியாழன், 17 ஜூலை 2014 (11:35 IST)

தமிழ் சினிமாவில் வேட்டி - ஓர் அவசர ட்ரை க்ளீனிங்

சென்னை சேப்பாக்கத்திலுள்ள மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்புக்கு வேட்டி கட்டி சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன், வழக்கறிஞர் காந்தி ஆகியோர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கிளப் விதிகளின்படி வேட்டி அணிபவர்களுக்கு உள்ளே அனுமதியில்லை என இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டது தமிழக அளவில் பிரச்சனையாகி சட்டசபையிலும் எதிரொலித்தது. 
வேட்டின்னா அவ்வளவு கேவலமா என தமிழ் உணர்வாளர்கள் கொதித்துப் போயுள்ளனர். வேட்டி தமிழர்களின் பாரம்பரிய உடையல்லவா? பல மன்னர்கள் வேட்டி அணிந்ததற்கான ஆதாரம் உள்ளது.
 
தமிழகத்தின் சர்ச்சைப் பொருளான வேட்டியை தமிழ் திரையுலகம் இதுவரை எப்படி பயன்படுத்தி வந்திருக்கிறது? அதற்கு கௌரவம் சேர்த்திருக்கிறதா இல்லை இழுக்கை ஏற்படுத்தி வைத்திருக்கிறதா?
 
பொதுவாக ஆண்களின் உடை என்பது அவர்களின் தொழிலையும், கொள்கையையும் வெளிப்படுத்துவதாக இருக்கும். விவரம் தெரிந்த நாள் முதல் இறப்பது வரை கறுப்புச் சட்டையணியும் பெரியார் தொண்டர்கள் எத்தனையோ பேர் இங்குள்ளனர். அவர்களின் கொள்கையின் வெளிப்பாடுதான் அவர்களின் உடை. திரையிலும் வேட்டி கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்பவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
பழைய சினிமா என கொண்டாடப்படும் எம்ஜிஆர், சிவாஜி படங்களில் வேட்டி பெரும்பாலும் இடம்பெற்றதில்லை. அதாவது அவ்விரு நடிகர்களும் வேட்டி கட்டி நடித்த படங்கள் மிகக்குறைவு. படத்தில் குமஸ்தாவாக வந்தாலும் கோட் தான். உரிமைக்குரல் மாதிரி ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். உரிமைக்குரலில் எம்ஜிஆர் விவசாயியாக வருவார். அதனால் வேறு வழியின்றி வேட்டி. அதையும் ஆந்திரா ஸ்டைலில் இரண்டு கால்களையும் இறுக்கிப் பிடித்த மாதிரி கட்டியிருப்பார். அதனை தமிழக வேட்டியுடன் ஒப்பிட முடியாது.
 

கமல், ரஜினி காலகட்டம் இதற்கு மேல். முரட்டுக்காளை, தர்மத்தின் தலைவன், எஜமான், அருணாச்சலம் என்று பல படங்களில் ரஜினி வேட்டி அணிந்து நடித்தார். கேரக்டர்கள்தான் காரணம். முரட்டுக்காளையில் கிராமத்து வேடம். நான்கைந்து தம்பிகளுக்கு அண்ணன். பொறுப்பானவர். அதனால் வேட்டி ஆப்டாக பொருந்தியது.
தர்மத்தின் தலைவனில் அப்பாவி பேராசிரியர். எஜமானில் ஊர் பெ‌ரிய மனிதன். கழுத்தில் ரோஜா மாலையுடன் எஜமானில் ரஜினி நடந்து வரும் போஸ்டர்கள் படம் வெளியான காலகட்டத்தில் மிகப் பிரபலம். வேட்டியை ரஜினி அளவுக்கு தமிழில் வேறு யாரும் ஸ்டைலாக கட்டியிருக்க மாட்டார்கள்.
 
