தேய்பிறை சதுர்த்தியில் விநாயக பெருமான் வழிபாடு !!
விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. சந்திர பகவான் தனது தோஷங்கள் நீங்க தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.
தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம். சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.
சிவபெருமான், தனது பூத கணங்களுக்கு கணேசனை தலைவனாக ‘கணபதி’யாக நியமித்தார். பிரம்மதேவன் அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்ட ஸித்திகளையும், மனைவிகளாக அளித்து பலவாறு துதி செய்தார்.
கணபதியும் மனம் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் என்று கூற பிரம்மன் என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூறின்றி நிறைவேற வேண்டும் என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.
பொதுவாக சதுர்த்தி தினங்களில் சந்திரனைக் கண்டால் ஒருவருடம் வரை தெடர்ந்து வீண் பிரச்னைகள் சிக்கல்கள் வந்து சேரும் என்பது ஐதீகம். எனவே, ஆண்டு தோறும் ‘ஆவணி மாத சுக்ல சதுர்த்தியன்று மண்ணாலான என் உருவத்தை(விநாயகர்) அமைத்து பூக்களால் பூஜித்த பின், இரவில் கண் விழித்து முறையாகப் பூஜித்தால் துவங்கிய காரியத்தில் வெற்றியையும், சகல சௌபாக்கியங்களையும் தருவேன்’ என்று விநாயகரே சந்திரனுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது.