1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

பாவம் போக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் தரிசனம்

திருவண்ணாமலை தலத்துக்கு சென்று ஈசனை மனதார வழிபட்டு பாவம் போக்கிக் கொண்டவர்கள் எண்ணிக்கையை அளவிட இயலாது. விஷ்ணு, பிரம்மா, சூரியன், சந்திரன் ஆகியோரும் திருவண்ணாமலை வந்த பிறகே தங்களது பாவத்தைப் போக்கிக் கொள்ள முடிந்தது.
பிரம்மனிடம், ஒரு தடவை இந்திரன் ஒரு வேண்டுகோள் வைத்தான். உலகில் உள்ள எல்லா அழகான பெண்களையும் ஒன்று சேர்த்து மிகவும் பேரழகு வாய்ந்த பெண்ணை படைத்துத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அதன்படி பேரழகு வாய்ந்த பெண்ணை பிரம்மன் படைத்தான். அந்த பெண்ணுக்கு  “திலோத்தமை” என்று பெயரிட்டனர். அவளது அழகைப் பார்த்து, படைத்த பிரமமனுக்கே ஆசை வந்து விட்டது. காமத்தில் மூழ்கிய பிரம்மன் தனது அறிவை  இழந்தார். திலோத்தமையை விரட்டினார். பிரம்மனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினாள். ஆனால் பிரம்மன் விடாமல் துரத்தினார். இதனால்  திலோத்தமை வேறு, வேறு வடிவம் எடுத்து பிரம்மன் பார்வையில் இருந்து தப்பினாள்.
 
ஒரு கட்டத்தில் அவள் மான் வடிவம் எடுத்து துள்ளி, துள்ளி ஓடினாள். அவளை கண்டு கொண்ட பிரம்மா, கலைமான் வடிவம் எடுத்து பின் தொடர்ந்தார். இதையடுத்து திலோத்தமை கிளியாக மாறிப் பறந்தார். உடனே பிரம்மாவும் ஆண் கிளியாக மாறிப் பின்னே பறந்தார். இதனால் அவள் தவித்தாள். அடுத்து என்ன  வடிவம் எடுப்பது என்று திலோத்தமை யோசித்தப் போது, அவள் கண்ணில் திருவண்ணாமலை மலை தெரிந்தது.
 
“அண்ணாமலையாரே.... காப்பாற்றும்” என்று தஞ்சம் அடைந்தாள். அடுத்த நிமிடம், மலை வெடித்தது. உள்ளே இருந்து ஈசன் வெளியில் வந்தார். வில் ஏந்திய கோலத்தில் வேடன் போன்று நின்ற அண்ணா மலையாரை சுற்றி வந்து திலோத்தமை சரண் அடைந்தாள். அவளை விரட்டி வந்த பிரம்மன், திடீரென தன் எதிரே  ஈசன் நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்று உணர்ந்தார்.
 
திலோத்தமை மீது கொண்ட மையல் அவரிடம் இருந்து நீங்கியது. அண்ணாமலையாரை வணங்கினார். அப்போது சிவபெருமான் அவரிடம், “நீ படைத்த பெண் மீது நீயே மையல் கொண்டது மன்னிக்க முடியாத குற்றமாகும். கற்ப கோடி காலம் தாண்டினாலும் அந்த பாவம் தீராது. ஆனாலும் இந்த மலையை  வணங்கியதால் உன் பாவம் நீங்கியது” என்று அருளினார்.
இதே போன்றுதான் ஒரு தடவை விஷ்ணுவின் பாவத்தையும் அண்ணாமலையார் நீக்கினார். ஊழிக்காலம் முடிந்து இருள் நீங்கிய பிறகு அனைவரும் சிவபெருமான் ஒளியால் உறக்கத்தில் இருந்து விடுபட்டனர். ஆனால் விஷ்ணு மட்டும் உறக்கத்தில் இருந்து எழாமல் இருந்தார். அவர் எழுந்து பிரம்மனை  படைத்தால்தான் உலகைப் படைக்க முடியும். அதை செய்யாமல் தூங்கி விட்டதால், தன்னை பாவம் பிடித்து விட்டதாக விஷ்ணு கருதினார்.
 
அந்த பாவத்தை போக்குவதற்காக அண்ணாமலையாரை நினைத்தார். அடுத்த வினாடி வெண்ணிற எருதின் மீது சிவபெருமான் தோன்றினார். திருவண்ணாமலைக்கு சென்று வழிபடும்படி கூறினார்.அதை ஏற்று விஷ்ணு திருவண்ணாமலைக்கு வந்து பூஜைகள் செய்து தன் மீதான வினைகளைத் தீர்த்துக்  கொண்டார்.