இந்தப் படங்களைப் பார்த்தால் ஒரு ஒற்றுமை தெரியவரும். அப்பாவி, கிராமத்தவன், பொறுப்பானவன், பெரிய மனிதன் போன்ற கதாபாத்திரங்களுக்கு வேட்டியை தமிழ் சினிமா பயன்படுத்தியிருக்கிறது.
தேவர் மகனில் அப்பாவின் மரணத்துக்குப் பின் ஊரின் பொறுப்பை எடுத்துக் கொள்ளும் சக்தி (கமல்) தனது மாடர்ன் உடைகளை விட்டு வேட்டி சட்டைக்கு மாறுவது - அவர் அப்பாவின் பொறுப்பை ஏற்றுக் கொண்டதற்கான குறியீடாகவே வருகிறது. நாயகனில் ஆக்ரோஷமாக இருக்கும் இளமை கமல் வயதாகி நிதானத்துக்கு வந்ததும் வேட்டிக்கு மாறிவிடுகிறார். சராசரி குடும்பத்தலைவனாக இருக்கும் மகாநதி நாயகனும், கிராமத்து சிங்காரவேலனும் வேட்டி கட்டியவர்கள்தான். 

வெள்ளை வேட்டி சட்டைக்கு மரியாதை ஏற்படுத்தி தந்த படம் என்றால் அது சின்னகவுண்டர். அதில் விஜயகாந்தின் வெள்ளை வேட்டி சட்டை ஒரு கதாபாத்திரமாகவே வரும். எத்தனை சிக்கலான வழக்குக்கும் ச‌ரியான தீர்ப்பு சொல்லும் ஊர் தலைவர் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருத்தியது வெள்ளை வேட்டி சட்டை.
வேட்டிக்கு பல குணங்கள் உண்டு. தழையதழைய கட்டினால் பெரிய மனிதன், மரியாதை. தூக்கி தொடை தெரிய கட்டினால் ரவுடி, ரஃபானவன். ராஜ்கிரணின் கரடுமுரடான என் ராசாவின் மனசிலே கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியதில் அவர் தொடைக்கு மேல் ஏற்றிகட்டிய வேட்டிக்கும் பங்குண்டு. 
அவ்வப்போது படத்தின் நாயகர்கள் வேட்டி கட்டிய பொற்காலம் மறைந்துவிட்டது. ஜீன்ஸ் பேன்டும், ஷூவும் அணிந்து தூங்கி எழுகிறவர்கள் இப்போதைய நாயகர்கள். யதார்த்தவகை படங்கள் வந்த பிறகு அழுக்கு வேட்டிக்கு ஆஃபர் அதிகரித்துள்ளது. பருத்தி வீரன் அதனை தொடங்கி வைத்தது. ஆனாலும் வேட்டியைவிட லுங்கிதான் இந்த தலைமுறை சினிமாவுக்கு சௌகரியமாக இருக்கிறது. லுங்கியை தூக்கிக் கட்டி குத்து டான்சுக்கு ஆடினால் சட்டென்று ஒரு லோக்கல் ஃப்ளேவர் கிடைத்துவிடும். வேட்டியில் அது கிடைக்காது. 

தமிழ், கன்னடம், தெலுங்கு சினிமாக்களில் வேட்டிக்கான வாய்ப்பு அருகி வருகிறது. தென்னிந்திய சினிமாக்களில் வேட்டியை முறையாகவும் மிகுதியாகவும் பயன்படுத்தியவர்கள் மலையாளிகள். அதற்கு காரணம் அவர்களின் கலாச்சாரம். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் வெள்ளை முண்டு (வேட்டிக்கு அங்கு பெயர் முண்டு) அணிந்து ஃபாரின் காரில் வந்திறங்கும் மாணவனை சகஜமாக பார்க்க முடியும்.
கல்லூரியை மையப்படுத்திய க்ளாஸ்மேட்ஸ் படத்தில் பிருத்விராஜும், ஜெய்சூர்யாவும் வேட்டிதான் அணிந்து நடித்தார்கள். வேட்டி அரசியல்வாதிகளுக்குரியது என்று இன்னும் கேரளாவில் இடஒதுக்கீடு செய்யாதது அவர்களின் பாக்கியம்.
வேட்டியில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், சுரேஷ்கோபி, திலீப் தொடங்கி பகத் பாசில், நிவின் பாலி என இளைய தலைமுறை வரை கலக்கியிருக்கிறது. என்றாலும் வேட்டி என்றால் அது மோகன்லால்தான். ஸ்படிகம் படத்தில் சண்டையின் போது வேட்டியை உருவி எதிராளியின் முகத்தைச் சுற்றிகட்டி அடிக்கும் மோகன்லாலின் முண்டு ஃபைட் கேரளாவில் மிகப்பிரபலம். ஸ்படிகம் ஆடுதோமாவின் அந்த ஸ்டைலுக்கு இணையாக இதுவரை எதுவும் வந்ததில்லை. வேட்டியை தூக்கிக்கட்டி தொடையை தடவியபடி "ஹா... நீ யாரு நாட்டு ராஜாவோ" என்று வசனம் பேசும் நரசிம்ஹம் மோகன்லாலை எப்போது பார்த்தாலும் மலையாளிகளின் ரோமம் புல்லரிக்கும். 

மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், சுரேஷ்கோபி நால்வரும் நான்குவகை வேட்டி விளம்பரங்களில் நடித்திருக்கிறார்கள். அதை வைத்தே காமெடி நிகழ்ச்சியொன்றை அவர்கள் சினிமா விழாவில் அரங்கேற்றியியுமிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் இவர்களின் வேட்டிக்கு எந்த விலையுமில்லை. மாறாக முண்டு கட்டிய நடிகைகளைப் பார்க்க காலைக்காட்சி படத்துக்கு பதுங்கிச் சென்ற அனுபவம் முக்கால்வாசி தமிழர்களுக்கு இருக்கும்.
மலையாள நடிகைகளின் முண்டு கட்டு மூச்சுத் திணறலை ஏற்படுத்தக் கூடியது. ஸ்வேதா மேனனின் முண்டு கட்டுக்கு மலையாளிகளே விழிபிதுங்கிப் போனார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இளையதலைமுறை நடிகர்களில் பெரும்பாலும் யாரும் வேட்டியில் நடிப்பதில்லை. வேல் படத்தில் கிராமத்தின் பெரிய வீட்டின் பொறுப்பை தூக்கி சுமக்கும் சூர்யா வேட்டி சட்டையில்தான் வருவார். வீரத்தில் நான்கைந்து தம்பிகள் உள்ள அண்ணன் அஜீத்துக்கும் வேட்டிதான் காஸ்ட்யூம்.
விஜய்யின் ஒல்லி உடல்வாகுக்கு வேட்டி சரியான உடை கிடையாது. என்றாலும் எஜமான் ரஜினி போல் மாலை அணிந்து அழ‌கிய த‌மி‌ழ் மக‌னி‌ல் வேட்டியை ட்ரை செய்து பார்த்திருக்கறார். அத‌ன்‌பிறகு மோக‌ன் லாலுட‌ன் இணை‌ந்து நடி‌த்த ‌ஜி‌ல்லா‌வி‌ல் இர‌ண்டு பேரு‌ம் வே‌ட்டி‌யி‌ல் வ‌ந்தது‌ கவரு‌ம் ‌வித‌த்‌திலேயே இரு‌ந்தது. 

2012 ஃபிலிம் ஃபேர் அவார்ட் நிகழ்ச்சியில் கோட் அணிந்தவர்களுக்கு நடுவில் பளீச் வெள்ளை வேட்டி சட்டையில் வந்திருந்தார் தனுஷ். வேட்டி தமிழனின் உடை, அதை அணிவதில் பெருமைப்படுகிறேன் என்று நான்கைந்து பொது நிகழ்ச்சிகளுக்கு வேட்டியில் வந்தார். 2014 ஃபிலிம் ஃபேர் விருது விழாவில், போட்ட சபதத்தையும் கட்டிய வேட்டியையும் ஒருசேர கழற்றி கோட் அணிந்து வந்தது வேட்டிக்கு ஏற்பட்ட பின்னடைவுதான்.
நடிகைகள் வேட்டி கட்டும் போது கிளாமர் ஏறிவிடுகிறது. வரவிருக்கிற பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் வேட்டி சட்டையில் அமலா பால் தோன்றி வேட்டிக்கு புத்துயிர் அளித்துள்ளார். நடிகைகள் வேட்டியை தூக்கி கட்டுகிறார்கள் என்றால் எதிராளியின் விக்கெட் விழப் போகிறது என்று அர்த்தம். பம்மல் கே.சம்பந்தத்தில் சினேகா, அப்பாஸ் ஊடலை இந்த இடத்தில் நினைத்துக் கொள்ளவும். 

