1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : செவ்வாய், 19 மே 2015 (20:37 IST)

அனுராக் காஷ்யபும் வெகுஜன ரசனை என்ற வன்முறையும்

அனுராக் காஷ்யப் இயக்கிய பாம்பே வெல்வெட் திரைப்படம் தோல்வியடைந்ததை முன்னிட்டு பெருவாரியான ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள். தொலைந்தான் அனுராக் என்பதாக இருக்கிறது அவர்களின் விமர்சனம்.
 
பாம்பே வெல்வெட்டைவிட பிரமாண்ட தோல்விகளை இந்தி சினிமா அனுபவப்பட்டிருக்கிறது. எனில் அனுராக்கின் மீது ரசிகர்களுக்கு ஏன் இந்த கொலைவெறி கோபம், தாக்குதல்? 
 

 
 
ராம் கோபால் வர்மாவின் சத்யா படத்தின் திரைக்கதையை வர்மாவுடன் இணைந்து எழுதி தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் அனுராக் காஷ்யப். அப்போதும், இப்போதும் அவரை செலுத்திக் கொண்டிருப்பது சினிமா மீதான மோகம் மட்டுமே. மோகம் என்றால் ஒருவித மேட்னெஸ், சினிமா மீதான பைத்தியக்காரத்தனமான ஈடுபாடு. 
 
அனுராக் இயக்கிய முதல் படம் Paanch -ஐ பார்க்கத் தகுந்தது அல்ல என்று சென்சார் சான்றிதழ் தராமல் நிராகரித்தது. நான்கு வருடப் போராட்டங்களுக்குப் பிறகு அவரது இரண்டாவது படம், ப்ளாக் ப்ரைடே வெளியானது. மும்பை குண்டு வெடிப்பு பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படம் இந்தியாவுக்கு வெளியே இந்திய சினிமாவுக்கு நற்பெயரை ஏற்படுத்தி தந்த சொற்ப படங்களில் ஒன்று.
 
வெளியாகாத முதல் படம் மற்றும் பாம்பே வெல்வெட் தவிர்த்து இதுவரை 11 படங்கள் இயக்கியிருக்கிறார் அனுராக். இந்த பதினொன்றுமே மிக முக்கியமான திரைப்படங்கள். இந்தி சினிமாவின் வழக்கமான கமர்ஷியல் பாதையிலிருந்து தங்களை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டவை. நண்பர்களுடன் இணைந்து அனுராக் உருவாக்கிய பாண்டம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த பெரும்பாலான படங்களும் கமர்ஷியல் சினிமாவிலிருந்து மாறுபட்டவை.  
 
மேலும் அடுத்தப் பக்கம்...

பாம்பே வெல்வெட்டை அதிக பொருட்செலவில் ரன்பீர், அனுஷ்கா சர்மா போன்ற இந்தி சினிமாவின் மைய நீரோட்ட நட்சத்திரங்களை வைத்து அனுராக் எடுத்தார். கரண் ஜோஹர், ரோஹித் ஷெட்டி போன்றவர்களின் கமர்ஷியல் படங்களைப் போல பாம்பே வெல்வெட் ரசிகர்களை என்டர்டெய்ன் செய்யவில்லை. அனுராக்கின் பிற படங்களைப் போல காத்திரமான கதையையும் காட்சிகளையும் அப்படம் கொண்டிராததால் அவரது வழக்கமான ரசிகர்களும் படத்தை புறக்கணித்தனர்.
 

 
இன்டெலக்சுவல் பிம்பத்துடன் விளங்கிய அனுராக்கின் இந்தத் தோல்வி கமர்ஷியல்பட ரசிகர்கள் பல்லாண்டுகளாக ஏங்கித் தவித்த வாய்ப்பு. நான் நீ என்று போட்டி போட்டு அவர் மீது கல்லெறிகின்றனர்.
 
இதே சூழலை எதிர்கொண்ட இன்னொரு சினிமா பிரபலம், மலையாள இயக்குனர் ஆஷிக் அபு. ஆஷிக்கின் படங்கள் அவருக்கு இன்டெலக்சுவல் பிம்பத்தை அவர் கேட்காமலே தந்தன. அவரது படங்களில் வரும் பெண் கதாபாத்திரங்கள் கலாச்சாரத்தை மீறுவதாக முணுமுணுக்கப்பட்டது. அதைப் பொருட்படுத்தாமல் பெரிய நட்சத்திரங்களை அணுகாமல் தனது பாணியில் படங்களை எடுத்தார் ஆஷிக்.
 

 
அனுராக்குக்கு பாம்பே வெல்வெட் என்ற விபத்து ஏற்பட்டது போல், ஆஷிக் அபுவுக்கு கேங்ஸ்டர் திரைப்படம் அமைந்தது. மம்முட்டியை வைத்து அவர் எடுத்த அப்படம் பாம்பே வெல்வெட்டைப் போல, அவரது ரசிகர்களையும், பொது ரசிகர்களையும் ஒருசேர சோதித்தது. படம் தோல்வி. அப்போதும், தொலைந்தான் ஆஷிக் என்று பெருவாரியான ரசிகர்கள் இணையத்தில் ஆர்ப்பரித்தனர்.
 
வெகுஜன ரசனைக்கு எதிர் திசையில் சுக்கான் பிடிக்கும் யாருக்கும் ஏற்படும் விபத்துதான் அனுராக்கிற்கு ஏற்பட்டிருக்கிறது. பெரும்பான்மையின் ரசனைக்கு இயைந்து போகிறவர்கள் மட்டுமே பெரும் வெற்றிகளை குவிக்கிறார்கள், சமூகத்தால் கொண்டாடப்படுகிறார்கள். வெகுஜன ரசனையிலிருந்து விலகி சிந்திப்பவர்கள் எப்போதும் சிறுபான்மையினராகவே எஞ்சுகிறார்கள். அவர்களின் தடுமாற்றங்களை சமூகம் பெரிதுப்படுத்துகிறது, கேலி செய்கிறது. 
 
ஆனால், அந்த சிறுபான்மையினர்தான் எப்போதும் கலையிலும், சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். அனுராக்கின் படங்கள் இந்தி சினிமாவை பாதித்தது போல் சமீபத்தில் எந்த இயக்குனரின் படங்களும் பாதித்ததில்லை. அனுராக் போன்றவர்களின் சினிமா மீதான காதலை இந்த விமர்சனங்கள் பட்டைதீட்டுமே அன்றி மழுங்கிப் போக செய்யாது. அவரை விமர்சிப்பவர்களின் பதட்டத்தை அதிகரிக்கும் படங்களை அவர் வருங்காலத்தில் எடுப்பார். நடுவில் பாம்பே வெல்வெட் போன்ற விபத்துகளும் நேரலாம். ஆனாலும், அவர் சுக்கான் பிடிக்கும் திசையில் ஓரங்குலமாவது இந்தி சினிமா திரும்பும். வெகுஜன ரசனையின் மீது அவர் செலுத்தும் ஆதிக்கமாக அது இருக்கும்.
 
அனுராக் காஷ்யப்... நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம்.