செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2017 (12:45 IST)

ராகு & கேது பெயர்ச்சி பலன்கள் - தனுசு!

உயர்ந்த லட்சியங்களுடன் வாழ்பவர்களே! உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார் என்பதை பார்ப்போம்.
 
ராகுவின் பலன்கள்
 
  இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து கொண்டு கிடைக்கின்ற வாய்ப்புகளையெல்லாம் தட்டிவிட்டதுடன், உங்களுக்கும் உங்கள் தகப்பனாருக்கும் இடைவெளியை ஏற்படுத்தி, கையில் ஒரு காசுக் கூட தங்கவிடாமல் துடைத்தெடுத்த ராகு பகவான் இப்பொழுது எட்டில் சென்று மறைகிறார். ராகு எட்டில் மறைவதால் அல்லல் பட்ட உங்கள் மனம் இனி அமைதியாகும். இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் இனி ஒவ்வொன்றாக முடியும். தந்தையின் ஆரோக்யம் சீராகும். 
 
பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். என்றாலும் 8-ல் ராகு நுழைவதால் எதிலும் திட்டமிட்டு செயல்படப்பாருங்கள். பயணங்கள் அதிகமாகும். இடமாற்றமும் இருக்கும். அயல்நாடு சென்று வருவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகளால் திணறுவீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைக்கூர்ந்து குடும்பத்தில் உள்ளவர்களை வசைப்பாடிக் கொண்டிருக்காதீர்கள். கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். 
 
பிள்ளைகளுக்கு அதிக அறிவுரைச் சொல்லி நெருக்கடிக்குள்ளாக்காதீர்கள். வாகனத்திற்கான லைசன்ஸ், இன்சூரன்சை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்க தவறாதீர்கள். அபராதம் கட்ட வேண்டி வரும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். உறவினர், நண்பர்கள் வீட்டு உள்விவகாரங்களில் அதிகம் மூக்கை நுழைக்க வேண்டாம். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் யார் உண்மையானவர்கள், யார் போலியானவர்கள் என்பதை கண்டுபிடிப்பதில் ஒரு தடுமாற்றம் இருக்கும். திடீர் திடீரென்று ஒருவித மனோபயம் வந்துப் போகும். 
 
"என்ன வாழ்க்கை இது, செக்கு மாட்டு வாழ்க்கை என்றெல்லாம் புலம்புவீர்கள். அவ்வப்போது ஒரு வெறுமையை உணருவீர்கள். பொய்யான விளம்பரத்தை கண்டு ஏமாறாதீர்கள். ரிசர்வு வங்கியின் அனுமதிப் பெறாத ஃபைனான்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்ய வேண்டாம். வட்டிக்கு ஆசைப்பட்டு இருப்பதை இழந்துவிடாதீர்கள். சட்டத்திற்கு எதிராக செயல்பட வேண்டாம். அவ்வப்போது நேர்மறை எண்ணங்களை உள்வளர்த்துக் கொள்வது நல்லது. 
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் சப்தம-ஜுவனாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.2017 முதல் 4.4.2018 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புது வேலை அமையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்துக் கொண்டே இருக்கும்.  
 
   5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகுபகவான் உங்களின் தன-திருதியாதிபதியுமான சனிபகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி தங்கும். ஆபரணங்கள் சேரும். புது வாகனம் வாங்குவீர்கள். இளைய சகோதரர் உதவுவார். வழக்கு சாதகமாகும். நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும்.
 
உங்கள் ராசியாதிபதியும்-சுகாதிபதியுமான குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல் 13.2.2019 முடிய ராகுபகவான் பயணிப்பதால் சோர்ந்து கிடந்த உங்கள் முகம் மலரும். அழகு, ஆரோக்யம கூடும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். குழந்தை பாக்யம் உண்டாகும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆனால் தாயாருக்கு மூட்டு வலி, அசதி, சோர்வு வந்து விலகும். 
 
   மாணவ-மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிக்கத் தவறாதீர்கள். விருப்பப்பட்ட கோர்ஸில் சேர சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும். இயற்பியல், கணக்குப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள்.  
 
கன்னிப்பெண்களே! காதல் கண்ணாம்பூச்சியெல்லாம் வேண்டாம். எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீர்கள். தடைபட்ட கல்யாணம் கூடி வரும். புதிய நண்பர்களை நம்பாதீர்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள்.  
 
