தனுசு - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

Mahalakshmi| Last Updated: வெள்ளி, 14 நவம்பர் 2014 (15:15 IST)
தாராள மனசுக் கொண்ட நீங்கள், பேச்சால் சாதிப்பதில் வல்லவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து உங்களுக்கு ஓரளவு பணப்புழக்கத்தையும், அந்தஸ்தையும் பெற்று தந்த சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் விரையச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் இருப்பதால் நீங்கள் எதிலும் முன்எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது. சனி பகவான் உங்களுக்கு தனாதிபதியாகவும், தைரிய ஸ்தானாதிபதியாகவும் இருப்பதால் ஏழரைச் சனியால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும்.

ராசிக்கு 12-ல் சனி மறைவதால் உங்களுடைய அடிப்படை நடத்தைக் கோலங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள். கூடாப்பழக்க வழக்கம் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இழுபறியாக இருந்த வேலைகளெல்லாம் விரைந்து முடியும். ஆனால் செலவுகளை சுருக்கப்பாருங்கள். உறவினர், நண்பர்களுக்கு மத்தியில் நம் கௌரவம் என்னாவது என்று பெருமைக்காக கைக்காசை கரைக்காதீர்கள். ஏழரைச் சனி தொடங்குகிறதே! என்று பதற வேண்டாம்.

இதுவரை லாப வீட்டில் நின்று கொண்டு உங்கள் ராசியைப் பார்த்த சனிபகவான் இனந்தெரியாத கவலைகளையும், வீண் பயத்தையும் தந்தாரே! எந்த வேலைகளை தொட்டாலும் முழுமையாக முடிக்கவிடாமல் தடுத்து நிறுத்தினரே! குடும்பத்திலும் சிறு வார்த்தைகள் பேசினாலும் பெரிய தகராறில் போய் முடிந்ததே! ஆனால் தற்சமயம் விரைய வீட்டில் வந்தமரும் சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார். இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால் உங்கள் பேச்சில் முதிர்ச்சி வெளிப்படும். கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தாம்பத்யம் இனிக்கும். பிள்ளைகளிடம் மறைந்துக் கிடக்கும் திறமைகளை இனங்கண்டறிந்து வளர்ப்பீர்கள்.

ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். வீடு மாற வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள். சிலர் வாஸ்துபடி வீட்டை சரி செய்வீர்கள். ஒரு சொத்தை விற்று பழைய பிரச்னைகள், சிக்கல்களை தீர்ப்பீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். அரசாங்க விஷயங்கள் சற்று தாமதமாகி முடியும். வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். என்றாலும் ஏழரைச் சனியின் தொடக்கமாகவும், விரையச் சனியாகவும் இருப்பதால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ, முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். அந்தரங்க விஷயங்களில், உள்விவகாரங்களில் மூன்றாம் நபர் தலையீட்டை தவிர்க்கப்பாருங்கள். உங்களிடம் இருக்கும் தவறான பழக்கங்களை மனைவி சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளபாருங்கள்.

எளிதாக முடித்து விடலாம் என நினைத்த காரியங்களைக் கூட போராடித் தான் முடிக்க வேண்டி வரும். வீண் அலைக்கழிப்புகள் அதிகமாகும். எதிர்காலம் பற்றிய பயம் வந்துப் போகும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். பழைய கடனை நினைத்து அவ்வப்போது குழம்புவீர்கள். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசத்தை நீங்களே செலவு செய்து முன்னின்று முடிப்பீர்கள். வாகனம் பழுதாகி சரியாகும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் முடிந்த வரை பேசி முடிக்கப்பாருங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :