செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

உண்ணா நோன்பிருந்து இறைவனை வழிபட உகந்த யோகினி ஏகாதசி !!

யாகம் வளர்த்தல், பூஜை செய்தல், அபிஷேகம் செய்தல், நைவேத்யம் படைத்தல், கோயிலுக்குச் சென்று வேண்டிக் கொள்ளுதல் என்று பல்வேறு இறைவழிபாட்டுச் சடங்குகள் இருந்தாலும், அவற்றில் முக்கியமானது உண்ணா நோன்பிருந்து இறைவனை வழிபடுவதேயாகும்.

உயிரை இயக்கும் உணவைத் துறந்து கடைப்பிடிக்கும் விரதத்துக்கு எப்போதுமே அதியற்புதப் பலன்கள் உண்டு. அதனால்தான் மக்கள் தங்கள் வீடுகளில் எளிமையான முறையில் இத்தகைய விரதங்களை அனுஷ்டித்து இறைவனை வழிபாடு செய்கிறார்கள்.
 
மக்கள் கடைப்பிடிக்கும் ஒவ்வொரு விரதத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு இருந்தாலும் அவற்றில் முக்கியமானது 'ஏகாதசி விரதம்'. திருமாலின் அருளைப் பெறுவதற்கு எளிய வழி ஏகாதசி விரதமிருத்தல். ஆடி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு 'யோகினி ஏகாதசி' என்று பெயர். இந்த விரதமானது உடல் நோயைத் தீர்க்கும் மகத்துவம் நிறைந்தது என்கிறது ‘ஏகாதசி மகாத்மியம்’ என்னும் நூல்.
 
நம்பிக்கையுடன் விரதமிருந்து, திருமாலை வழிபட்டால் பாவச் சுமைகளிலிருந்து விடுபடுவது மட்டுமல்லாமல், நோய்களிலிரு ந்தும் விடுபடலாம்.
 
யோகினி ஏகாதசி அன்று நாள் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி மகாவிஷ்ணு வை வழிபட அனைத்து நற்பலன்களையும் அடைவதோடு தீராத நோய்களிலிருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை. இத்தகைய சிறப்புகளையுடைய யோகினி ஏகாதசி இன்று வருகிறது. பக்தர்கள் தவறாமல் இந்த விரதத்தைக் கடைப்பிடித்துப் பயன்பெறலாம்.