வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : சனி, 14 பிப்ரவரி 2015 (15:18 IST)

வெறி பிடித்த ரசிகர்கள் - காரணம் மீடியாவா? சினிமாவா?

போஸ்டர் ஒட்டி, கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டிருந்த ரசிகர்களின் நாயக வெறி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கட்டுப்பாடில்லாத நாகரிகமற்ற இந்த வெறிக்கு யார் காரணம்?
 
முதலில் சில சம்பவங்களை பார்ப்போம்.
நேற்று தனுஷ் நடித்த அனேகன் ரிலீஸ். ரசிகர்களுடன் படத்தை காண சென்னையிலுள்ள திரையரங்குக்கு வந்தார் தனுஷ். அவரை காரிலிருந்து இறங்கவும் அனுமதிக்கவில்லை ரசிகர்கள். பெரும் கூட்டமாக குவிந்து அவர் காரைவிட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு நெருக்கியடித்தனர். பாதுகாவலர்களால் ஒருவழியாக அவர் காரைவிட்டு இறங்கினாலும் திரையரங்குக்குள் அவர் நுழைவதற்குள் நசுக்கி நாறடித்துவிட்டனர்.
 
இந்த வெறி பிடித்த செயலால் திரையரங்கு கண்ணாடிகள் உடைந்தன. தனுஷ் வந்த காரும் சேதப்படுத்தப்பட்டது. ஒரு இடத்தில் அல்ல, பல இடங்களில்.
 
திருப்பதில் உள்ள திரையரங்கு ஒன்றில் அதிகாலை ஐந்து மணிக்கு ஜுனியர் என்டிஆர் நடித்த டெம்பர் படத்தை திரையிடுவதாக அறிவித்திருந்தனர். படத்தை திரையிட சிறிது காலதாமதமானதால் ரசிகர்கள் திரையரங்கை சூறையாடினர். பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.
கட்டுப்பாடில்லாத ரசிகர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு யார் காரணம்?
 
நிச்சயமாக மீடியாவுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த உலகில் சாதனை படைத்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறhர்கள். கலையில் சிகரம் தொட்டவர்கள் இருக்கிறார்கள். தொழில்நுட்பத்துறையில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்கள் இருக்கிறார்கள். இப்படி மருத்துவம், விஞ்ஞானம், பத்திரிகை, கவிதை, ஓவியம் என்று எத்தனையோ துறைகள், எத்தனையோ சாதனையாளர்கள்.
 
ஆனால், சினிமாக்காரர்களுக்கு தரப்படும் முக்கியத்துவத்தில் ஒரு சதவீதம்கூட இவர்களுக்கு தரப்படுவதில்லை. இங்கு நடிகர் என்றால் அது சினிமா நடிகர் மட்டும்தான். நவீன நாடகத்துறையில் முருகபூபதி போன்ற எத்தனையோ இளைஞர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களிடையே எத்தனையோ நல்ல நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் மீடியாவின் கண்களுக்கு தெரிவதில்லை.
 
அதேபோல் எழுத்தாளர் என்றால் சினிமாவுக்கு கதை எழுதுகிறவர்கள், கவிஞர்கள் என்றால் சினிமாவுக்கு பாடல் எழுதுகிறவர்கள். நுண்கலை வித்தகர்கள் என்றால் சினிமாவின் கலை இயக்குனர்கள். இவர்களைத் தாண்டி சமுத்திரமாக விரிந்துகிடக்கும் கலை வெளியையோ, கலைஞர்களையோ மீடியாக்கள் அறிமுகப்படுத்துவதே இல்லை.

சினிமாக்காரர்கள் மட்டுமே நாயகர்களாக கொண்டாடப்படும் உலகில் அவர்களை தெய்வங்களாக பார்க்கும் மடையர்களும், வெறியர்களும்தான் உற்பத்தியாவார்கள். சினிமாக்காரர்களைப் பற்றி எழுதினால் மட்டுமே படிக்கிறார்கள், பார்க்கிறார்கள் என்று மீடியா தப்பித்துக் கொள்ள முடியாது. சினிமாக்காரர்கள் தவிர்த்து முதலில் எதையாவது அவர்களுக்கு தந்து பாருங்கள். சினிமா குறைவாக இடம்பெறும் செய்தி சேனல்கள் இதே நாட்டில்தான் லாபகரமாக செயல்படுகின்றன. 
பார்வையாளர்களும் சினிமா நட்சத்திரங்களை இயல்பாக எதிர்கொள்ள பழக வேண்டும். அவர்களும் நம்மைப் போலதான் என்ற புரிதல் வேண்டும். இயல்புக்கு மாறான அவர்களின் அடிதடிகளையும், சவடால்களையும் வெளிப்படையாகவே விமர்சித்து ஒதுக்க வேண்டும். இது சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இணைந்து செய்ய வேண்டிய மாற்றம். 
 
அடுத்தவர்களை குறை சொல்லாமல் முதலில் தன்னளவில் ஒவ்வொருவரும் மாற வேண்டும். மாறுவோம், மாற்றத்தை உண்டாக்குவோம்.