1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: வியாழன், 26 மே 2016 (10:41 IST)

அஜித் படத்துக்கும் ஆளும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்?

அஜித் படத்துக்கும் ஆளும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்?

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கு முடிச்சுப் போடுறது என்பார்களே... அதுமாதிரியான ஒரு விஷயம்தான் இதுவும். ஆனால், சொல்லப் போற விஷயத்தில் உண்மையின் சதவீதம் அதிகம்.


 
 
கருணாநிதிக்கு நடந்த பாராட்டுவிழாவின் போதுதான் அஜித், நடிகர்களை நடிக்க விடாமல் அரசியல் பிரச்சனையிலும் இழுக்குறாங்கய்யா என்று கருணாநிதியிடம் முறையிட்டார். அடிக்கடி விழா அது இதுவென்று நடிகர்களை அலைக்கழிப்பதை சுட்டிக் காட்டி பேசியதால் ரஜினி   அஜித்தின் பேச்சை கைத்தட்டி வரவேற்றார். ஆனால், அஜித் திமுக விரோதியாக பார்க்கப்பட அதுவே காரணமாயிற்று. மேலும், அஜித் அம்மா விசுவாசி என்ற நம்பிக்கை அடிமட்ட ரசிகன்வரை உள்ளது.
 
நிற்க. இனி வருவதுதான் விஷயமே.
 
சசிகலாவும், இளவரசியும் பங்குதாரர்களாக உள்ள ஜாஸ் சினிமாஸ் சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள திரையரங்குகளை ஆயிரம் கோடிகளுக்கு வாங்கியதாக சென்ற வருடம் செய்தி வெளியானது. ஊடகங்கள் மறைத்தும் திகைத்தும் இந்த விவகாரத்தை பேசாமலிருந்தாலும் இணையத்தில் இந்த செய்தி வைரலானது. 
 
ஜாஸ் சினிமா தனது திரையரங்கு வியாபாரத்திலிருந்து விநியோகத்தில் இறங்கியது. முதல் படம், அஜித்தின் வேதாளம். சென்ற வருட இறுதியில் வேதாளம் படத்தை ஜாஸ் சினிமாஸ் தமிழகம் முழுவதும் விநியோகித்தது. அப்படத்துடன் வெளியான தூங்காவனம் படத்துக்கு நிறைய இடையூறுகள் ஏற்பட்டன. தூங்காவனத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அதனுடன் வெளியான வேதாளத்தின் சிறப்புக் காட்சிகள் சிறப்பாக நடந்தேறின. படம் கொள்ளை லாபம் சம்பாதித்தது.
 
விநியோகத்திலிருந்து ஜாஸ் சினிமாஸ் தயாரிப்பில் கால் பதிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல். அஜித்தான் அவர்களின் அதிர்ஷ்ட நாயகன். அதனால் அவரிடமிருந்து தொடங்க நினைக்கிறார்கள். 
 
சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் ஜாஸ் சினிமாஸ்ம் ஒரு பங்குதாரராக இணையவிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. தேர்தல் முடிவுக்காக காத்திருந்ததால்தான் அஜித்தின் புதிய படம் தொடங்கப்படவில்லை, இப்போது அதிமுக ஜெயித்ததால் படத்தயாரிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி ஜாஸ் சினிமாஸ் தயாரிப்பில் பங்கு கொள்கிறது என்கிறார்கள்.
 
திமுக ஆட்சிகாலத்தில் சன் பிக்சர்ஸின் ஆதிக்கத்தை பக்கம் பக்கமாக பேசிய ஊடகங்கள் எதுவும் இந்த தகவல்களை சரி பார்க்கவோ, முணுமுணுக்கவோ இல்லை. 
 
ஒருவேளை எல்லாமே வெறும் யூகம்தான் என்று நினைத்திருப்பார்களோ?