1. ஆன்மிகம்
  2. »
  3. ஜோ‌திட‌ம்
  4. »
  5. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By K.P.Vidhyadharan
Last Updated : சனி, 12 ஏப்ரல் 2014 (14:53 IST)

ஜய வருட ராசி பலன்கள் - தனுசு

பொதுவாக அமைதியை விரும்பும் நீங்கள், தர்க்கம் என வந்து விட்டால் இடியாக முழங்குவீர்கள். இந்த ஜய வருடம் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் பிறப்பதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குடும்ப வருமானம் உயரும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 
 
உங்கள் ராசிக்கு சாதகமான நட்சத்திரத்தில் புதன் சென்று கொண்டிருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உற்சாகமாக எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். சிலர் வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் அமைப்பீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். நினைத்திருந்த டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். 
 
ஜூன் 12 வரை உங்கள் ராசிநாதனான குருபகவான் 7ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் திருமணம், சீமந்தம் என அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தள்ளிப்போன கல்யாணம் கூடி வரும். புண்ணிய தலங்களுக்குச் சென்று முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள். நண்பர் வீட்டுக் கல்யாணத்தை திறம்பட எடுத்து நடத்துவீர்கள். வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். 
 
ஜூன் 13ந் தேதி முதல் குருபகவான் ராசிக்கு 8ல் சென்று மறைவ தால் வீண் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில வேலைகளை போராடி முடிக்க வேண்டியது வரும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பெயர், புகழ், கௌரவம் குறைந்து விடுமோ என்ற ஒரு பயம் வரும். வாகனத்தை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. 
 

ஜூன் 20ந் தேதி வரை கேது உங்கள் ராசிக்கு 5ல் நிற்பதால் பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நல்லது என நினைப்பீர்கள். உங்கள் இளமைக் காலத்துடன் அவர்களை ஒப்பிட்டுப் பார்த்து கொஞ்சம் பெருமூச்சு விடுவீர்கள். பூர்வீகச் சொத்துக்கான வரியைச் செலுத்தி சரியாக பராமரியுங்கள். சிலருக்கு கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும். என்றாலும் ராகு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நிற்பதால் அமைதியாக இருந்து சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சிலர் வெளிநாட்டிற்குச் சென்று வருவீர்கள். 
 
ஜூன் 21ந் தேதி முதல் ராகு உங்கள் ராசிக்கு 10ம் வீட்டிலும், கேது 4ன் வீட்டிலும் அமர்வதால் வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உங்களுக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். தாயாருடன் மனத்தாங்கல் வரும். தாய்வழிச் சொத்தைப் பெறுவதில் சிக்கல்கள் 
வந்துபோகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் அடிக்கடி இட மாற்றங்கள் வரும். சின்னச் சின்ன அவமானங்கள் 
ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். பழைய கசப்பான அனுபவங்களை நினைத்து பெருமூச்சு விடுவீர்கள். வெளிவட்டாரத்தில் 
யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். 
 
டிசம்பர் 15 வரை சனிபகவான் லாப வீட்டில் நிற்பதால் நீண்ட நாள் கனவுகளெல்லாம் நனவாகும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. பங்குச் சந்தை மூலமாக ஆதாயமடைவீர்கள். நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு குடிபுகுவீர்கள். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று செய்வீர்கள். அரசியலில் செல்வாக்கு கூடும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். டிசம்பர் 16ந் தேதி முதல் சனிபகவான் 12ல் மறைந்து ஏழரைச் சனியின் முதல் கட்டமான விரையச் சனி தொடங்கயிருப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். அடிக்கடி மன அழுத்தத்திற்குள்ளாவீர்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். முக்கிய காரியங்
களையெல்லாம் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். 
 
வியாபாரத்தில் புது முயற்சிகள் வெற்றியடையும். சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். வியாபார சங்கத்தில் முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். இப்போது செய்கின்ற தொழிலைத்தவிர வேறொரு இணைத் தொழிலை கைக்கொள்ளுங்கள். வேற்றுமொழிக்காரர்கள், வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்களை வேலையாட்களாக அமர்த்துவீர்கள். விசாரித்துச் சேர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிலர் முக்கிய சாலை அதாவது, மெயின் ரோட்டிற்கு கடையை மாற்றுவீர்கள். வேற்றுமாநிலம், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பங்குதாரர்களாக அறிமுகமாவார்கள். பெட்ரோ- கெமிக்கல், மருந்து, உணவு, ஃபைனான்ஸ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். 
 

ஜூன் 12ந் தேதி குரு சாதகமாக இருப்பதால் உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். ஜூன் 13ந் தேதி முதல் குரு 8ல் மறைவதால் கொஞ்சம் டென்ஷன் இருக்கத்தான் செய்யும். தலைமையின் நம்பிக்கையைப் போராடிப் பெறுவீர்கள். நீங்கள் செய்து முடித்த வேலைக்கு சக ஊழியரோ, அல்லது மூத்த அதிகாரியோ உரிமை கொண்டாடுவார்கள். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாக கிடைக்கும். நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உரிமைக்காக நீதிமன்றங்கள் செல்ல நேரிடும்.
 
கலைத்துறையினரே! கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள். உங்கள் திறமைக்கு நல்ல வாய்ப்புகள் கிட்டும். உங்களின் கற்பனைத் திறன் வளரும். கடுமையாக உழைத்து படைப்பாற்றலை பெருக்கிக் கொள்ளுங் கள். சரியான சந்தர்ப்பங்கள் வரும்போது எளிதாக வெற்றி பெறலாம். 
 
மாணவ-மாணவிகளே! உங்களுடைய பொது அறிவுத்திறன் வளரும். அரசுத் தேர்வில் மதிப்பெண் கூடும். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வியை தொடருவீர்கள். 
 
கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். மனசை அலைபாயவிடாமல் ஒருநிலைப்படுத்துங்கள். போராடி நல்ல நிறுவனத்தில் வேலையில் அமர்வீர்கள். தாயாரை தவறாகப் புரிந்துக் கொள்ள வேண்டாம். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
 
இந்த ஜய வருடம் அலைச்சல்களையும் சுபச் செலவுகளையும், தொலை தூரப் பயணங்களையும் தருவதுடன் புதிய திட்டங்கள் நிறைவேறுவதற்கும் உதவியாக அமையும்.
 
பரிகாரம் :  திண்டிவனம் - விழுப்புரம் பாதையில் மயிலம் தலத்திற்கு அருகேயுள்ள திருவக்கரை வக்ரகாளியம்மனை அமாவாசை திதி நாளில் சென்று வணங்கி வாருங்கள். புற்றுநோயாளிகளுக்கு உதவுங்கள்.