வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 29 டிசம்பர் 2016 (01:36 IST)

கன்னி - 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

மண் வாசனை மாறாதவர்களே! இந்த 2017-ம் ஆண்டு சந்திரன் உங்களின் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்கும் போது பிறப்பதால் அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். குடும்ப வருமானமும் உயரும்.


 

பிள்ளைகளின் திறமைகளை இனங்கண்டறிந்து வளர்ப்பீர்கள். வரன் தேடி தேடி அலுத்துப் போன உங்களின் மகளுக்கு இந்தாண்டு கல்யாணம் சீரும் சிறப்புமாக முடியும். கல்விக்குத் தகுந்த உத்யோகம் இல்லாமல் வீட்லேயே முடங்கிக் கிடந்த உங்களுடைய மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் வேலைக் கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். இந்தாண்டு பிறக்கும் போது செவ்வாய் 6-ல் இடத்திலும், சூரியன் 4-லும் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். புதிதாக சொத்து வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். திடீர் பயணங்கள் உண்டு.

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் கேது பகவான் நிற்பதால் எதிர்ப்புகள் அடங்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரியம் வரும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். ஆனால் ராசிக்கு 12-ம் வீட்டில் ராகு நிற்பதால் மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது அச்சம் வரும். சுபச் செலவுகள் அதிகமாகும். கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும்.

27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது 5-ம் வீட்டில் அமர்வதால் முடிவுகள் எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வந்துப் போகும். பிள்ளைகளுக்கு அதிக அறிவுரைச் சொல்லி நெருக்கடிக்குள்ளாக்காதீர்கள். ஒரே வாரத்தில், ஒரே மாதத்தில் திருத்திவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அவர்களை கொண்டு வர வேண்டும். அதைப் புரிந்துக் கொண்டு செயல்படப்பாருங்கள். கர்ப்பிணிப் பெண்கள் தூரத்துப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும்.

ஆனால் ராகு 11-ம் வீட்டில் நீடிப்பதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. உங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற பலன் கிட்டும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். ஷேர் லாபம் தரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். குடும்பத்தினருடன் சுற்றுலா பயணம் சென்று வருவீர்கள். உறவினர்கள், விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும்.

26.02.2017 முதல் 11.04.2017 வரை செவ்வாய் 8-ல் அமர்வதாலும் மற்றும் 11.4.2017 முதல் 26.5.2017 வரை உள்ள காலக்கட்டத்தில் செவ்வாயை சனி பார்க்கயிருப்பதாலும் சிறுசிறு நெருப்புக் காயங்கள், உடன்பிறந்தவர்களுடன் மோதல்கள், சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள், எதிர்காலம் பற்றிய பயம், பணத்தட்டுப்பாடு வந்துச் செல்லும். வருடப்பிறப்பு முதல் 8.01.2017 வரை ராசிநாதன் புதனும், சனியுடன் சேர்ந்து வக்ரமாகி நிற்பதால் காய்ச்சல், இருமல், கழுத்து வலி, உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வந்துப் போகும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்களின் சேவகாதிபதியும்-சப்தமாதிபதியுமான குரு உங்கள் ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையை தவிர்க்கப் பாருங்கள். பிரிவுகள் வரக்கூடும். தண்ணீரை காய்ச்சி அருந்துங்கள். வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா என பார்த்து காசோலை தருவது நல்லது. உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகள், கார உணவுகள் மற்றும் லாகிரி வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது.

ஆனால் 02.09.2017 முதல் குரு 2-ம் வீட்டில் சென்று அமர்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்த நடந்தேறும். சிலர் புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பம் விலகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும். அன்யோன்யம் அதிகரிக்கும். அழகு, அறிவுள்ள குழந்தைப் பிறக்கும். மனைவிக்கு இருந்து வந்த ஆரோக்ய குறைவு சீராகும். மனைவிவழி உறவினர்களும் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.

வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள். வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். சொத்து சேர்க்கை உண்டு. நீங்கள் சொல்லாததையும், சொன்னதாக நினைத்துக் கொண்டு விலகியிருந்த சொந்த-பந்தங்களெல்லாம் வலிய வந்துப் பேசுவார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்தி வைப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். எப்படியாவது ஒரு சொத்து வாங்கிவிட வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள், அந்த முயற்சியும் நல்ல விதத்தில் முடியும். உங்களை கிள்ளுக் கீரையாக நினைத்தவர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுப்பீர்கள்.

14.12.2017 வரை சனி 3-ம் வீட்டிலேயே நிற்பதால் திடீர் அதிர்ஷ்ட, யோகம் உண்டாகும். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். சிலர் அண்டை மாநிலம், வெளிநாடு சென்று வருவீர்கள். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். அரசியலில் செல்வாக்குக் கூடும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள்.

வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் 4-ல் சனி அமர்ந்து அர்த்தாஷ்டமச் சனியாக வருவதால் தாயாரின் உடல் நலம் பாதிக்கும். அவருடன் பிணக்குகள் வந்து நீங்கும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். பழைய பிரச்னைகள் போல வேறு ஏதேனும் இப்போது வந்துவிடுமோ என்று அஞ்சுவீர்கள். அரசாங்க அனுமதியில்லாத இடத்தில் வீடு கட்டவோ, விதிகளை மீறி அடுக்குமாடிகள் கட்டுவதோ வேண்டாம். சின்ன சின்ன அபராதம் செலுத்த வேண்டி வரும். அலைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம். விபத்துகள் நிகழக்கூடும். உடல் அசதி, சோர்வு, வீண் டென்ஷன், தூக்கமின்மை வந்துப் போகும்.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். மக்களின் ரசனையைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப புதிய சரக்குகள் கொள்முதல் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். கல்வித் தகுதியில் சிறந்த, அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். கடையை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கிய சாலைக்கு மாற்றி விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தரக்கூடிய பங்குதாரரும் அறிமுகமாவார். வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருப்பவர்களின் உதவியால் சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். ஹார்டுவேர்ஸ், ஜீவல்லரி, செங்கல் சூளை, சிமெண்ட் போன்ற வகைகளால் லாபமடைவீர்கள். ஜுன், செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் அயல்நாட்டு தொடர்புடைய புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

உத்யோகத்தில் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் முக்கியத்துவம் கிடைக்கும். அதிகாரிகளுடன் அரவணைத்துப் போகும் மனப்பக்குவம் உண்டாகும். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பதவி உயரும். சம்பள பாக்கி கைக்கு வரும். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். உங்கள் மீது சுமத்தப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்.

கன்னிப்பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். வேற்றுமதத்தை சேர்ந்தவர்கள் நண்பர்களாவார்கள். காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். சிலருக்கு அயல்நாட்டில் உயர்கல்வி, உத்யோகம் தொடரும் வாய்ப்புக் கிடைக்கும். கல்யாணம் கூடி வரும். ஆடை, அணிகலன் சேரும்.

மாணவ-மாணவிகளே! சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். சின்ன சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்வீர்கள். ஆசிரியர் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சக மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள். கூடுதல் மொழியை கற்றுக் கொள்ள ஆசைப்படுவீர்கள். உயர்கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள்.

கலைத்துறையினரே! சின்ன சின்ன வாய்ப்புகளை கடந்து இப்போது பெரிய வாய்ப்புகளும் வரும். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள்.

இந்த 2017-ம் கொஞ்சம் முணுமுணுக்க வைத்தாலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும் அள்ளித் தருவதாக அமையும்.