1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : செவ்வாய், 12 மே 2015 (09:46 IST)

சினி பாப்கார்ன் - நேரடியாக மோதிய இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர், இயக்குனர் மோதல்
 
டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் தேவையில்லாமல் இயக்குனர்களை வம்புக்கிழுத்தார் இப்ராஹிம் ராவுத்தர். இயக்குனர்கள் மோசமான படங்கள் எடுத்து தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்துகிறார்கள் என்றார் அவர். உண்ணாவிரதத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாத விமர்சனம்.
 
இப்ராஹிம் ராவுத்தார் இப்படிச் சொன்னதும் இயக்குனர்கள் சங்கத் தலைவர் உண்ணாவிரதப் பந்தலைவிட்டு வெளியேறினார். ராவுத்தர் எல்லா இயக்குனர்களையும் குற்றப்படுத்தவில்லை, சிலரைத்தான் அப்படி சொன்னார் என்ற விளக்கத்தை இயக்குனர்கள் ஏற்பதாக இல்லை.
 
பெட்டிக்கடை வைக்கும் ஒருவர் அது குறித்த குறைந்தபட்ச அறிவு உள்ளவராகதான் இருப்பார். ஆனால், பல கோடிகள் முதலீட்டில் படம் தயாரிக்க வருகிறவர்களுக்கு சினிமா குறித்த அடிப்படை அறிவு இருப்பதில்லை. சினிமா வர்த்தகம் குறித்து தெரியுமா என்றால் அதுவுமில்லை. தமிழகத்தில் எத்தனை திரையரங்குகள் உள்ளன? எத்தனை திரையரங்குகள் ரிலீஸ் படங்களை வெளியிடுகின்றன? இந்த அடிப்படை கேள்விகளுக்கான பதில் 80 சதவீத தயாரிப்பாளர்களுக்கு தெரியாது.
 
நல்ல கதை எது, எது ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்பதை கணிக்க முடியாமல் அரைகுறைகளுக்கு வாய்ப்பு தரும் தயாரிப்பாளர்களால்தான் தமிழ் சினிமா சீரழிகிறது. நல்ல கதையையும் காமெடி இல்லை காதல் இல்லை சண்டை இல்லை என்று சீரழிந்த சினிமா ஃபார்முலாவுக்கு மாற்றுவதும் இவர்கள்தான். 
 
முதலில் திருந்த வேண்டியது இயக்குனர்கள் அல்ல, தயாரிப்பாளர்கள்.

ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா
 
மலையாளத்தின் கமர்ஷியல் படங்களும் வித்தியாசமாக ரசிக்கிற மாதிரி வருகின்றன. தமிழில் சிறந்த முயற்சி என்று சொல்லப்படும் வகை படங்கள் மலையாளத்தில் சுமாரான படங்கள் என்ற முத்திரையுடன் வெளியாகின்றன. 
சமீபத்தில் வெளியான படம், ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா. வினீத் சீனிவாசன், நிக்கி கல்ராணி, செம்பன் வினோத் ஜோஸ் நடித்தது. கைதிகளான வினீத்தையும், செம்பனையும் கண்ணூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு ரயிலில் இரு போலீஸ்காரர்கள் அழைத்து வருகிறார்கள். அந்த பயணத்தில் நடக்கும் சம்பவங்கள்தான் அந்தப் படத்தின் கதை.
 
ஜெக்ஸன் ஆண்டனி, ரெஜீஸ் ஆண்டனி இணைந்து இயக்கியிருக்கும் இந்தப் படம் பரவலான வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒரு இரண்டாம் வகுப்பு ரயில் பயணத்தை சுவாரஸியமாக படமாக்க முடியும் என்பதற்கு இந்தப் படம் நல்ல உதாரணம். 
 
தமிழிலும் இப்படிப்பட்ட வித்தியாசமான முயற்சிகளை முயன்று பார்க்கலாம்.

மனுவை பற்றிய வெளிப்படையான விசாரணை
 
அனுஷ்கா சர்மா தயாரித்து நடித்த படம், என்ஹெச்10. விமர்சகர்களின் பரவலான பெற்ற இந்தப் படம் கௌரவ கொலையை பற்றியது. ஒரு கிராமமே கௌரவ கொலைக்கு துணை போகிறது. 
 
கிராமத்து தலைவரின் மகள் வேறொரு சாதிப் பையனை காதலிக்க அப்பெண்ணின் தாயின் கட்டளையின் பேரில் அவளது அண்ணனும், மாமாவும், நண்பர்களும் அடித்தும், விஷம் தந்தும் இருவரையும் கொலை செய்கிறார்கள். ஒரே சாட்சி அனுஷ்கா சர்மாவும், அவரது கணவரும்.
ஊரின் போலீஸ் அதிகாரியும் இந்த கௌரவ கொலைக்கு உடந்தை. இந்த கதையோ காட்சியோ அல்ல முக்கியம். போலீஸ் அதிகாரி மனு குறித்து சொல்லும் விளக்கம். சமூகத்துக்கு அம்பேத்கரின் சட்டம் உள்ளது போல் மனுதர்மமும் மக்களை நல்வழிப்படுத்துகிறது. அதனை கடைபிடிக்க வேண்டும் என்று கௌரவ கொலைக்கு ஆதரவாக மனுதர்மத்தை மேற்கோள் காட்டி வாதிடுகிறார். படத்தில் இந்த உரையாடல் எதிர்மறையாகவே காண்பிக்கப்படுகிறது. 
 
விஷயம் இதுதான். இதுபோன்ற ஒரு வசனத்தை இந்திப் படத்தில் வைக்க முடிகிறது. தமிழில் இது சாத்தியமா? டாஸ்மாக்கின் கேடினை பற்றி பேசினால் அது அரசாங்கத்துக்கு எதிரானது என்று கத்தரித்துவிடுகிறார்கள். பக்கத்து மாநிலம் கேரளாவில் அரசையும், அரசின் சாராய வியாபாரத்தையும் கடுமையாக விமர்சித்து படங்கள் வருகின்றன. 
 
தமிழகத்தைப் போன்று தமிழக தணிக்கைக்குழுவும் விமர்சனத்துக்கு அஞ்சுவது கவலைக்குரியது.