1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

திருவாதிரை விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்...!!

திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். கீதையை உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மா, 'நட்சத்திரங்களில் நான் திருவாதிரை" என்று கூறியிருப்பதில் இருந்தே, அந்த நட்சத்திரத்திற்கான சிறப்பை அறியலாம்.

மார்கழி மாதம் என்பதே சிறப்பான மாதம் தான்.  மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை மேலும் சிறப்பு சேர்ப்பதாகும்.
 
ஜனவரி 10-ம் தேதியான இன்று மார்கழித் திருவாதிரை - ஆருத்ரா தரிசனம். சிவபெருமானின் திருக்கோலங்களில் சிறப்புமிக்கது நடராஜர் திருவடிவம். ஐந்தொழில்களையும் ஒருங்கே புரிந்து பிரபஞ்சத்தை இயக்கும் நடராஜப் பெருமானுக்கு ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே  அபிஷேகம் நடைபெறும். அதில் மார்கழி திருவாதிரை அபிஷேகம் விசேஷமானது.
 
திருவாதிரை விரதம்:
 
திருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்து தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது.
 
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று (திருவாதிரை தரிசனம்) காட்சி தரும் கடவுளை கண்டு களித்தால் வீழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும். திருவாதிரை தரிசனத்தை, ஆருத்ரா தரிசனம் என்றும் கூறுவார்கள். 
 
சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை கொண்டுதான் சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும், ஆதிரையான் என்றும் கூறுவர்.
 
மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திர நாளில் தில்லை சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானை தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றது. அன்றைய தினமே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. திருவாதிரை விரதம்  இருப்பவர்கள் உபவாசம் இருந்து கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும். அன்று வீட்டில் முறைப்படி இறைவனை வழிபட்டு  நைவேத்தியமாக களி படைக்க வேண்டும்.