அரசியல்வாதிகளே! பொதுக் கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். தலைமை உங்களை முழுமையாக ஆதரிக்கும். தொகுதி மக்களை பணிவாக அணுகுங்கள். உங்களின் நெருங்கிய சகாக்களை புதியவர்களிடம் அறிமுகப்படுத்தாதீர்கள்.  
 
கலைத்துறையினரே! சுய விளம்பரத்தை விட்டு விட்டு யதார்த்தமான படைப்புகளை தரப்பாருங்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மூத்த கலைஞர்களால் உதவிகள் உண்டு.
 
  வியாபாரத்தில் மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று பெரிய முதலீடுகளைப் போட்டு நட்டப்படாதீர்கள். இருப்பதை வைத்து பெருக்கப் பாருங்கள். பழைய பாக்கிகளை கொஞ்சம் போராடித் தான் வசூலிக்க நேரிடும். கமிசன், ஷேர், புரோக்கரேஜ் வகைகளால் முன்னேற்றம் உண்டு. வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசுங்கள். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டுத்தானே இருந்தார்கள். இனி உங்களின் நிர்வாகத்திறனை அறிந்து அனுசரனையாக நடந்து கொள்வார்கள். 
 
உத்யோகத்தில் தொல்லை தந்த மேலதிகாரியே இனி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அவரின் சொந்த விஷயங்களில் தலையிடுமளவிற்கு நெருக்கமாவீர்கள். இழந்த சலுகையை மீண்டும் பெறுவீர்கள். 
 
கேதுவின் பலன்கள்:
 
  இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்து கொண்டு மன தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் கொடுத்து வந்த கேது பகவான் இப்போது ராசிக்கு இரண்டாவது வீட்டில் நுழைகிறார். இனி சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். ஆனால் சில நேரங்களில் அந்தப் பேச்சாலேயே பிரச்னைகளிலும், வீண் வம்புகளிலும் சிக்கிக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் முடிந்த வரை வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கப்பாருங்கள். 
 
பல் வலி, பார்வைக் கோளாறு, கணுக்கால் வந்து நீங்கும். அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சிலர் மூக்கு கண்ணாடி அணிய வேண்டி வரும். கோவிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். முடிந்த வரை அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். 
 
நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. வழக்குகளில் அலட்சியப் போக்கு வேண்டாம். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுங்கள். வறட்டு கவுரவத்திற்கும், போலி புகழ்ச்சிக்கும் மயங்காதீர்கள். தேடிக் கொண்டிருந்த தொலைந்துப் போன பழைய ஆவணம் ஒன்று கிடைக்கும். குடும்பத்தினரை அனுசரித்துப் போவது நல்லது. கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். 
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
27.7.2017 முதல் 29.11.2017 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும்-விரையாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேதுபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் மதிப்பு, மரியாதைக் கூடும். பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும். அரசால் ஆதாயமடைவீர்கள். திடீர் பணவரவு உண்டு. பழைய கடனைத் தீர்க்க புது உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் அலைச்சலும், செலவுகளும் வந்துப் போகும்.
 
உங்களின் அஷ்டமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியிட வேண்டாம். யாரையும் விமர்சித்து பேசாதீர்கள். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை இரவல் தர வேண்டாம். பணப்பற்றாக்குறை நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நல்லது. வேலைக் கிடைக்கும்.
 
   உங்களின் பாக்யாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 07.08.2018 முதல் 13.02.2019 வரை கேது செல்வதால் வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். திருமணம் கூடி வரும். புது மனைப் புகுவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். பாகனப் பிரிவினை சுமுகமாகும். 
 
   வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வெடிக்கும். புது ஏஜென்சி எடுப்பது குறித்து யோசிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். நிறுவனத்தின் சார்ப்பாக அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சக ஊழியர்களில் ஒருசாரர் உங்களுக்கு ஆதரவாகவும், மற்றொரு சாரர் உங்களுக்கு எதிராகவும் செயல்பட வாய்ப்பிருக்கிறது. 
 
  இந்த ராகு கேது மாற்றம் புதிய படிப்பினைகளை தருவதுடன், நாசூக்காக நடந்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் புரிந்துக் கொள்ள வைக்கும்.
 
பரிகாரம்:
 
மாயவரம்-பேரளம் அருகிலுள்ள திருப்பாம்புரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீவண்டுசேர்க்குழலி உடனுறை ஸ்ரீசேஷபுரீஸ்வரரை வணங்குங்கள். காலில்லாதவர்களுக்கு உதவுங்கள்.