1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 29 டிசம்பர் 2016 (01:38 IST)

விருச்சிகம் - 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

இலவசங்களை மறுப்பவர்களே! உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த 2017-ம் ஆண்டு பிறப்பதால் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனோபலம் அதிகரிக்கும்.


 

பணவரவு கணிசமாக உயரும். இளைய சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் சிலர் வீட்டு மனை வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். போட்டி, பந்தங்களில் வெற்றி பெறுவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! அதிக சம்பளத்துடன் கூடிய நல்ல உத்யோகம் அமையும். பொது விழாக்கள், கல்யாண, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்பொழுது உங்களுக்கு உதவ முன் வருவார்கள்.

26.05.2017 முதல் 12.7.2017 வரை உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைவதாலும் மற்றும் 11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாயை சனி பார்க்கயிருப்பதாலும் சிறுசிறு வாகன விபத்துகள், மறைமுக எதிர்ப்புகள், பணப்பற்றாக்குறை வந்துச் செல்லும். உடன்பிறந்தவர்களால் பிரச்னைகள் வரக்கூடும். சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துப் போகும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையப்பமிட வேண்டாம். பழைய கடனை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். மாதம் தவறாமல் அசலை செலுத்தினாலும் வட்டிக் கூடிக் கொண்டேப் போகிறதே என்று அச்சப்படுவீர்கள்.

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் கேது பகவானும், ராசிக்கு 10-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் வாகன விபத்துகள், காரியத் தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்து நீங்கும். அவ்வப்போது மற்றவர்களைப் போல நம்மால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என வருந்துவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். சின்ன சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும்.

27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது 3-ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். உங்களுக்குள் ஒரு சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வீர்கள். எதிரி அடிக்கடி வாய்தா வாங்கியதால் தள்ளிப் போய்க் கொண்டிருந்த வழக்கில் இனி சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். ஆனால் ராகு 9-ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தையின் ஆரோக்யம் பாதிக்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். வேற்றுமொழிப் பேசுவர்கள், வேற்று மதத்தை சார்ந்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்களின் தன-பூர்வ புண்யாதிபதியான குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நிற்பதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். தொடங்கிய பணிகள் உடனே முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வருமானத்தை உயர்த்த புது வழிகளில் முயற்சி செய்வீர்கள். திடீர் யோகம், பணவரவு உண்டு.      நீண்ட நாளாக வராமலிருந்த பணமெல்லாம் இப்போது கைக்கு வரும். பழைய கடனில் ஒருபகுதியை தீர்க்க வழி பிறக்கும். மூத்த சகோதரர் முன் வந்து உதவுவார். நேர்மறை எண்ணங்கள் உருவாகும். பெரிய பதவிகள் தேடி வரும். தடைபட்ட வீடு கட்டும் பணியை தொடர்வீர்கள். தூரத்து சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்களுடைய ராசிக்கு 12-ம் வீட்டில் சென்று மறைவதால் திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். நன்கு அறிமுகமாகாதவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சகோதரங்கள், உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள்.

14.12.2017 வரை ராசிக்குள் சனி அமர்ந்து ஜன்மச் சனியாக தொடர்வதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். ஜென்ரல் செக்கப் செய்து கொள்வது நல்லது. வறுத்த, பொரித்த மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. தலைவலி, மயக்கம், குமட்டல், நாக்கில் கசப்பு, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். நாக்கைக் கொஞ்சம் கட்டுங்கள். கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது வாக்குவாதங்கள் வரத்தான் செய்யும். அதை பெரிதுபடுத்த வேண்டாம். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம்.

நாடாளுபவர்கள், பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். உடல் எடை கூடும். பணப்புழக்கம் இருந்தாலும் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். சில சமயங்களில் முன்கோபத்தால் எடுத்தெறிந்து பேசுவீர்கள். நேரம் கிடைக்கும் போது யோகா, தியானம் செய்யத் தவறாதீர்கள். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. எதிர்மறை எண்ணங்கள் தலைத்தூக்கும். நீங்கள் பெருந்தன்மையாக நடந்து கொண்டாலும் சிலர் உங்களை குறை கூறுவார்கள்.

வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் சனி உங்கள் ராசிக்கு 2-ல் அமர்வதால் நோய்களெல்லாம் வெகுவாக குறையும். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகளெல்லாம் விலகும். ஆனால் பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். நிதானம் அவசியம். மூக்கு, காது, கை, கால் வலி வந்துப் போகும். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும்.

வியாபாரத்தில் ஜென்மச் சனி தொடர்வதால் புது தொழில் தொடங்கும் முயற்சிகள், பெரிய முதலீடுகள் வேண்டாம். போட்டிகளை சமாளிக்க புது திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வேலையாட்களுக்காக எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், அதிக சலுகைகள் தந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லையே என ஆதங்கப்பட்டுக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் தள்ளிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். ஏற்றுமதி-இறக்குமதி, எண்டர்பிரைசஸ், மரம், ஸ்டேஷனரி, கல்வி நிறுவனங்கள், எரி பொருள் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் ஜீலை 26-ந் தேதி வரை ராகு 10-ல் அமர்வதால் சின்ன சின்ன அலைகழிப்புகள் இருக்கும். மேலதிகாரியின் குறை, நிறைகளையெல்லாம் சுட்டிக் காட்ட வேண்டாம். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். உங்கள் மீது சிலர் வழக்குத் தொடுக்க வாய்ப்பிருக்கிறது.

கன்னிப்பெண்களே! போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். காதலை தள்ளி வைத்துவிட்டு உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். கல்யாணம் தாமதமாகி முடியும். பெற்றோருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம்.

மாணவ-மாணவிகளே! ஏழரைச் சனி நடைப்பெற்றுக் கொண்டிருப்பதால் மந்தம், மறதி வந்து நீங்கும். உங்களுடன் சுற்றித் திரிந்த நண்பர்கள் கூட நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெறக்கூடும். எனவே விதண்டாவாதம் பேசிக் கொண்டிருக்காமல் படிப்பில் அக்கறை செலுத்துங்கள். வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள்.

கலைத்துறையினரே! மனம் தளராதீர்கள். சின்ன வாய்ப்பு வந்தாலும் பயன்படுத்த தவறாதீர்கள். மூத்த கலைஞர்களால் உதவிகள் உண்டு.

இந்த 2017-ம் ஆண்டு சுற்றியிருப்பவர்களின் சுய நலப்போக்கை உணர வைப்பதுடன், மன அமைதியையும் தருவதாக அமையும்.