 
 

வேட்டியின் ஒன்றுவிட்ட சகோதரன் லுங்கி. லுங்கியை கையில் பிடித்து குத்து டான்சுக்கு ஆடினால் ஒரு பெப் கிடைக்கும். ஆடுகளத்தில் தனுஷை அப்படி ஆட வைத்ததில் ஆடவைத்தவருக்கு தேசிய விருதே கிடைத்தது. சென்னை எக்ஸ்பிரஸில் ஷாருக்கான் லுங்கி டான்ஸ் ஆடியதை பெருமையாக நினைக்கின்றனர். லுங்கிக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் பார்க்கப்படுகிறது. தவறு.
லுங்கி ஒரு லோக்கல் உடை. ஷாருக்கானே அதை உடுத்தி ஆடியிருக்கிறார் என்ற ஆச்சரியத்தின் விளைவுதான் லுங்கி டான்சுக்கு கிடைத்த விளம்பரம். ஷாருக்கான் கோட் அணிந்தால் அது செய்தியாகுமா? பிச்சைக்காரர் கோட் போட்டால் ஆச்சரியம் என்றால் ஷாருக்கான் லுங்கி கட்டினால் வியப்பு. லுங்கியை கொஞ்சம் மட்டமாக நினைப்பதால் உருவான விளம்பரம்தான் லுங்கி டான்சுக்கு கிடைத்தது. அது ஒருவகையான அவமரியாதை. 
 
ஷாருக்கானோ, சல்மான்கானோ லுங்கி, வேட்டியை அணியும் போது எந்த சலனமும் எழாத வகையில் வேட்டியும், லுங்கியும் இயல்பான உடையாக வேண்டும். அதற்கு ஒரேவழி அந்த உடைகளை நாம் புறக்கணிக்காமல் இருப்பதுதான். சென்னை கமலா திரையரங்கில் லுங்கி கட்டியவர்களுக்கு அனுமதி இல்லை என்றதும் எழுத்தாளர் ஞாநி லுங்கியுடன் தியேட்டருக்கு சென்று அந்த விதியை நீக்க வைத்தார்.
சென்னையில் லுங்கியை பிரபலப்படுத்த லுங்கி பாய்ஸ் என்றொரு சங்கமே இயங்குகிறது. மால்கள், மல்டிபிளக்ஸ்களுக்கு லுங்கியில் சென்று லுங்கியை பிரபலப்படுத்துவதுதான் இவர்களின் நோக்கம். இந்தியா போன்ற வெப்பமிகு நாட்டில் வேட்டி லுங்கியின் அருமை தெரியாமலிருப்பது எத்தனை மடத்தனம். 

காஸ்ட்யூம் டிஸைனர்கள் காற்றோட்டமான வேட்டியையும் லுங்கியையும் அனைகா கன்னா போன்ற விதவிதமான பெயர்களில் பெண்கள் அணியும் உடையாக மாற்றி வருகின்றனர்.
சங்கீதா பிஜ்லானியின் இந்த உடையை பாருங்கள். வேட்டியின் நவீன பரிணாமம். ஆக, வேட்டி இப்போது வேறு பரிணாமம் கொண்டிருக்கிறது. அதனை இந்திய வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வைக்க முடியாது.
ஆனாலும் வேட்டியை வேட்டியாக கட்டும் போதுதான் வேட்டிக்கும் மரியாதை கட்டியவருக்கும் சுகம்.