ராகு & கேது பெயர்ச்சி பலன்கள் - துலாம்!

Abimukatheesh| Last Updated: வெள்ளி, 28 ஜூலை 2017 (12:24 IST)
அன்பின் அடையாளமாக இருப்பவர்களே! உங்களுக்கு 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:
 
     இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராம் வீட்டான லாப வீட்டில் அமர்ந்துக் கொண்டு திடீர் பணவரவு, வீடு, வாகன வசதிகள் என பல வகையிலும் முன்னேற்றம் தந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் வந்தமர்வதால் சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள் இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். உங்களுடைய நிர்வாகத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவுகள் நீங்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். 
 
பழைய கடனில் ஒருபகுதியை அடைக்கும் அளவிற்கு பணவரவு உண்டு. இந்த ராகு சுயமாக சிந்திக்க வைப்பதுடன், சுயமாக தொழில் செய்யும் வல்லமையையும் கொடுப்பார். சிலர் செய்துக் கொண்டிருக்கும் தொழிலுடன் வேறு சில வியாபாரமும் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். உங்களிடமிருந்த பய உணர்வு, தடுமாற்றம் எல்லாம் நீங்கும். குடும்ப வருமானம் உயரும். உங்களின் நல்ல மனசை புரிந்து கொண்டு சிலர் உங்களுக்கு உதவுவார்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குலதெய்வக் கோவிலுக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். 
 
வீண் அலைச்சலும், திடீர்ப் பயணங்களும் உங்களை பலவீனமாக்கியதே! இனி திட்டமிட்டு எதையும் செய்வீர்கள். ராசிக்கு 10-ல் ராகு வருவதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்ப்பதால் இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற டென்ஷன் இருந்துக் கொண்டேயிருக்கும். உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள் வரும். கௌரவக் குறைவான சம்பவங்கள் ஒன்றிரண்டு நிகழக்கூடும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டி வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். திறமை இருந்தும், கடினமாக உழைத்தும் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டேயிருப்பீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.    
 
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் பாக்யஸ்தானாதிபதியும்-விரையாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.2017 முதல் 4.4.2018 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உறவினர்கள் மத்தியிலிருந்த கசப்புணர்வுகள் நீங்கும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். அலர்ஜி, யூரினரி இன்பெக்ஷன், தூக்கமின்மை வரக்கூடும்.         
 
   5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகுபகவான் உங்களின் சுக-பூர்வபுண்யாதிபதியுமான சனிபகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் பிள்ளைகளால் அந்தஸ்து ஒருபடி உயரும். வீடு, மனை, வாகனம் புதிதாக வாங்குவீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தாயாருக்கு மூச்சுப்பிடிப்பு, முதுகுத் தண்டில் வலி வந்துப் போகும். புறநகர் பகுதியில் வீட்டு மனை வாங்கியிருந்தால் நேரில் சென்று அவ்வப்போது கண்காணித்து வருவது நல்லது. ஏனெனில் வேறு சிலர் உரிமைக் கொண்டாட வாய்ப்பிருக்கிறது. 
 
உங்களின் சஷ்டம-திருதியாதிபதியுமான குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல் 13.2.2019 முடிய ராகுபகவான் பயணிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாகனத்தில் செல்லும் போது மறவாமல் தலைக்கவசம் அணிந்துச் செல்வது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி பெரிய காரியங்களில் இறங்க வேண்டாம். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வந்தாலும் பாசம் குறையாது. 
 
மாணவ-மாணவிகளே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும். அவ்வப்போது தூக்கம், மந்தம், மறதி வந்து நீங்கும். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி பெற போராடியும், அதிக செலவு செய்தும் சேர வேண்டி வரும். 
 
   கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களால் உங்கள் பிரச்னைகள் பாதியாகக் குறையும். தாயாரை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள். காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். யதார்த்தமாகவும், விளையாட்டாகவும் நீங்கள் எதையோ சொல்லப் போய் அதை சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. கல்யாண பேச்சு வார்த்தைகள் கொஞ்சம் தாமதமாக முடியும். அண்டை மாநிலம், அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். கல்யாணம் கூடி வரும்.       
 
அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டம் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சாதாரண மக்களின் நாடித் துடிப்பை கண்டறிந்து அதற்கேற்ப உங்களுடைய செயல் திட்டத்தை நீங்கள் அமைத்துக் கொள்ளுங்கள். உங்களின் நெருங்கிய சகாக்களை புதியவர்களிடம் அறிமுகப்படுத்தாதீர்கள்.   
 
கலைத்துறையினரே! திரையிடாமல் தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்பு இப்போது வெளி வரும். கிசுகிசுத் தொந்தரவுகளும், விமர்சனங்களும் அதிகமாகும். சம்பள பாக்கியைப் போராடிப் பெறுவீர்கள். 
 
    வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். வேலையாட்களால் சின்ன சின்ன நட்டங்களும், ஏமாற்றங்களும் வரும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற அதிகம் உழைக்க வேண்டி வரும். துரித உணவகம், நிலக்கரி, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் அவ்வப்போது புலம்பினாலும் ஒத்துழைப்பார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். புது இடத்திற்கு கடையை மாற்றுவது குறித்து யோசிப்பீர்கள். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து ஏமாற வேண்டாம். 
 
ராகு 10-ம் வீடான உத்யோகஸ்தானத்தில் அமர்வதால் உத்யோகத்தில் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற அச்சம் இருந்துக் கொண்டேயிருக்கும். மூத்த அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். சிலர் தங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள உங்களை மட்டம் தட்டி மேலிடத்தில் சொல்லி வைப்பார்கள். வேலையை விட்டு விடலாமா என்ற எண்ணங்கள் வரக்கூடும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். சக ஊழியர்களால் பிரச்னைகள் வெடிக்கும். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாகும்.  
 
கேதுவின் பலன்கள்:
 
இதுவரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்துக் கொண்டு எதையுமே சிந்திக்க விடாமல் மூளையை மழுங்கடித்ததுடன், உறவினர்களுடன் விரிசல் போக்கையும் ஏற்படுத்தி, பல கசப்பான அனுபவங்களையும் தந்த கேதுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்வதால் இனி எதிலும் தெளிவுப் பிறக்கும். குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பதில் இருந்து வந்த தயக்கம், தடுமாற்றங்களெல்லாம் நீங்கும். வேற்றுமதத்தவர்கள், அண்டை மாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். 
 
மகளுக்கு திருமணம் முடிப்பீர்கள். மகன் கூடா நட்பிலிருந்து விடுபடுவார். பூர்வீக சொத்து கைக்கு வரும். நெடுநாட்களாக தடைபட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். என்றாலும் கேது 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு பார்வைக் கோளாறு, சர்க்கரை நோய், நெஞ்சு எரிச்சல், சிறு அறுவை சிகிச்சைகளெல்லாம் வந்துப் போகும். அவருடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் வாங்கி வீடு கட்டுவது நல்லது. சிலர் வீடு மாற வேண்டிய சூழல் உருவாகும். வாடகை வீட்டிலிருப்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர்களால் பிரச்னைகள் வரக்கூடும். 
 
மின்சாரம், நக வெட்டி, கத்திரி கோல் இவற்றையெல்லாம் கவனமாக கையாளுங்கள். சொத்து வாங்கும் போது தாய் பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. சொத்தை விற்பாக இருந்தால் ஒரே தவணையில் பணம் பெற்றுக் கொள்வது நல்லது. ஏனெனில் சிலர் ஏமாற்ற வாய்ப்பிருக்கிறது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். சிலர் இருக்கும் ஊரிலிருந்து, மாநிலத்திலிருந்து வேறு ஊர், மாநிலம் செல்ல வேண்டிய அமைப்பு உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பசியின்மை, இரத்த அழுத்தம், வயிற்றுப் புண் வரக்கூடும்.    
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
27.7.2017 முதல் 29.11.2017 வரை உங்களின் தன-சப்தமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேதுபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். ஆனால் மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, கருச் சிதைவு, இரும்புச் சத்துக் குறைப்பாடுகளெல்லாம் வந்துச் செல்லும். சகோதரங்களுடன் வீண் விவாதங்கள் வரக்கூடும். வீடு, மனை வாங்குவது விற்பதில் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள்.
 
உங்களின் ஜுவனாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் சவாலான காரியங்களையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வேலைக் கிடைக்கும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். ஷேர் லாபம் தரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். எதிர்வீட்டுக்காரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபம், பணத்தட்டுப்பாடு, முகத்தில் பரு, தேமல் வந்துச் செல்லும்.   
 
7.08.2018 முதல் 13.2.2019 வரை உங்களின் லாபாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். மூத்த சகோதரங்களால் பலனடைவீர்கள். வீண் வதந்திகளும் வரத்தான் செய்யும். பணம் கொடுக்கல்-வாங்கலில் நிதானம் தேவை. வங்கிக் காசோலைகளை கவனமாக கையாளுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகி முடியும்.  
 
    வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். புது முதலீடுகளை தவிர்க்கவும். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். தொழில் ரகசியங்கள் கசியக் கூடும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரமோ, பாராட்டுகளோ இல்லையேயென புலம்புவீர்கள். உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்துக் கொள்வார்கள். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். உங்கள் மீது சிலர் அவதூறு வழக்கு தொடுக்க வாய்ப்பிருக்கிறது. 
 
   இந்த ராகு-கேது மாற்றம் உங்களை ஓய்வின்றி பரபரப்பாக செயல்பட வைத்தாலும், சகிப்புத் தன்மையாலும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையாலும் ஒரளவு முன்னேற்றம் தருவதாக அமையும். 
 
பரிகாரம்
 
திருநெல்வேலியிலிருந்து புன்னைக்காயல் செல்லும் வழியிலுள்ள சேர்ந்த பூமங்கலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசிவகாமியம்மை உடனுறை ஸ்ரீகயிலாசநாதரை சென்று வணங்குங்கள். வாய் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :