1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வியாழன், 11 செப்டம்பர் 2014 (15:13 IST)

பணத்துக்காக நடிகைகள் விபச்சாரம் - சரியா?

நடிகை ஸ்வேதா பாசு விபச்சாரம் செய்ததற்காக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். வாய்ப்புகள் குறைந்து பணக்கஷ்டம் ஏற்பட்டதால் வேறு வழியின்றி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ஸ்வேதா பாசு கூறினார். அதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் திரையுலகில் உள்ளவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஸ்வேதா பாசுக்கு ஆதரவு தெரிவித்து இந்திப்பட இயக்குனர் ஒருவர், தனது அடுத்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார். இயக்குனர் மகேஷ் பட்டும் ஸ்வேதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தெலுங்குப்பட இயக்குனர் சேகர் கம்மூலாவும் ஸ்வேதா பாசுக்கு உதவ முன் வந்துள்ளார்.
 

அதேநேரம் குஷ்பு, வாய்ப்பு இல்லாததால் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ஸ்வேதா பாசு கூறியிருப்பதை கடுமையாக விமர்சித்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு இல்லை என்றால் குணசித்திர வேடங்களில் நடிக்கலாம், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கலாம். அதைவிட்டு விபச்சாரம் செய்வது, தவறான முன்னுதாரணமாகிவிடும் என எச்சரித்துள்ளார்.
நடிகைகள் மீடியாவின் விளம்பர வெளிச்சத்தில் இருப்பவர்கள். சினிமா வாய்ப்பு இல்லாமல் போகும் போது வேறு எந்த தொழிலுக்கும் அவர்களால் செல்ல முடியாது. முந்தைய ஆடம்பர வாழ்க்கையையும் அவர்களால் விட முடியாது. அதனால் வேறு வழியின்றி அவர்கள் விபச்சாரத்தை நாட வேண்டியிருக்கிறது என ஸ்வேதா பாசுக்கு ஆதரவு தெரிவித்திருப்பவர்கள் கூறுகின்றனர்.
 
வாய்ப்பு இழப்பது நடிகைகள் மட்டுமில்லை, நடிகர்களும்தான். அதேபோல் பணக்கஷ்டம் என்பது நடிகைகளுக்கு மட்டுமில்லை எல்லோருக்கும்தான். ஐடி துறையில் வேலை பார்க்கும் பெண், வேலை பறிபோய்விட்டது என்பதற்காக விபச்சாரத்தை நாடினால் ஸ்வேதா பாசுவை ஆதரிப்பவர்கள் அப்பெண்ணையும் ஆதரிப்பார்களா என்பது ஸ்வேதா பாசுவின் முடிவை எதிர்ப்பவர்களின் கேள்வி. பணக்கஷ்டத்துக்கான ஒரே வழி உடம்பை விற்பதுதான் என்றால் இந்தியாவின் ஒரே தொழில் விபச்சாரமாகதான் இருந்திருக்கும். பணக்கஷ்டம் இல்லாத மனிதர் யார் இருக்கிறார்கள்?
 

இந்த இடத்தில் எழுத்தாளர் சாரு நிவேதிதா ஒருமுறை கூறியதை குறிப்பிட வேண்டும். சகல சௌபாக்கியங்களுடன் ஆடம்பரமாக இருக்கும் நடிகைகளின் விஷயத்தில் எனக்கு சொல்ல எதுவுமில்லை. ஆனால் சென்னை சாந்தி தியேட்டர் அருகில் ஐம்பதுக்கும் நூறுக்கும் உடலை விற்கும் பெண்ணின் உரிமைக்கு போராடுவது என்றால் தெருவில் இறங்க நான் தயார் என பொருள்படும்படி கூறினார். இந்த கருத்தில் அவர் சொல்லவரும் விஷயம் கவனிக்கத்தக்கது.
ஹீரோயினாக இருந்த ஒரு நடிகை விபச்சாரத்தில் ஈடுபடும் பொழுதுதான் மற்றவர்களின் கருணை அவர்கள்பால் ஒழுகுகிறது. வாய்ப்பு இல்லாமல் எத்தனையோ துணை நடிகைகள் தங்களின் உடம்பை விற்க வேண்டிய நெருக்கடி உருவாகிறது. வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் உடம்பை விற்றாக வேண்டும் என்ற நெருக்கடிகூட உதிரி நடிகைகளுக்கு இருக்கிறது. அவர்களைப் பற்றி இங்கு யாருக்கும் கவலையில்லை. அதுபற்றி பேசினால் அதற்கு இங்கு செய்தி மதிப்புகூட இருக்காது.
 

ஷகிலா ஆபாசமாக நடித்தார் என்று வழக்கு தொடர்ந்து கோர்ட்டுக்கு அவரை வரவழைக்கிறார்கள். இன்னொரு பக்கம் நிர்வாணமாக போஸ் கொடுத்துவிட்டு, என்னுடைய இந்தத் துணிச்சலுக்கு பாரத ரத்னா தர வேண்டும் என்கிறார் ஷெர்லின் சோப்ரா. நீலப்படத்தில் நடித்து, இன்றும் தனது நீலப்படங்களால் டாலர்களில் சம்பாதிக்கும் சன்னி லியோன் இந்தியாவின் செலிபிரிட்டியாக முன்னிறுத்தப்படுகிறார். ஏன் இந்த பாகுபாடு?
மீண்டும் மீண்டும் நாம் சொல்ல வருவது, நீலப்பட நடிகையாக இருந்தாலும், பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் உயர்மட்டத்தில் தொழில் செய்கிறவர் என்றால் அவர்களின் நிர்வாணமும், பாலியல் தொழிலும் கொண்டாடப்படும், அவர்கள் சமூகத்தின் செலிபிரிட்டிகள். அதுவே விளிம்புநிலை பாலியல் தொழிலாளி என்றால் அவர்கள் குற்றவாளிகள், தீண்டத்தகாதவர்கள். பாலியல் தொழில்வரை ஊடுருவி நிற்கும் இந்த வர்க்க வேறுபாட்டை உணர்ந்து கொண்டால் மட்டுமே, ஸ்வேதா பாசுக்கு ஆதரவு, எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை புரிந்து கொள்ள முடியும்.