ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2017 (13:51 IST)

ராகு & கேது பெயர்ச்சி பலன்கள் - மீனம்!

மற்றவர்களின் மன ஓட்டத்தை அறிவதில் வல்லவர்களே! உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
 
ராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு சமூக அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும் தந்ததுடன், வருமானத்தையும் உயர்த்திய ராகுபகவான்! இப்பொழுது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். குடும்பத்தில் இருந்த சச்சரவு ஒரளவு குறையும். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். ஆனாலும் புத்தி ஸ்தானமான 5-ம் வீட்டில் ராகு அமர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வர முடியுமோ, முடியாதோ என்ற தடுமாற்றம் வரும். 
 
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். சிலர் அவர்களின் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பூர்வீக சொத்துப் பிரச்னையை சுமூகமாக தீர்க்கப் பாருங்கள். கோர்ட், கேஸ் என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். உறவினர், நண்பர்கள் செய்த துரோகங்களையெல்லாம் நினைத்து கவலைப்பட்டு நிம்மதியை இழந்து விடாதீர்கள். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று காணிக்கையை செலுத்துவீர்கள். 
 
மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரை நன்கு விசாரிப்பது நல்லது. மகனின் அடிப்படை நடத்தைக் கோலங்கள் மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்கள் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே அவரின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். அக்கம்-பக்கம் விட்டாருடன் அனுசரனையாக நடந்துக் கொள்ளுங்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். அலைப்பேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். முன்யோசனையில்லாமல் அவசர முடிவுகள் எடுத்து பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். தாய், தாய் மாமன் வகையில் மனத்தாங்கல் வரும்.
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் சுக-சப்தமாதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.2017 முதல் 4.4.2018 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் வேலைச்சுமை இருக்கும். வாகனம் வாங்குவீர்கள். இடவசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். வேலைக் கிடைக்கும். மனைவியுடன் விவாதங்கள் வந்துப் போகும். சில நேரங்களில் வீட்டில் தாயா, தாரமா என்ற தடுமாற்றம் வரும். ஷேர் பணம் தரும். போட்டிகளில் ஜெயிப்பீர்கள்.  
 
5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகுபகவான் உங்களின் விரைய-லாபாதிபதியான சனிபகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். சமையலறையை நவீனமாக்குவீர்கள். தீடீர் பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாடு, வெளிமாநிலம் செல்ல விசா கிடைக்கும். மூத்த சகோதரர்களால் ஆதாயம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். 
 
உங்களின் ராசிநாதனும்-ஜுவனாதிபதியுமான குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல் 13.2.2019 முடிய ராகுபகவான் பயணிப்பதால் செல்வாக்குக் கூடும். பணப்புழக்கம் உண்டு. பெரிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆன்மிகவாதிகள், கல்வியாளர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடன் ஒன்று தீரும்.
 
மாணவ-மாணவிகளே! சமயோஜித புத்தியை பயன்படுத்தி முன்னேறப்பாருங்கள். விளையாட்டு, இசை, கட்டுரைப் போட்டிகளில் பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள். நல்ல நட்புச் சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். உயர்கல்விக்காக அயல்நாடு செல்ல வேண்டி வரும். 
 
கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட கால கனவுகளில் ஒன்று நிறைவேறும். வெளிமாநிலத்தில் வேலைக் கிடைக்கும். பள்ளிக் கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். பெற்றோர் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். 
 
அரசியல்வாதிகளே! சபை நாகரிகம் அறிந்து பேசுங்கள். தலைமையுடன் விவாதம் வேண்டாம். கௌரவப் பதவி உண்டு. சகாக்களை அடக்கி வாசிக்க சொல்லுங்கள்.
 
கலைத்துறையினரே! பரபரப்புடன் காணப்படுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வாய்ப்புகள் வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். 
 
வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு என்றாலும் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நட்டப்படாதீர்கள். சந்தை நிலவரத்தை கவனத்தில் கொண்டு புது முதலீடு செய்யுங்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துக் கொள்வார்கள். ஹோட்டல், துணி, ஸ்டேஷனரி, புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்களிடம் நீங்கள் வளைந்துக் கொடுக்க வேண்டி வரும். 
 
உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். என்றாலும் ஒருபக்கம் வேலைச்சுமை இருந்தாலும் மறுபக்கம் மூத்த அதிகாரிகளின் பாராட்டால் உற்சாகமடைவீர்கள். சக ஊழியர்களில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களின் மனசு மாறும். இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள்.
 
கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு பனிரெண்டாம் வீட்டில் அமர்ந்து பயணங்களால் அலைச்சல்களையும், சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவினங்களையும், மனஇறுக்கத்தையும் தந்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றில் வந்தமருகிறார். பணப்புழக்கம் அதிகரிக்கும். அவசரத்திற்கு கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சிலர் சொந்த தொழில் தொடங்குவீர்கள். 
 
விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். கோவில் விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். புது பொறுப்புகள், பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை புரிந்துக் கொள்வீர்கள். வீரியத்தை விட காரியம் தான் முக்கிய என்பதை உணர்வீர்கள். கோபத்தை குறைத்துக் கொள்வீர்கள்.   
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
27.7.2017 முதல் 29.11.2017 வரை உங்களின் தன-பாக்யாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேதுபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் திடீர் யோகம் உண்டாகும். பணவரவு உண்டு. பழுதாகியிருந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வீடு மாறுவீர்கள். விலகியிருந்த உறவினர்கள், சகோதரங்கள் விரும்பி வருவார்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். 
 
  உங்களின் பூர்வ புண்யாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் குழந்தை பாக்யம் உண்டு. பூர்வீக சொத்து கைக்கு வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். வேலைக் கிடைக்கும். உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்தி நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். 
 
  7.08.2018 முதல் 13.2.2019 வரை உங்களின் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் வழக்கில் வெற்றி கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வெளிமாநிலத்தில் வேலைக் கிடைக்கும். 
 
வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்துவிடாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். லாபம் இரட்டிப்பாகும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேருவார்கள். கடையை பிரபலமான இடத்திற்கு மாற்றவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். இங்கிதமாகப் பேசி சக ஊழியர்களின் குறை, நிறைகளை சரி செய்வீர்கள். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும்.    
 
  இந்த ராகு-கேது மாற்றத்தில் ராகுவால் மனநிம்மதியற்றப் போக்கு ஏற்பட்டாலும் கேதுவின் அனுக்கிரகத்தால் நினைத்ததை முடிக்கும் வல்லமை உண்டாகும்.
 
பரிகாரம்
 
கும்பகோணத்திலிருந்து 9 கி.மி தொலைவிலுள்ள திருநாகேஸ்வரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகிரிகுஜாம்பிகை உடனுறை ஸ்ரீநாகநாத சுவாமியை வணங்குங்கள். பார்வையிழந்தவர்களுக்கு உதவுங்கள்.