1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 14 நவம்பர் 2014 (13:29 IST)

ரிஷபம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

உழைப்பால் உயரும் நீங்கள், அடுத்தவர் நிழலில் அமர யோசிப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் அமர்ந்து எதிலும் முன்னேற்றத்தை தந்த சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசிக்கு 7-வது வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார். 7-வது வீட்டில் சனி அமர்ந்து கண்டகச் சனி வருகிறாரே? என்று பதட்டப்படாதீர்கள். சனிபகவான் உங்களுக்கு யோகாதிபதியாக வருவதால் உங்களுக்கு ஓரளவு நன்மையே உண்டாகும். இனி எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள்.

வீரியம் பெரிதா காரியம் பெரிதா என்று யோசிக்கும் போது காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். என்றாலும் களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் சனி அமர்வதால் திருமணம் தள்ளிப் போகும். ஈகோ பிரச்னை, வீண் சந்தேகத்தால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் ஏற்படக்கூடும். உன் சொந்தம், என் சொந்தம் என்று மோதிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தில் வரும் சின்ன சின்னப் பிரச்னைகளையெல்லாம் பெரிதுப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது.

மனைவிக்கு கர்ப்பச் சிதைவு, ஹார்மோன் பிரச்னை, முதுகு தண்டில் வலி வந்துப் போகும். பலர் வேலையாகும் வரை உங்களைப் பயன்படுத்திக் கொண்டு கருவேப்பில்லையாக வீசி விட்டார்கள் என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்பாருங்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள். உறவினர், நண்பர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். உத்தியோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தை பிரிய வேண்டி வரும். மரியாதைக் குறைவான சம்பவங்கள் அவ்வப்போது நிகழும்.  

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் அஷ்டம-லாபாதிபதியான குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதம் 7-ம் வீட்டில் சனி செல்வதால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள், அலைச்சல், மனைவிவழி உறவினர்களுடன் பிணக்குகள், சிறுசிறு விபத்துகள், மூச்சு திணறல், வேலைச்சுமை, வீண் செலவுகள் வந்துப் போகும். 
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் யாரை நம்புவது என்கிற குழப்பத்திற்கு ஆளாவீர்கள். ஒரு சொத்தை விற்று மறுசொத்தை காப்பாற்றுவீர்கள். நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும். வங்கியில் போதிய பணம் இருக்கிறதா என பார்த்து காசோலை தருவது நல்லது. 
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் எதிர்ப்புகள் அடங்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். பணவரவு உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். என்றாலும் காய்ச்சல், சளித் தொந்தரவு, சோர்வு வந்து விலகும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
 
உங்கள் பாதகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். பாதியில் நின்ற கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். நகர எல்லையை ஒட்டியுள்ளப் பகுதியில் வீடு, மனை வாங்குவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு.  
 
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரித்துப் போங்கள். அவ்வப்போது படபடப்பு, பதட்டம் வந்து நீங்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.       
 
16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் தன-பூர்வ புண்யாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்திருந்த தொகை வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பூர்வீக சொத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.  

08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். சளித் தொந்தரவு, தலை வலி, பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வந்துப் போகும். பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி சரியாக பராமரியுங்கள். என்றாலும் புது பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.    
 
சனிபகவான் ராசியைப் பார்ப்பதால் விளம்பரத்தில் மயங்கி புது சோப்பு, பேஸ்டு, ஷாம்பு வகைகளை பயன்படுத்தி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அலர்ஜியால் முடி உதிர்வதற்கும், தோலில் நமைச்சல் வருவதற்கும் வாய்ப்புள்ளது. சனிபகவான் 4-ம் வீட்டை பார்ப்பதால் வாகனத்திற்கான லைசன்ஸ்சை புதுப்பிக்க தவறாதீர்கள். சிறுசிறு அபராதம் கட்ட வேண்டி வரும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். சனிபகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். தந்தையாருக்கு டென்ஷன், இரத்த அழுத்தம், தலைச்சுற்றல் வந்துப் போகும். 
 
வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். காலையில் வியாபாரம் நன்றாக இருந்தால் மாலையில் சுமாராக இருக்கும். மாலையில் நன்றாக இருந்தால் காலையில் மந்தமாக போகும். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். புரோக்கரேஜ், கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் உண்டாகும். வியாபாரத்தை விரிவுப்படுத்த கடன் உதவிகள் கிடைக்கும். பங்குதாரர்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் சிலர் உங்களிடம் ஆலோசனைக் கேட்டு விட்டு அதை தாங்கள் யோசித்ததாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் நல்ல பெயர் வாங்கிக் கொள்வார்கள். உங்கள் திறமைகளை நேரடியாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் கொண்டு செல்ல மறுப்பார்கள். வேலைச்சுமை இருக்கும். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்துப் போகும். 
 
கன்னிப் பெண்களே! இன்டெர்நெட்டில் அதிக நேரம் அமர வேண்டாம். இரவில் அதிக நேரம் விழித்துக் கொண்டிருக்காதீர்கள். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். திருமணம் தாமதமாகி முடியும். மாணவ-மாணவிகளே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள். கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள். 
 
இந்த சனி மாற்றம் சில நேரங்களில் உங்களை சூழ்நிலை கைதியாக மாற்றினாலும் அனுபவ அறிவாலும், சமயோஜித புத்தியாலும் பிரச்சனைகளை சமாளித்து சாதிக்க வைக்கும். 

பரிகாரம்:
கடலூர் மாவட்டம் ஓமாம்புலியூர் எனும் ஊரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீபிரணவ வியாக்ரபுரீஸ்வரரை உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சென்று வில்வார்ச்சனை செய்து நெய் தீபமேற்றி வணங்குங்கள். கை, கால் இழந்தவர்களுக்கு உதவுங்கள்.