1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: செவ்வாய், 31 மே 2016 (13:22 IST)

தணிக்கை தேவையா...?

தணிக்கை தேவையா...?

இந்தியாவில் நிலவிவரும் தணிக்கைமுறை குறித்து நீண்டகாலமாக விவாதம் நடந்து வருகிறது. 


 
 
அதிகாரவர்க்கத்தை சேர்ந்தவர்களும், அவர்களை ஆதரிப்பவர்களும் தணிக்கையை வலியுறுத்த, கலைஞர்கள் மறுபுறம் தணிக்கையை தீவிரமாக எதிர்க்கிறார்கள். தணிக்கைத்துறையை மேம்படுத்த மத்திய செய்தி ஒளிபரப்புதுறை சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 
 
நடிகை நந்திதா தாஸ் தணிக்கைதுறை குறித்து கடுமையான சில கருத்துகளை முன்வைத்துள்ளார். 
 
"சினிமா படங்களுக்கு தணிக்கை குழுவில் சான்று பெறுவது சிரமமாக இருக்கிறது. ஒரு படத்தை உலகம் முழுவதும் 200 கோடி இந்தியர்கள் பார்க்கிறார்கள். அந்த படத்துக்கு என்ன சான்று அளிப்பது என்று தணிக்கை குழுவில் உள்ள 5 பேர் முடிவு செய்கிறார்கள். இது நியாயமாக தெரியவில்லை. எனக்கு பிடிக்கும் படம் இன்னொருவருக்கு பிடிப்பது இல்லை. மற்றவருக்கு பிடிக்கும் படத்தை நான் பார்ப்பது இல்லை. இப்படி விருப்பங்கள் மாறுபடுகிறது.
 
இந்த நிலையில் நல்ல படமா? இல்லையா? என்பதை மக்கள் முடிவுக்கு விட்டு விடுவதே சிறந்தது. இணையதளங்களில் எல்லாமே கிடைக்கிறது. எனவே தணிக்கை குழுவில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். தணிக்கை குழுவுக்கு பதிலாக ரேட்டிங் முறையை கொண்டு வரலாம். எது நல்ல படம், எது மோசமான படம் என்பதை தணிக்கை குழுவில் உள்ள 5 பேர் முடிவுசெய்வதற்கு பதிலாக மக்கள் முடிவுக்கு விட்டு விடலாம்.
 
திரைக்கு வந்த பல படங்களில் வன்முறை அதிகமாக உள்ளன. ஆபாசமான வசனங்கள் இடம்பெற்று உள்ளன. பெண்கள் தவறான முறையில் சித்தரிக்கப்பட்டு உள்ளனர். அந்த படங்களுக்கு எப்படி சான்று அளிக்கப்பட்டது என்று புரியவில்லை. தணிக்கை குழுவால் பயர், வாட்டர் போன்ற படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு அதனை வெளிக்கொண்டு வர மிகவும் கஷ்டப்பட்டோம்.
 
எனவே தணிக்கை குழு தேவையில்லை. எந்த படத்தை பார்க்கலாம் எதை பார்க்க கூடாது என்பதை மக்கள் முடிவுக்கு விட்டு விடவேண்டும். படத்தை ஒருவர் பார்த்து விட்டு நல்ல படம் இல்லை என்று சொன்னால் அந்த படத்தை பார்க்க யாரும் போக மாட்டார்கள். தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் எது சரி எது தவறு என்று தெரியும். தணிக்கை குழு சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை."
 
-நந்திதா தாஸ் தனது பேச்சில் குறிப்பிடும் ரேட்டிங் முறை யுஎஸ்ஸில் அமலில் உள்ளது. அங்கு தயாராகும் திரைப்படங்கள் 13 வயதுக்கு கீழ், மேல் என்று ரேட்டிங் முறைப்படித்தான் வெளியிடப்படுகிறது. ஆர் ரேட்டிங் கிடைத்தால் அது குழந்தைகள் பார்க்கத் தகந்தவை அல்ல. 
 
ஆனால், இந்த ரேட்டிங் முறையிலும் நிறைய குளறுபடிகள் உள்ளன. இவை அரசால் தரப்படுபவை அல்ல. கார்ப்பரேட் ஸ்டுடியோக்களின் ஆதிக்கம் இதில் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
 
இந்தியாவைப் பொறுத்தவரை தணிக்கைக்குழு என்பது பலநேரம் சூழலையும், கலையையும் புரிந்து கொள்ளாத ஒன்றாகவே செயல்படுகிறது. இந்தியாவில் புகைப்பிடிக்கும், மது அருந்தும் ஒருவரை நீங்கள் அன்றாட வாழ்வில் மிக சகஜமாக பார்க்க முடியும். ஆனால், அதனை திரையில் காண்பிக்கக் கூடாது, காண்பித்தால் எச்சரிக்கை வாசகம் வைக்க வேண்டும் என்பது அர்த்தமில்லாத விதிமுறை. இதேபோல் அர்த்தமில்லாத விதிமுறைகளின் கிடங்காக தணிக்கைக்குழு உள்ளது.
 
இந்தியாவில் தணிக்கைச் சான்று என்பது படத்தின் வியாபாரத்தோடும் தொடர்புடையது. உதாரணமாக தமிழகத்தில் யு சான்றிதழ் வாங்கினால் மட்டுமே 30 சதவீத வரிச்சலுகை பெற முடியும். இந்த வரிச்சலுகையின் பலனை பார்வையாளர்களுக்கு தராமல் திரையரங்குகளும், தயாரிப்பாளர்களும், தயாரிப்பாளர் மூலம் நடிகர்களும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். இதனால், யு சான்றிதழ் பெறாத படத்தை வெளியிட திரையரங்குகள் தயக்கம் காட்டுகின்றன. மாஸ் நடிகர்களின் படங்கள் தவிர்த்து சின்ன படங்கள் யு சான்றிதழ் பெறவில்லை எனில் அவற்றின் வெளியீடே கேள்விக்குறியாகிவிடும். 
 
சமூக அவலத்தை பேசுவதும், அதனை சுட்டிக் காட்டுவதும் நேரடியாக ஆளும் அதிகாரவர்க்கத்தை குற்றப்படுத்துவதால் அத்தகைய படங்கள் தணிக்கையில் நெருக்கடிக்குள்ளாகின்றன. ஆளும் கட்சியின் மனதுக்கு உகந்தவர்களே தணிக்கைத்துறையில் நியமிக்கப்படுவதால் அதுவொரு அரசு சார்பு துறையாகவே செயல்படுகிறது. ஆவணப்படங்களையும் தணிக்கை செய்ய வேண்டும் என்பது கலைஞனின் உரிமையில் நேரடியாக கை வைப்பதாகும்.
 
எப்படிப் பார்த்தாலும் தணிக்கைத்துறை என்பது கலைஞனின் சுதந்திரத்தை பாதிக்கும் ஒன்றாகவே இருக்கிறது. தணிக்கை இல்லாவிடில் பொறுப்பற்ற சிலர் மோசமான படங்களை எடுக்கக் கூடும்தான். ஆனால், அந்த மோசமானவர்களை முன்னிட்டு நியாயமாக படம் எடுப்பவர்களையும் ஒடுக்குவது நியாயமா என்பதே அனைவரது கேள்வியும்.