15 வருடங்களை கொண்டாடும் த பாஸ்ட் அண்ட் தி ஃபியூரியஸ்
15 வருடங்களை கொண்டாடும் த பாஸ்ட் அண்ட் தி ஃபியூரியஸ்
ஹாலிவுட்டின் வெற்றிகரமான சினிமா சீரிஸ்களில் ஒன்று, தி பாஸ்ட் அண்ட் தி ஃபியூரியஸ். இதுவரை மொத்தம் ஏழு பாகங்கள் வெளிவந்துள்ளன.
மூன்றாவதாக வெளிவந்த, தி பாஸ்ட் அண்ட் தி ஃபியூரியஸ் - டோக்கியோ ட்ரிஃப்ட் படம்தான் ஏழில் மிகக்குறைவாக வசூலித்த படம். 85 மில்லியன் டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் யுஎஸ்ஸில் 62.5 மில்லியன் டாலர்களையும், வெளிநாடுகளில் 95.9 மில்லியன் டாலர்களும் வசூலித்தது. மொத்தமாக 158.5 மில்லியன் டாலர்கள். மிகக்குறைவாக வசூலித்த படமே பட்ஜெட்டைவிட ஒரு மடங்கு அதிகம் வசூல் செய்தது.
இந்த சீரிஸ் உருவாக காரணமாக அமைந்தது மூன்று படங்கள். பாயின்ட் பிரேக், டோனி ப்ராஸ்கோ மற்றும் வெஸ்ட் சைட் ஸ்டோரி. மூன்றும் நிழல் உலகை பற்றியது. போலீஸ் அதிகாரிக்கும் நிழல் உலகத்துக்கும் உள்ள தொடர்பை பல்வேறு கோணங்களில் சொன்னவை. இதேபோன்று ஒரு படம் உருவாக்க வேண்டும் என்றிருந்த போது அதற்கு வடிவம் தந்தது, 1998 -இல் 'வைப்' மேசினில் வெளியான 'ரேசர் எக்ஸ்' என்ற கட்டுரை. தெருவில் ரேஸ் நடத்துகிறவர்களைப் பற்றிய இந்த கட்டுரை தி பாஸ்ட் அண்ட் தி ஃபியூரியஸ் சீரிஸுக்கு ஒரு வடிவத்தை தந்தது.
இதுவரை ஏழு பாகங்கள் வெளிவந்திருக்கும் இந்த சீரிஸில் வின் டீசலும், பால் வால்கரும்தான் முக்கிய நாயகர்கள். ஏழாவது பாகத்தின் படப்பிடிப்பின் போது, கார் விபத்தில் பால் வால்கர் மரணமடைய, எட்டாவது பாகம் அவரில்லாமல் தயாராகிறது. பால் வால்கர் ஏற்று நடித்த பிரைய்ன் ஓ கான்னர் கதாபாத்திரத்தில் நடிக்க மார்க் வால்பெர்க், கிறிஸ்டியன் பேல் உள்பட பல நடிகர்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் பால் வால்கரை ஒப்பந்தம் செய்தனர். அந்த கதாபாத்திரத்தை தனது அலட்டலில்லாத நடிப்பில் பால் வால்கர் உயிரூட்டினார்.
கார் ரேஸை மையப்படுத்தியது என்பதால் வின் டீசல் படப்பிடிப்புக்கு முன் லாஸ் வேகாஸில் உள்ள ஸ்டன்ட் டிரைவிங் ஸ்கூலில் பயிற்சி பெற்றார். அதனால் யாரைவிடவும் அவர்தான் படத்தில் ஒரு சிறந்த ரேஸ் வீரராக தெரிந்தார்.
ஆறாவது பாகத்துக்குப் பிறகு ஏழாவது பாகத்தை யார் இயக்குவது என்ற கேள்வி எழுந்தது. ஜேம்ஸ் வானை ஒப்பந்தம் செய்தனர். ஜேம்ஸ் வான் ஹாரர் படங்கள் இயக்குவதில் பெயர் பெற்றவர். த கான்ஜுரிங் படத்தை இயக்கியவர். ஷா சீரிஸை உருவாக்கியவர். ஆக்ஷன் படத்தை அவர் எப்படி இயக்குவார் என்ற சந்தேகம் இருந்தது.
ஏழாவது பாகத்தின் ட்ரெய்லர் வெளியானதும் கேள்விகள் மறைந்தன. உலகம் முழுவதும் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியது. இந்தியாவில் ஏழாவது பாகம் 100 கோடிகளை கடந்து வசூலித்தது. இதுதான் இந்த சீஷாஸிலேயே அதிகம் வசூலித்த படம். 190 மில்லியன் டாலர்களில் தயாரான இப்படம் யுஎஸ்ஸில் 353 மில்லியன் டாலர்களையும், வெளிநாடுகளில் 1,163 மில்லியன் டாலர்களையும் வசூலித்தது. மொத்தமாக 1.516 பில்லியன் டாலர்கள். ஆறாவது பாகத்தைவிட கிட்டத்தட்ட ஒரு மடங்கு அதிக வசூல்.
இந்த சீரிஸின் முதல் பாகம், தி பாஸ்ட் அண்ட் தி ஃபியூரியஸ் ஜுன் 22, 2001 -இல் வெளியானது. நேற்று இப்படம் 15 வருடங்களை நிறைவு செய்தது. தற்போது எட்டாவது பாகத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கேரி கிரே இயக்குகிறார். த நெகோஷியேட்டர், தி இதாலியன் ஜாப், லா அபைடிங் சிட்டிசன் போன்ற சிறந்த ஆக்ஷன் படங்களை இயக்கியவர்.
ஏழாவது பாகத்தின் ஒன்றரை பில்லியன் வசூலை படம் கடந்தால் அதுவே சாதனைதான்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்