1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Modified: திங்கள், 30 நவம்பர் 2015 (17:25 IST)

25 கோடி இழுபறியில் வீரப்பன் மனைவியும், வில்லங்க வர்மாவும்

ராம் கோபால் வர்மா ஆனானப்பட்ட தாவூத் இப்ராஹிமின் கதையையே படமாக்கியிருக்கிறார் மும்பையின் கொடிகட்டிய தாதாக்களைப் பற்றி படமெடுத்த போது வராத சிக்கல், வீரப்பன் குறித்த படத்திற்க்கு பாம்பாக காலைச் சுற்றி வர்மாவின் முன் படமெடுத்து ஆடுகிறது.


 
 
சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வை வர்மா, கில்லிங் வீரப்பன் என்ற பெயரில் படமாக்கியுள்ளார். கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவமும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ்குமார்தான், வீரப்பனை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரியின் வேடத்தில் நடித்துள்ளார். 
 
இந்த விவரங்களையும், போலீஸ் சொன்னதை கேட்டு அதன்படி படத்தை எடுத்துள்ளேன் என்ற வர்மாவின் ஸ்டேட்மெண்டையும் வைத்துப் பார்க்கையில், இந்தப் படம் போலீஸ் தரப்பு நியாயங்களுடன் ஒற்றைப்படையாக எடுக்கப்பட்டிருப்பது உறுதியாகிறது. 
 
இந்நிலையில், கில்லிங் வீரப்பன் படத்தை செய்ய வேண்டும் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
 
கடந்த 2008–ம் ஆண்டு டைரக்டர் ராம்கோபால் வர்மா என்னை அணுகி வீரப்பன் பற்றி இந்தியில் படம் இயக்கப்போவதாகவும், அதற்கு அனுமதி வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்தியில் மட்டும் அந்த படத்தை எடுக்க அனுமதி கொடுத்தேன்.
 
தமிழ், கன்னடம் உள்பட பிறமொழிகளில் வெளியிட்டால் அதன் உரிமையை வழங்குவதாகவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால் ஒப்பந்தத்துக்கு மாறாக ‘கில்லிங் வீரப்பன்’ படத்தை கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் விரைவில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
 
ஒப்பந்தத்தை மீறி படம் எடுத்துள்ள ராம்கோபால் வர்மாவிடம் பலமுறை தொடர்பு கொண்டும் உரிய பதில் அளிக்கவில்லை. மேலும் இந்த படத்தில் எனது கணவரையும், என்னையும் தவறாக சித்தரிப்பதாக தெரிகிறது. எனவே இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
 
-இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.
 
முத்துலட்சுமியின் மனுவை விசாரித்த நீதிபதி, கில்லிங் வீரப்பன் படத்தை வெளியிட டிசம்பர் 17 வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
 
இந்நிலையில், பெங்களூரு வந்த ராம் கோபால் வர்மா, "கடந்த 2008 -ஆம் ஆண்டே முத்துலட்சுமிக்கு 31 லட்சங்கள் தந்து படத்தை தயாரிக்கும் உரிமையை பெற்றேன். அவர் தற்போது கூடுதலாக 25 கோடிகள் கேட்கிறார். அது சரியல்ல, அவ்வளவு பெரிய தொகையை தர இயலாது" என கூறினார்.
 
2008 -இல் வீரப்பன் கதையை படமாக்குவது குறித்து முத்துலட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதே அவர் பெரும் தொகை கேட்டதாக செய்திகள் வெளியானது. கடைசியில் 31 லட்சத்தை அவர் பெற்றுக் கொண்டார். படத்தை பல மொழிகளில் வெளியிடுவதால் இப்போது 25 கோடிகள் வேண்டும் என்கிறார் முத்துலட்சுமி. கொஞ்சம் குறைத்து தந்தாலும் அவருக்கு ஓகேதான். 
 
தனது மனுவில் தன்னையும், தனது கணவரையும் தவறாக சித்தரித்திருப்பதாக முத்துலட்சுமி குறிப்பிட்டிருப்பது பணத்துக்காகத்தான் என கூறுகின்றனர். இந்தியில் மட்டும் படத்தை வெளியிடுவதாக இருந்தால் அவரையும், வீரப்பனையும் தவறாக சித்தரித்திருப்பது சரியாகிவிடுமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
 
தாவுத் இப்ராஹிமுக்கே பயப்படாத வர்மாவை முத்துலட்சுமி ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறார் என்பது நிதர்சனம்.