1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : சனி, 13 ஜூன் 2015 (13:07 IST)

நிவின் பாலி - மலையாள சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம்

நிவின் பாலி, பிருத்விராஜின் இடத்தைப் பிடிக்க இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று இயக்குனர் ஷ்யாம் பிரசாத் சொன்னதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டது. உடனே, நான் அப்படி சொல்லவில்லை, பத்திரிகை நான் சொன்னதை திரித்து வெளியிட்டது, அதனை நிவின் பாலி நம்ப மாட்டார் என மறுப்பு தெரிவித்தார், ஷ்யாம் பிரசாத்.
மலையாள சினிமாவின் பெருமைக்குரிய இயக்குனர்களில் ஒருவர், ஷ்யாம் பிரசாத். வழக்கமான கமர்ஷியல் ஃபேண்டஸிகளிலிருந்து விலகியது இவரது படங்கள். தேசிய அளவில் பல விருதுகளை பெற்றவர். அவர், நிவின் பாலி என்ற ஐந்து வருட சினிமா அனுபவமே உள்ள ஒருவரைப் பற்றி, இப்படி பதறியடித்து பதில் சொல்ல வேண்டியதில்லை. இருந்தும் சொல்லியிருக்கிறார் என்றால், அதற்கு முக்கிய காரணம், நிவின் பாலி என்ற நடிகன் இன்று மலையாள சினிமாவில் கையகப்படுத்தியிருக்கும் இடம்.
 
அங்கமாலியில் பிடெக் படித்து பெங்களூரு இன்போஸிசில் வேலை பார்த்து ஜாலியாக இருந்த நிவின் பாலி, சினிமாவில் அறிமுகமானது 2010 -இல். முதல் படம் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்.
 
இந்தப் படத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. மலையாள சினிமாவின் திரைக்கதையாசிரியரும், நடிகரும், இயக்குனருமான சீனிவாசனின் மகன் வினீத் சீனிவாசன் இயக்கிய முதல் படம் இது. அப்பா மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை. மகன் சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும், இயக்கம் என்று வந்த போது, வினீத்தின் கதையை படமாக்க யாரும் முன்வரவில்லை. நடிகர் திலீப் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்பின் கதையை கேட்டு, நானே தயாரிக்கிறேன் என்று முன் வந்தார். படம் சுமாரான வெற்றி. வினீத், நிவின் பாலி பந்தம் அன்று தொடங்கியது.
 
முதல் படத்தில் பிரதான வேடம் என்றாலும் தனி ஹீரோ கிடையாது. நண்பர்களாக உடன் வேறு நடிகர்களும் இருந்தனர். மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்புக்குப் பிறகு நான்கு படங்களில் சின்னச் சின்ன வேடங்கள். நிவின் பாலிக்கு முதல் மிகப்பெரிய வெற்றி வினீத் மூலமாக வந்தது. முதல் படத்தில் கிடைத்த தாராளமான அனுபவங்களுடன் 2012 -இல் தனது இரண்டாவது படம், தட்டத்திய் மறயத்தை இயக்கினார். நிவின் பாலி, இஷா தல்வார் நடித்த அப்படம், மலையாள இளைஞர்களை பைத்தியம் போல் பிடித்தாட்டியது. மலையாள நியூ ஜெனரேஷன் படங்களில் தட்டத்தின் மறயத்து முக்கிய இடம் பிடித்தது.
 
முதல் வெற்றிக்குப் பிறகும் நிவின் பாலிக்கு முக்கியமான ஆனால் சின்னச் சின்ன வேடங்களே கிடைத்தன. ஆஷிக் அபு இயக்கிய டா தடியா படத்தில் வில்லனாக நடித்தார். ஹீரோவோ, வில்லனோ, நண்பனோ... கொடுக்கிற வேடத்தை கச்சிதமாக செய்வார் என்ற பெயர் நிவின் பாலிக்கு கிடைத்தது.

2013 -இல் தமிழ், மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியான நேரம், நிவின் பாலியின் சுக்ர திசையை தொடங்கி வைத்தது. படம் இரு மொழிகளிலும் ஹிட். 2014 -இல் வெளியான, 1983 இன்னொரு சென்சேஷனல் ஹிட். அடுத்து வந்த ஓம் சாந்தி ஓசன்னாவும் வெற்றி. பெங்களூரு டேய்ஸ் சூப்பர்ஹிட். 
இந்த வருடம் வெளியான, ஒரு வடக்கன் செல்பி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போதே, பிரேமம் வெளிவந்தது. நேரம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரனின் இரண்டாவது படம். மலையாள சினிமாவின் வசூல் சாதனையான பெங்களூரு டேய்ஸையும், த்ரிஷ்யத்தையும் ஓரங்கட்டி பிரேமம் வெற்றிநடை போடுகிறது. 2013 -இல் தொடங்கிய நிவின் பாலியின் வெற்றிநடை இன்னும் தடைபடாமல் போய்க்கொண்டிருக்கிறது. இன்று மலையாள சினிமாவின் வெற்றி நாயகன் என்றால் அது நிவின் பாலிதான்.
 
ஆனால், விமர்சனமும் உண்டு. இதைவிட தொடர்ச்சியான ஹிட்கள் பகத் பாசிலும் தந்திருக்கிறார். நிவின் பாலியை விடவும் வெரைட்டியான வேடங்களில் நடிக்கிறார். அதுபோன்ற பரிசோதனை படங்களில் நிவின் பாலி நடித்திருந்தாலும், அவரது கதாபாத்திரம் வழக்கமான எல்லையை தாண்டவில்லை. அப்படியான கதாபாத்திரங்களில் அவர் நடிக்கும் போது, பரிசோதனைக்கு தன்னை ஆட்படுத்தும் போது இதே வெற்றி கிடைக்குமா? கிடைக்காமல் போனால் பகத் பாசில் போல, பிருத்விராஜ் போல நிவின் பாலியால் நிலைத்து நிற்க முடியுமா? 
 
இந்த கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லாததால்தான் ஷ்யாம் பிரசாத் பிருத்விராஜின் இடத்தை அடைய நிவின் பாலி இன்னும் பயணிக்க வேண்டும் என்றார். இன்னொரு முக்கியமான விஷயம். 
 
பிரேமம் வெளியானதற்கு அடுத்த வாரம் ஷ்யாம் பிரசாத்தின் இவிடே வெளியானது. பிருத்விராஜ் ஹீரோ. சுமாரான வசூல். இந்தப் படத்தில் பிருத்விராஜுடன் நடித்த இன்னொருவர், நிவின் பாலி.